பலதும் பத்தும்

சிறப்பாக இடம்பெற்ற மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பெருவிழா

வடமாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டு விவகாரங்கள் அலகின் அனுசரணையுடன், மன்னார் மாவட்டச் செயலகமும், மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பெருவிழா  (28) காலை 9:30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

மன்னார் பிரதான பாலத்தடியில் இருந்து விருந்தினர் வரவேற்பு மற்றும் பண்பாட்டுப் பேரணி ஆரம்பமானது.

சர்வமத தலைவர்கள் முன்னிலையில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கா.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண பண்பாட்டு விவகாரங்கள் அலகு பிரதிப் பணிப்பாளர் லாகினி நிருபராஜ், மன்னார் மாவட்ட மூத்த சட்டத்தரணி எம்.எம்.சபூர்தீன் உள்ளிட்ட அழைக்கப்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதன்போது, இசை, நடனம் மற்றும் கலாச்சார பண்பாடுகளைப் பிரதிபலிக்கும் நிகழ்வுகள் பிரதான பாலத்திலிருந்து மன்னார் நகரசபை மண்டபம் வரை ஊர்வலமாக நடைபெற்றன.

மன்னார் நகரசபை மண்டபத்தில் விருந்தினர்களுக்கு கும்ப ஆர்த்தி எடுக்கப்பட்டதுடன், தமிழ்த் தாய்க்கு மாலை அணிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நிகழ்வுகள் ஆரம்பமாகின. மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய பிரதேசச் செயலகங்களின் ஊடாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.

மேலும், “மன்னெழில் 3” நூல் விருந்தினர்களால் வைபவ ரீதியாக வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டதுடன், மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய ஐந்து பிரதேசச் செயலகப் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் திணைக்கள அதிகாரிகள், பணியாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button