பலதும் பத்தும்

அமெரிக்காவின் சான்டா பாப்ரா கொழும்புக்கு வருகிறது

யுஎஸ்எஸ் சான்டா பாப்ரா(LCS 32) கப்பல் ஓகஸ்ட் 16ஆம் திகதி  கொழும்புத் துறைமுகத்திற்கு வருகைதரப்பதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறித்துள்ளது.

கொழும்புத் துறைமுகத்திற்கு யுஎஸ்எஸ் சான்டா பாப்ரா வருகைதரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். அமெரிக்க-இலங்கை பங்காண்மையின் உறுதியினையும், பாதுகாப்பான, வளமான மற்றும் சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான எமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பினையும் இந்த வருகை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.

எமது கடற்படைகளுக்கு இடையிலான நீண்டகால உறவுகளையும், எமது உறவை வரையறுக்கும் நெருக்கமான ஒத்துழைப்பையும் இது பிரதிபலிக்கிறது. கப்பல் தனது பயணத்தை மீண்டும் தொடர்வதற்கு முன்பு எரிபொருள் நிரப்புவதற்கும் மற்றும் ஏனைய தேவையான பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்குமான ஒரு குறுகிய நிறுத்தமாக கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளதாகவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க கப்பற்படையின் ஓர் அங்கமான யுஎஸ்எஸ் சான்டா பாப்ரா (LCS 32), நட்பு நாடுகள் மற்றும் பங்காளர்களுடனான ஈடுபாடுகள் ஊடாக பிராந்திய ஸ்திரத்தன்மையினையும் கடல்சார் பாதுகாப்பினையும் மேம்படுத்தும் அதே வேளை, மேற்கு பசிபிக் மற்றும் இந்து சமுத்திரம் ஆகிய பெருங்கடல்களில் அதன் படைகளுக்கு நடவடிக்கைக் கட்டுப்பாடு மற்றும் திட்டமிடலை வழங்குவதை முதன்மை செயற்பணியாகக் கொண்டுள்ளது.

“யுஎஸ்எஸ் சான்டா பாப்ரா இலங்கைக்கு வருகை தருவதானது, அமெரிக்க-இலங்கை பங்காண்மையின் சக்திவாய்ந்த ஒரு அடையாளமாகும். இக்கப்பலின் வருகையானது, கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியம் ஆகியவற்றிற்கான எமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டினை பிரதிபலிக்கிறது,” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவித்துள்ளார்.

“பிராந்தியம் முழுவதும் அமைதியையும், செழிப்பையும் மேம்படுத்துவதற்கு நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்றுகையில் இலங்கையுடன் இணைந்து நிற்பதில் பெருமையடைகிறோம்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.

யுஎஸ்எஸ் சான்டா பாப்ரா என்பது கரைக்கு அருகிலுள்ள கடற்பிராந்தியங்களில் செயற்படுவதற்காகவும், முன்னோக்கிய பிரசன்னம், கடல்சார் பாதுகாப்பு, கடல் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு உதவி செய்வதற்காகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு சுயாதீன திரிபுருவ லிட்டோரல் வகை போர்க்கப்பலாகும்.

2021, ஒக்டோபர்16ஆம் திகதி பெயர் சூட்டப்பட்டு சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட இக்கப்பலானது தற்போது Destroyer Squadron (DESRON) 7இன் ஒரு அங்கமாக செயற்படுகிறது. ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்காகவும், கூட்டணிகள் மற்றும் பங்காண்மைகளை பலப்படுத்துவதற்காகவும், எதிர்கால போரிடும் திறன்களை மேம்படுத்துவதற்காகவும் சான்டா பாப்ரா இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வழக்கமான ரோந்துகளை மேற்கொள்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button