கவிதைகள்

“அன்புள்ள கவிப்பேரசு வைரமுத்துவுக்கு” …. கவிதை… கவிப்புயல் சரண். (Video)

புலம் பெயர்ந்து இருக்கிறேன்
யாழ்ப்பாணம் வந்த
உங்களோடும் தமிழோடும்
உரையாட விழைகிறேன்

நாங்கள் விளையாடிய
வீதிகளை நாளும்
வீடியோவில் பார்க்கிறோம்.
ஆனால் நாங்கள் ஆடிய போர்க் களங்கள் என்னாயிற்று?

சாவகச்சேரி சௌக்கியம் தான்
நாங்கள் சாவுக்கு கச்சேரி
அடித்த இடம் சௌக்கியமா?

பருத்தித்துறை சௌக்கியம் தான்
நாம் பங்கர் வெட்டி வளர்ந்த பனை மரங்கள் சௌக்கியமா?

முகமாலை நலம் தான்
புலி வீரம் முகிழ்த்து நின்ற முன்னரங்கு நலமா?

புத்தூர் சௌக்கியம் தான்
எம் புலி பாய்ந்த பூவரசம்
வேலிகள் சௌக்கியமா?

விதைகளும் தியாகங்களும்
என்றைக்கும் வீணாவதில்லை;
ஒருநாள் முளைத்தே தீரும்”
என்று பேசினீர்களாமே

கண்ணீர் ததும்பக்
கரவொலி செய்தார்களாய் கேள்வி?

முளைகளை கருக்கும் போதும் விதைகளை புதைக்கும் போதும்
கொல்லாதே …
கருக்காதே..
புதைக்காதே..
என்றிருந்தால் கரவொலி என்ன
கட்டியே அணைத்து இருப்போம்…

கந்தகம் உடல் ஏற்றும் நேரம்
கைகளை கட்டி விட்டு
இப்போ கவணுக்கு கல் சேருங்கள் என்றால் எங்கே மீண்டும் தாவீது காலத்திற்கா????

கவிப்புயல் சரண்.

—— —— —- ——- —–

“யாழ்ப்பாணத்தில் நிற்கிறேன்;
புலம்பெயர்ந்த
உலகத் தமிழர்களோடு
உரையாட விழைகிறேன்
நீங்கள் விளையாடிய
வீதிகள் நலம்;
குடைபிடிக்கும்
வேப்ப மரங்கள் நலம்
சாவகச் சேரி சௌக்கியம்;
நீங்கள் சௌக்கியமா?
பருத்தித்துறை சௌக்கியம்;
உங்கள் பாச உறவுகள்
சௌக்கியமா?
முகமாலை நலம்;
உங்கள் முன்னோடிகள் நலமா?
புத்தூர் சௌக்கியம்;
உங்கள் பிள்ளைகள் சௌக்கியமா?
உங்கள்
தலைமுறை வரைக்கும்
தமிழ் ஈழத்தின்மீது
உங்களுக்கு தாகம் இருக்கும்
உங்கள் பிள்ளைகளுக்கும்
அதேதாகம் வேண்டுமாயின்
அவர்களையும்
தமிழ்படிக்கச் செய்யுங்கள்
மண்ணும் மொழியும்
கண்ணும் உயிரும்
என்று கற்றுக்கொடுங்கள்
விதைகளும் தியாகங்களும்
என்றைக்கும் வீணாவதில்லை;
ஒருநாள் முளைத்தே தீரும்”
என்று பேசினேன்
கண்ணீர் ததும்பக்
கரவொலி செய்தார்கள்…….
கவிப்பேரசு வைரமுத்து.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *