கவிதைகள்

என் கண்மணியே!…. கவிதை… சி.ரஞ்சிதா

புகழ் ஓவியன் தூரிகையில்
அரும்பிய ஓவியம் நீயே!

சிற்பியின் கைவண்ணம்
வெற்றி வாகை சூடிய

ஒப்பிலா சிற்பம் நீயே!
அமாவாசை இருளை அகற்றும்

நிலவின் ஒளி நீயே!
இருவர் காதலில் கலந்து

உதித்த மா காவியம் நீயே!
சிப்பிக்குள் முத்து போல

என்னுள் இருந்து உருவாகிய
அற்புத சிருஷ்டியாய்

எம் பெயர் நினைவூட்டிட
வந்த பேசும் அஞ்சுகமே!

அம்மா என்றிடாமல் ‘மா’ என
ஒலித்திடும் உன் குரலோசை

அது குயிலின் ஓசை
அல்லவோ எனக்கு…!

மலர் தம் மலர்ச்சியை
ஒத்த

உன் குறுநகையிலே அழகாகிறது
எங்கள் வாழ்க்கைப் பூங்கா!

நித்தம் நீ செய்யும் குறும்புகளை
முத்தமிட்டு ரசித்திடுவேன்

உன் புன்முறுவலிலே
அமுது ஊட்டிடும் வேளையில்

அதரம் அசைந்திடும் லாவகமோ
இதழ் விரியும் ரோஜாக்களை
நினைவூட்டுகிறது !

உன் கன்னக்குழிகள்
காண்பவர் அடைக்களமாகிடும்
அன்பின் இருப்பிடம் தானே!

பஞ்சுக் கைகள் நீட்டி
எம்மை ஆள வந்த
அரசே!

உன் கவின் காண
இரு நயனங்கள் போதுமோ…!

அன்னை நான் அருந்தவம்
செய்து ஈன்றெடுத்த அன்பு
புதல்வனே!

கண்மணியே!
ஊர் கண் படராமல்
என் இரு விழி

காவல் அரணாகக்
காத்திடுவேன் என்
ஆயுள் வரை உன்னையே…!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *