முச்சந்தி

இலங்கைத் தீவில் தமிழருக்கு நீதி இல்லை; அநுரவின் யாழ். விஜயம் உறுதிப்படுத்தியது 

இலங்கைத் தீவில் தமிழருக்கு நீதி இல்லை என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் யாழ். விஜயம் உறுதிப்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

செம்மணிப் பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வன்மம் நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்வதற்கு முன்னதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி அநுர, செம்மணியை பார்வையிடாமல் சென்றது பௌத்த சிங்கள பேரினவாத ஆட்சியின் வடிவமாகவே பார்க்க வேண்டியுள்ளது.70 வருடங்களாக ஆட்சி செய்த அரசாங்கங்கள் எதை செய்தார்களோ அவற்றையே ஜேவிபி என்கின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போதைய ஆட்சியிலும் பின்பற்றி வருகிறது.

இப்படிப்பட்ட அரசாங்கத்தின் தலைவராக இருக்கின்ற ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு எம்மில் சிலர் செம்மணி விவகாரத்தில் நீதி நிலைநாட்ட உதவ வேண்டுமென கடிதம் எழுதுவது முட்டாள்தனமான செயற்பாடு என தற்போது விளங்கியிருக்கும்.

ஆகவே, தமிழர் பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்வதே தீர்வுக்கு வழிவகுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *