முச்சந்தி

ரஷ்யா ஏன் அலாஸ்காவை அமெரிக்காவிற்கு விற்றது?….  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(2022 இல் உக்ரைன் படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யாவில் “அலாஸ்கா எங்களுடையது” என்ற விளம்பரப் பலகைகள் பலவும் தோன்றின. மேலும் சில அரசியல்வாதிகள் மற்றும் தொலைக்காட்சி நிபுணர்களால் இந்த செய்தி பெருக்கப்பட்டது. தற்போது அலாஸ்காவில் டிரம்ப்-புடின் உச்சிமாநாட்டை நடத்துவது தீவிர வலதுசாரி ரஷ்ய தேசியவாதிகளுக்கு கிடைத்த வெற்றியாகும் என்றும் மேற்குலக ஊடகங்கள் தெரிவிக்கின்றன)
அலாஸ்காவில் தங்கம், மரம் மற்றும் பெட்ரோலியம் உள்ளிட்ட ஏராளமான வளங்கள் இருந்தன. ஆனாலும் 1867இல் அமெரிக்காவிற்கு மிக குறைந்த விலையில் ரஷ்யா விற்றது. இதன் பின்னர் 1959 இல் அலாஸ்கா
49வது மாநிலமாக மாறியது.
மிகப் பெரும் பொருளாதார நெருக்கடியை 1867 இல் ரஷ்யா சந்தித்ததால், அலாஸ்காவை அமெரிக்காவிற்கு விற்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஆனால் சோவியத் சகாப்தத்தில் இது ஒரு அவமானமாகக் கருதப்பட்டது என்று முன்னாள் கிரெம்ளின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிரம்ப்- புடின் உச்சி மாநாடு:
ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் ஜனாதிபதி டிரம்பை சந்தித்து உக்ரைனில் நடந்த போரை நிறுத்துவது குறித்து விவாதித்தார். சமாதானப் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக உக்ரேனிய நிலப் பரிமாற்றம் பற்றியும் அவர்கள் பேசினர்.
வரலாற்று ரீதியாக 18ம் நூற்றாண்டில் காலனித்துவ விரிவாக்கத்தின் போது ரஷ்யா அலாஸ்காவைக் கைப்பற்றியது. ஆனால் ரஷ்ய பேரரசு எதிர்பார்த்த நோக்கங்கள் எதுவுமே அலாஸ்காவில் நிறைவேறவில்லை. இருப்பினும் ரஷ்யர்கள் அமெரிக்காவை தங்களின் ஒரு குடியேற்ற நாடாக மாற்ற எண்ணியே அலாஸ்காவில் கால் பதித்தார்கள்.
ஆனால் அன்றைய ரஷ்ய தலைநகர் செய்ண்ட் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து அவ்வளவு தூரத்தில் அவ்வளவு குளிரில் தனிமையில் வாழ ஒரு ரஷ்யரும் விரும்பவில்லை. அவர்களுடைய அதிக பட்ச சனத்தொகை அலாஸ்காவில் ஒரு போதும் ஆயிரத்தை தாண்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ரஷ்யர்கள் தெற்கில் கலிஃபோர்னியாவில் செயுன் றொஸ் கோட்டை என்று ஒன்றைத் தேர்ந்தெடுத்து உருவாக்கினார்கள். 1812க்குப் பின்னால் அதனைக்கூடப் பேணும் ஆவல் அவர்களுக்கு இருக்கவில்லை. அதையுமே ஸ்பெயினுக்கு நட்டத்தில் விற்றுக் காசக்கிக் கொண்டார்கள்.
கிரிமியா தோல்வி:
1991 இல் கிரிமியா ஒரு சுதந்திர உக்ரைனின் ஒரு பகுதியாக மாறியது. மேலும் 2022 இல் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பின் முன்னோட்டமாக ரஷ்யா அதை 2014 இல் கைப்பற்றியது அறிந்ததே.
ரஷ்யர்கள் தம்முடைய உயிர்நாடியாக கருதிய கிரிமியாவில் பிரித்தானியர்களிடம் கடுமையாகத் தோற்றது மட்டுமல்லாமல் அந்த யுத்தத்துக்காகப் பட்டகடனையே அடைக்க வழியில்லாமல் திணறிக் கொண்டிருந்தார்கள்.
இதேவேளை ரஷ்யர்களுக்கு இன்னொன்றும் புரிந்தது. வெற்றி ருசி கண்ட பிரிட்டன் கனடாவிலிருந்து அவர்களை அலாஸ்காவில் தாக்கினால் அவர்களால் ஒரு சில நாட்கள் கூடத்தாக்குப் பிடிக்கமுடியாது என்பதாகும்.
பிரிட்டனுக்கு அப்படி ஒரு எண்ணம் இருப்பதாகவும், தங்களை அலாஸ்காவில் தாக்குவது நிஜம் என்றும் அவர்கள் எண்ணினார்கள். மேலும் யுத்தக்கடன் சுமையும் ரஷ்யர்களை மேலும் வாட்டியது.
இதனால் அலாஸ்காவை அமெரிக்காவுக்கு விற்றுவிட்டால் அவர்களுக்கு மூன்று இலக்குக்கள் வெற்றயாக கிடைத்து விடும் என்று ரஷ்யா எண்ணியது. மேலும்
உள்ளூர்வாசிகளின் வெறுப்புக்கு உள்ளாகி இருந்த ரஷ்யர்கள் அலாஸ்காவை விட்டு வெளியேறினால் நன்றாக இருக்கும் என்றே எண்ணினார்கள்.
மேலும் பணம் வந்தால் கடனை அடடைக்கலாம். ஆசியாவில் தம்மை நிலைப்படுத்தலாம். அது மிக முக்கியம் என்றும், அலாஸ்காவை பிரிட்டனுக்கு இல்லையென்று ஆக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இறுதியாக ஏக்கருக்கு 7.5 சதங்கள் விலையில் அமெரிக்க அன்ட்றூ ஜக்சனின் அரசாங்கத்துக்கு மொத்தம் 7.2 மில்லியன் டாலர்களுக்கு அலாஸ்காவை விற்றார்கள்.
அதன் இன்றைய பெறுமானம் 113 பில்லியன் டொலர்கள் எனலாம்.
ரஷ்யப் பேரரசின் காலனித்துவம்:
1783 இல் ரஷ்யப் பேரரசு கேத்தரின் தி கிரேட் காலத்தில் இணைக்கப்பட்ட ஒரு தீபகற்பமான கிரிமியாவில் நடந்த போரின் காரணமாகவே ரஷ்யா அலாஸ்காவை விற்கத் தூண்டப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
7.2 மில்லியன் டொலர்களுக்கு அலாஸ்காவை அப்போது வாங்கியது அமெரிக்காவிற்கு மிகவும் நல்ல பலனை அளித்தது. இந்த பணம் அந்த நேரத்தில் ரஷ்யப் பேரரசுக்கு இது அர்த்தமுள்ளதாக இருந்தாலும், சில ரஷ்ய தேசியவாதிகள் இந்த விற்பனையை ஒரு வரலாற்றுத் தவறு என்று கருதுகிறார்கள்.
ஆசியாவையும் வட அமெரிக்காவையும் பிரிக்கும் நீரிணையைக் கடந்து 18 ஆம் நூற்றாண்டில் ரஷ்ய ஆய்வாளர்கள் அலாஸ்காவை அடைந்தனர். புதிய ரஷ்ய பிரதேசத்தை உரிமை கோருவதற்காக 1720 களில் ஜார் பீட்டர் தி கிரேட் அனுப்பிய டேனிஷ் வம்சாவளியைச் சேர்ந்த மாலுமி விட்டஸ் பெரிங்கின் பெயரால் இந்த நீரிணை பெயரிடப்பட்டது.
அக்காலத்தில் சீனாவில் ஒரு மதிப்புமிக்க பொருளாக இருந்த கடல் நீர்நாய் உரோமங்களை அறுவடை செய்ய ஆரம்பகால ரஷ்ய ஆய்வாளர்கள் விரைந்ததால், அலூடியன் தீவுகளிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பழங்குடி மக்களுக்கு எதிராக ஒரு உணர்வு இருந்ததாக நம்பப்படுகிறது.
ரஷ்யாவின் மீதான அலாஸ்காவின் பொருளாதார ஈர்ப்பு காலப்போக்கில் மங்கிப்போனது.1799 ஆம் ஆண்டில், ரஷ்யப் பேரரசு ரஷ்ய-அமெரிக்க நிறுவன வர்த்தகத்தை நெறிப்படுத்தவும், பின்னர் அலாஸ்கா பிரதேசத்தில் ரஷ்ய குடியேற்றங்களை உருவாக்கவும் முயன்றது.
ரஷ்ய அமெரிக்கா குடியேற்றம் கலிபோர்னியா வரை தெற்கே நீண்டிருக்கும் என்று கருதப்படுகிறது. சிட்கா்- அலாஸ்கா, 1892இல் இந்த குடியேற்றம் ரஷ்ய காலனித்துவ நிர்வாகி அலெக்சாண்டர் பரனோவ் என்பவரால் நிறுவப்பட்டது.
அலாஸ்காவை வைத்திருப்பதில் சவால்கள்
அலாஸ்காவை வைத்திருப்பதில் உள்ள சவால்கள் மற்ற கண்டங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களால் சிக்கலானவை என ரஷ்யா கருதியது. ரஷ்யா அதன் தூர கிழக்கில் காலனித்திய விரிவாக்கத்தில் கவனம் செலுத்த விரும்பியது.
1853 இல் கிரிமியாவில் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஒட்டோமான் பேரரசுடன் ரஷ்யா போரிடத் தொடங்கியபோது, பிரிட்டிஷ் படைகள் வட அமெரிக்கா வழியாக ரஷ்ய தூர கிழக்கை ஆக்கிரமிக்க முயற்சிக்கக்கூடும் என்று ரஷ்ய அதிகாரிகள் கவலைப்பட்டனர்.
அந்த அச்சுறுத்தல் தணிந்த பிறகும், பசிபிக் பகுதியில் பிரிட்டிஷ் இருப்பு குறித்து அவர்கள் தொடர்ந்து கவலைப்பட்டனர்.
அலாஸ்காவை அமெரிக்க வாங்கியது
இதன் காரணமாக மார்ச் 1867 இல், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் வில்லியம் ஹென்றி செவார்ட், இந்த பிரதேசத்திற்கு $5 மில்லியன் வழங்குவதன் மூலம் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவர்கள் $7.2 மில்லியன் என ஒப்புக்கொண்டனர். ஆனால் சில ரஷ்யர்களுக்கு இந்த விற்பனையால் அதிருப்தி ஏற்பட்டது.
ரஷ்ய அதிகாரத்தை உக்ரைனில் மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி அடிக்கடி பேசும் திரு. புடின், 2014 இல் ரஷ்யா அலாஸ்காவை இணைக்கத் திட்டமிட்டுள்ளதா என்று கேட்டபோது தெளிவற்ற முறையில் கூறினார்.
2022 இல் உக்ரைன் படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யாவில் “அலாஸ்கா எங்களுடையது” என்ற விளம்பரப் பலகைகள் பலவும் தோன்றின. மேலும் சில அரசியல்வாதிகள் மற்றும் தொலைக்காட்சி நிபுணர்களால் இந்த செய்தி பெருக்கப்பட்டது. தற்போது அலாஸ்காவில் டிரம்ப்-புடின் உச்சிமாநாட்டை நடத்துவது தீவிர வலதுசாரி ரஷ்ய தேசியவாதிகளுக்கு கிடைத்த வெற்றியாகும் என்றும் மேற்குலக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *