துப்பாக்கிகள் கேட்கும் 20 எதிரணி எம்.பி.க்கள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக தங்களுக்கு துப்பாக்கிகளை வழங்குமாறு 20 எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி, பாராளுமன்ற குழு தலைவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாகவும் இந்தகோரிக்கைகள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து பொலிஸ் மா அதிபர் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து, சபாநாயகர் மற்றும் காவல்துறை மா இருவரும் பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் துப்பாக்கிகளை வழங்குவது ஆராய்வதாகவும் கூறியுள்ளனர்.
இருப்பினும், பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் துப்பாக்கிகளை வழங்குவது குறித்து முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
தற்போதுள்ள அச்சுறுத்தல்களை பகுப்பாய்வு செய்த பிறகு துப்பாக்கிகளை வழங்குவது குறித்து தீர்மானம் எடுக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விடயம் குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரதெரிவிக்கையில், தங்களுடைய பாதுகாப்புக்காக துப்பாக்கிகளை வழங்குமாறு சபாநாயகரிடம் கோரவுள்ளதாக சில உறுப்பினர்கள் கூறியதாக தெரிவித்தார்.
எனினும் அந்தக் கோரிக்கை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
எனினும் நாட்டின் தேசிய மற்றும் பொது மக்களின் பாதுகாப்புகளுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. அதேபோன்று, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவ்வாறான அச்சுறுத்தல்கள் இல்லை என்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
எனினும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் இருந்தால் மாத்திரமே துப்பாக்கிகளை வழங்க வேண்டும்.ஆனால், இதுவரை அவ்வறான நிலைமை இல்லாத காரணத்தினால் துப்பாக்கிகளை வழங்குதற்கான தேவையில்லை என்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
![]()