பலதும் பத்தும்

விண்வெளி ஆதிக்கத்தில் சீனா முந்துகிறதா?

இன்றைய விண்வெளி ஆதிக்கப் போட்டியில் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தைப் பிடித்திருக்கும் சீனா, அமெரிக்காவை முந்தி முதலிடத்தைப் பிடிக்க விழைகிறது!

இரண்டு பிரம்மாண்டமான சாட்டிலைட்டுகளின் தொகுதியை விண்ணிலே அமைத்து வணிகத்தில் முன்னணியில் வந்து உலகத்தின் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி முதல் சக்தியாக ஆக சீனா திட்டம் போடுகிறது!

இது மட்டுமல்ல, அமெரிக்க ராணுவத்திற்குப் போட்டியாக ராணுவத்திற்கான சாட்டிலைட்டுகளையும் விண்ணில் ஏவி ராணுவத்திலும் முதலிடத்தை அடையப் பார்க்கிறது சீனா.

இப்போது சீன ஒரு புது விண்வெளிக் கொள்கையை வெளியிட்டிருக்கிறது. இதன்படி பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் பல வணிக மேம்பாட்டிற்கான விண்கலங்கள் செலுத்தப்படும்.

2025 ஜனவரியில் டீப் சீக் (DEEP SEEK) என்ற செயற்கை நுண்ணறிவினால் உலகையே பிரமிக்க வைத்தது சீனா.

‘சீனா டெய்லி’ என்ற சீனப் பத்திரிகை மிகுந்த கர்வத்துடன் இந்த டீப் சீக்கினால் அமெரிக்க கர்வத்தை ஒரேயடியாக நொறுக்கி விட்டோம் என்று பெருமை பேசிக் கட்டுரைகளை வெளியிட்டது.

ஒரு பேரிடர் நிகழும் போது இப்போது முதலில் உதவிக்கு வருவது சாட்டிலைட்தான். 2025ல் ஜனவரி 7ம் தேதி திபெத்தில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அதன் மாக்னிட்யூட் அளவு 7.1.

400 பேர்கள் இறந்தனர். பூகம்பம் நிகழ்ந்த சில நொடிகளிலேயே சீன அரசு உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தது. எட்டு சாட்டிலைட்டுகள் பூகம்பம் நிகழ்ந்த இடத்தை ஆய்வு செய்தன. உலகின் இதர பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்ட கிராமங்களுக்கு உடனடியாக சாலைகள் போடப்பட்டு தகவல் தொடர்பும் போக்குவரத்தும் சீரமைக்கப்பட்டன.

1970ல் தனது முதல் சாட்டிலைட்டை விண்ணில் ஏவியது சீனா. பிறகு 40 வருடங்களில் வருடத்திற்கு மூன்று என்ற எண்ணிக்கையில் 131 சாட்டிலைட்டுகளை விண்ணில் ஏவியது. ஆனால் 2021ம் ஆண்டிலிருந்து வருடத்திற்கு சுமார் 100 சாட்டிலைட்டுகளை விண்ணில் ஏவி சாதனை படைத்திருக்கிறது. ஆக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீன சாட்டிலைட்டுகள் இப்போது விண்ணில் சுற்றுகின்றன!

விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்புவதில் தீவிரம் காட்டுகிறது சீனா. சந்திரனின் மறுபக்கத்திலிருந்து மாதிரிகளை பூமிக்குக் கொண்டு வந்த ஒரே நாடு சீனா தான். இப்போது சந்திரனைத் தவிர செவ்வாய் மீதும் தன் பார்வையைச் செலுத்தி இருக்கிறது சீனா.

ஏராளமான சீன கம்பெனிகள் சாட்டிலைட்டுகளைத் தயார் செய்வதில் தீவிரம் காட்டுகின்றன.

2030ல் சீனா சந்திரனுக்கு விண்வெளி வீரரை அனுப்பும் என்று 2023ம் ஆண்டு சீன அரசு அறிவித்தது. சோதனை ஓட்டங்கள் 2027ல் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button