முச்சந்தி

பாகிஸ்தானில் மீண்டும் ஆட்சி மாற்றம்?… அமெரிக்காவுடன் வலுக்கும் இராணுவ உறவு!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(பாகிஸ்தான் இராணுவ தளபதி அசிம் முனீர் இரண்டாவது முறையாகவும் அவர் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டதுடன் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இது பாகிஸ்தானில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் ஆழமான விவாதத்தை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற 1947ல் இருந்து, நான்கு முறை இராணுவ தளபதிகள் ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்திற்கு வந்துள்ளனர்)
பாரிய வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு, ஆட்சி மாற்றம் அல்லது ஆட்சி கவிழ்ப்பு என்ற செய்திகள் எல்லாம் இடிக்கு மேல் இடியாக வந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆட்சி மாற்ற செய்திகள் பாதிப்புற்ற மக்களுக்கு எந்தவிதமான ஆறுதலும் அளிக்கப் போவதில்லை என்பது திடமான உண்மையாகும்.
ஆட்சி மாற்றமா? ஆட்சி கவிழ்ப்பா ??
பாகிஸ்தானில் மீண்டும் இராணுவ ஆட்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்திய ஊடக பரப்பில் பல செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதற்கு வலுச்சேர்ப்பது போல, இராணுவத் தளபதி அசிம் முனிரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. குறிப்பாக அவரின் அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், அவருடன் நெருக்கமான உறவைப் பேணி வருகிறார்.
சில வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாகவும் அவர் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டதுடன் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இது பாகிஸ்தானில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் ஆழமான விவாதத்தை ஏற்படுத்தியது
பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற 1947ல் இருந்து, நான்கு முறை இராணுவ தளபதிகள் ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்திற்கு வந்துள்ளனர். தற்போது, பாகிஸ்தான் இராணுவ தளபதியாக அசிம் முனீர் உள்ளார்.
அசிம் முனீர் அதிகாரத்தை கைப்பற்ற கூடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அந்த நாட்டின் இராணுவ அதிகாரிகளுடனான அசிம் முனீரின் தொடர்பு, சீனாவுடனும் நெருக்கம் போன்ற காரணங்களால், ஷெபாஸ் ஷெரீப் அரசை கவிழ்த்துவிட்டு, அசிம் முனீர் அதிகாரத்தை கைப்பற்ற கூடும் என்ற தகவல் கசிந்துள்ளது.
அரசியலில் பாகிஸ்தான் இராணுவ தளபதி குதிக்கின்றார் என்று பல இந்திய ஊடகங்களில் செய்திகள் பலவலாக வெளியாகி உள்ளன.
பாகிஸ்தானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி அரசியலில் நுழையும் திட்டம் ஏதுமில்லை, அவை வதந்திகள் என அந்நாட்டின் இராணுவ தளபதி அசிம் முனீர் கூறியிருந்தாலும் , பாரிய வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த செய்தி ஆறுதல் அளிக்கப் போவதில்லை.
அரசியலில் பாகிஸ்தான் தளபதி:
கடவுள் என்னை இந்த நாட்டின் பாதுகாவலராக ஆக்கியுள்ளார். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறேன் என்பது புனையப்பட்டவை. பாகிஸ்தானை சீர்குலைக்க முயற்சிப்பவர்களால் இது போன்ற செய்தி பரப்பப்படுகிறது என்று, இராணுவ தளபதி அசிம் முனீர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாகிஸ்தான் அதிபரும் பிரதமரும் மாற்றப்படப் போவதாக வெளியாகும் செய்தியில் உண்மை இல்லை என்றும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
ஒப்ரேஷன் சிந்தூர் பின் அரசியல் மாற்றம் :
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஒப்ரேஷன் சிந்தூருக்குப் (Operation Sindur) பிறகு அந்நாட்டின் அரசியலில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஒப்ரேஷன் சிந்தூருக்குப் பிறகு உடனடியாக இராணுவத் தளபதி அசிம் முனிர் அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து சில வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாகவும் அவர் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார். இது பாகிஸ்தானில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் ஆழமான விவாதத்தை ஏற்படுத்தியது.
ஏற்கனவே, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கும் தளபதி அசிம் முனிருக்கும் இடையே கருத்து மோதல்கள் நிலவி வருவதாக செய்திகள் வெளியாகின. தற்போது, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கும் அசிம் முனிருக்கும் இடையேயும் மோதல் போக்கு நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த பின்னணியில், பாகிஸ்தானில் அதிபர் மற்றும் பிரதமரை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்தியா – ஆப்கானுக்கு எதிரான நிலை :
ஆட்சி மாற்றம் பற்றி பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனிர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஆனாலும் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இராணுவ தளபதி அசிம் முனிர் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் அமைதியை சீர்குலைக்க இந்தியா பினாமிகளைப் பயன்படுத்துகிறது. ஆப்கானியர்களுக்கு நாங்கள் பல ஆண்டுகளாக கருணையையும் சலுகைகளையும் காட்டினோம். ஆனால், அவர்கள் இந்தியாவுடன் இணைந்து எங்களுக்கு எதிராக சதி திட்டம் தீட்டுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
கடவுள் என்னை பாகிஸ்தான் நாட்டின் பாதுகாவலராக ஆக்கியுள்ளார். அதைத் தவிர வேறு எந்தப் பதவியையும் நான் விரும்பவில்லை. நான் ஒரு ராணுவ வீரன். எனது மிகப் பெரிய ஆசை நாட்டுக்காக உயிர்துறப்பதே என்றும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் அரிய கனிமங்கள் உள்ளன. இந்த புதையல்களை பயன்படுத்துவதன் மூலம் பாகிஸ்தானின் கடனை பெருமளவில் குறைக்க முடியும். மேலும், விரைவில் பாகிஸ்தானும் வளமான சமூகங்களில் ஒன்றாக மாறும்.
மேலும் ரெக்கோ டிக் சுரங்கத் திட்டத்தின் மூலம் அடுத்த ஆண்டு முதல் பாகிஸ்தான் ஆண்டுதோறும் குறைந்தது இரண்டு பில்லியன் டாலர் நிகர லாபம் ஈட்டும். இந்த தொகை ஆண்டுதோறும் அதிகரிக்கும். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பாகிஸ்தான் சமநிலையை கடைப்பிடிக்கும். ஒரு நண்பருக்காக நாங்கள் மற்றொரு நண்பரை தியாகம் செய்ய மாட்டோம் என்றும் அசிம் முனிர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பாகிஸ்தான் வலுவான உறவு:
இந்தியாவுடன் ஐம்பது வீத வரி விதித்து முரண்படும் அமெரிக்கா, இப்போது பாகிஸ்தானுக்கு எதிராக அதன் வரிகளை குறைத்து கடைப்பிடித்துள்ளது. இந்திய அமெரிக்க உறவில் முறிவு ஏற்பட்டதாக தெரிகிறது. ஆனால் அமெரிக்க பாகிஸ்தான் உறவு வலுவடைவதாக உள்ளது.
இந்தியாவுடன் முரண்படும் அமெரிக்கா, இப்போது பாகிஸ்தானுக்கு எதிராக அதன் வரிகளை குறைத்து கடைப்பிடித்துள்ளது. அமெரிக்க வணிகங்களுக்கு ஆதரவாக உலகளாவிய வர்த்தகத்தை மறுவடிவமைக்கும் தனது அண்மைய முயற்சியின் போது, ஆகஸ்ட் முதல் நாளில் வர்த்தக ஒப்பந்த காலக்கெடுவிற்கு முன்பு, பல நாடுகள் மீது அதிக வரிகளை விதிக்கும் புதிய நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
ஆனால் அவர் பாகிஸ்தான் மீதான வரிகளை குறைத்து, முந்தைய 29 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாகக் குறைத்தார். ரஷ்யாவுடனான வர்த்தகத்தைத் இந்திய அரசு தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா மேல் பரஸ்பர வரிகளை அதிகரிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தி உள்ளார்.
ஏற்கனவே உயர்த்தப்பட்ட 25 சதவீத வரிகளை விட அதிகமாக, இந்தியாவில் இருந்து வரும் பொருட்களுக்கான வரிகளை கணிசமாக உயர்த்துவதாகக் கூறியுள்ளார். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா அதன் வரிகளை குறைத்து கடைப்பிடித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button