முச்சந்தி

பாலஸ்தீன மனித உரிமை குரல் – பிரான்ஸிஸ்கா அல்பனீஸ்: சமாதான நோபல் பரிசுக்கு பரிசிலனை!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(பாலஸ்தீனத்துக்கான ஐ.நா.வின் விசேட பிரதிநிதி பிரான்சிஸ்கா அல்பனீஸ் (Francesca P. Albanese) அவர்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. மேலும் அவர் அமெரிக்காவினுள் காலடி எடுத்து வைக்கவும் முடியாது. உண்மையைப் பேசினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு, அதுவும் அதிகாரம் படைத்தவர்களுக்கே இந்த நிலை என்பது பிரான்சிஸ்கா அல்பனீஸ் விடயத்திலும் நிகழ்ந்திருக்கிறது)
கடந்த இரண்டு ஆண்டுகளில் காசாவில் இஸ்ரேல் கொத்துக் கொத்தாய் கொன்று குவித்ததை தன் அதிகாரமிகு நாற்காலியில் உட்கார்ந்தவாறு பேசி பிரான்சிஸ்கா அல்பனீஸ் சர்வதேச கவனமீர்த்துக் கொடுத்தவர்.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரதிநிதி பிரான்சிஸ்கா அல்பனீஸ் தான் இப்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குப் பெரும் தலைவலியாய் மாறி இருப்பவர்.
மனித உரிமைகள் பிரதிநிதி பிரான்சிஸ்கா அல்பனீஸ்:
பிரான்சிஸ்கா அல்பனீஸின் அதிரடியான கருத்துக்களால் இஸ்ரேலின் மனித குல விரோதப் படுகொலைகளிற்கு உதவி ஒத்தாசை புரியும் அமெரிக்கா பெரும் கடுங் கோபம் கொண்டுள்ளது.
இதனால் அவரின் அமெரிக்க சொத்துக்களை முடக்கிப் பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து இருக்கிறது. ஆனால் இதை சற்றும் பொருட்படுத்தாமல் இஸ்ரேல் பிரதமரையும் , இந்த அராஜகங்களுக்குத் துணையாய் இருக்கும் முக்கிய தலைவர்களையும் போக்குற்றவாளிகளாய்ப் பிரகடனப்படுத்தி தண்டனை வழங்க வேண்டும் என்றும் இந்தப் போரானது முழுக்க முழுக்க அமெரிக்க ஆயுதங்களின் பயிற்சிப் பட்டறை என்றும் இதனால் பல பில்லியன் டொலர்கள் இலாபம் மீட்டப்படுவதாகவும் அவர் துணிச்சலாக கூறியுள்ளார்.
அமெரிக்காவின் பிரான்சிஸ்கா அல்பனீஸ் மீதான தடைகளை நீக்கக் கூறி ஐ நா மனித உரிமை ஆணையகம் முன்வைத்திருக்கும் கோரிக்கைக்கு ,OIC எனப்படும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்புடன் , வெனிசூலா , அயர்லாந்து, தென்னாபிரிக்கா , பொலிவியா , பிரேசில், ஸ்பெயின் , கியூபா போன்ற வழக்கமாய் பாலஸ்தீன் விவகாரத்தில் பகிரங்க ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும் நாடுகள்
கையெழுத்திட்டுள்ளன.
அமெரிக்கா பொருளாதாரத் தடை:
உண்மையைப் பேசினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு, அதுவும் அதிகாரம் படைத்தவர்களுக்கே இந்த நிலை என்பது பிரான்சிஸ்கா அல்பனீஸ் விடயத்திலும் நிகழ்ந்திருக்கிறது. ஜெனீவா இல் நடந்த ஐநா மனித உரிமை சபை கூட்டத்தில் அவரின் உரை உலகளவில் பேணப்பட்டது.
ஆக்கிரமிப்புக்கான பொருளாதாரம் என்பது இனப்படுகொலைக்கான பொருளாதாரமாக மாறியிருக்கிறது. முதலாளித்துவ அமைப்பு முறை இலாப மீட்டுதலை அடிப்படையாகக் கொண்டது. அதனடிப்படையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கான உதவியானது பாலஸ்தீன மக்களின் மீதான இனப்படுகொலைக்கான உதவியாக மாறியிருக்கிறது.
அதன் பின்னரும்கூட இந்த அமைப்புகள் இஸ்ரேலுக்கான ஆயுதத் தடைகளையோ பொருளாதாரத் தடைகளையோ, வர்த்தகத் தடைகளையோ கடைப்பிடிக்க முன்வரவில்லை என்கிறார். அதை எதிர்பார்ப்பதே முதலாளித்துவ நலன் அடிப்படையில் கேலிக்குரியது என்றளவுக்கு மனிதப் பெறுமதியானது இலாபவெறியின் முன் ஒன்றுமேயில்லை என்றாகி விடுகிறது.
இந்தக் களத்தை சென்றடையும் பொருளாதாரம் என்பது கொலைகள், இனச் சுத்திகரிப்பு, சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் குடியேற்றம், இனவேற்றுமை கட்டமைப்பு எல்லாவற்றுக்கும் வளமூட்டுகிறது. இதனடிப்படையில் பிரான்சிஸ்கா அல்பனீஸ் இஸ்ரேலுக்கு உதவும் அரசுகளை மட்டுமல்ல, இதில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபடும் நிறுவனங்கள் கம்பனிகள் மீதும் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருப்பவர்கள் என்ற குற்றச் சாட்டை அவர் முன்வைக்கிறார்.
சர்வதேச நீதிமன்ற விசாரணை:
கடந்த இருபது மாதங்களில் இஸ்ரேல் இராணுவமும், ஆக்கிரமிப்பு நிலத்தை சுருட்டிய இஸ்ரேலிய குடியேற்றவாசிகளும் பாலஸ்தீன மக்களின் உயிரை காவுகொண்டிருந்தபோது, ரெல் அவீவ் பங்குச் சந்தை 213 வீதம் உயர்ந்திருக்கிறது.
அத்துடன் 220 பில்லியன் டொலர் சந்தை இலாபமாக ஏறியிருக்கிறது. கடந்த மாதத்தில் மட்டும் 76.3 பில்லியன் இலாபமீட்டியுள்ளது. ஆம், இனப்படுகொலை இலாபகரமானது இவர்களுக்கு என்பது தெளிவாகிறது.
நவீன வரலாற்றுக் காலத்தில் நடந்து கொண்டிருக்கும் குரூரமான இனப்படுகொலை இது என்கிறார் பிரான்சிஸ்கா. அதனால் இராணுவ தளபாட தடையை கோருகிறார். நிதி ரீதியிலான தொடர்பை துண்டிக்கக் கோருகிறார். வர்த்தகத் தடையை கோருகிறார். இப்படி கோருவதற்கும் இஸ்ரேலிய அரசு இவர் மீது குற்றம் சாட்டியுள்ளது.
இந்தப் போரால் பெரும் ஆயுத உற்பத்திக் கம்பனிகள் பெரும் இலாபமீட்டுகின்றன. இன்னொருபுறம் சமாதான முகமூடி அணிந்த- நோர்வே நாட்டின் மிகப் பெரும் (KLP) ஓய்வூதிய பண முதலீட்டு நிறுவனமும், டென்மார்க் இலுள்ள உலகின் மிகப் பெரும் கப்பல் கம்பனியான MAERSK யும், இன்னும் இதுபோன்ற நிறுவனங்களும் மட்டுமல்ல, அமெரிக்க பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் பலவும்கூட தமது நிதி மூலதனத்தை இலாபமீட்டும் நோக்கத்துடன் ரெல் அவீவ் பங்குச் சந்தையில் முதலிட்டுள்ளன.
இதன்மூலம் ஓர் இனப்படுகொலைக்கு துணைபோகிறவர்களாகவும் குற்றவாளிகளாகவும் ஆகியிருக்கிறார்கள். இப்படி பல நிறுவனங்கள் உலகில் இருக்கின்றன.
இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை ஐநா அங்கீகரித்து இருக்கிறது. அது கேள்விக்கு இடமற்றது. சர்வதேச சட்டத்தின்படியான மக்களின் இருப்புக்கான உரிமை என்பது வேறு, அரசின் இருப்புக்கான உரிமை என்பது வேறு.
மக்களின் இருப்புக்கான உரிமை என்பது இதைக் கடந்தது. ஓர் அரசுக்கான இருப்பு என்பது மற்றைய மக்களின் இருப்புக்கான உரிமையை அழித்தொழிக்க முடியாது. அதாவது அரசு என்பது மக்களின் இருப்பை பாதுகாப்பதில்தான் இருக்க முடியும். எனவே அந்த மக்களை அழித்தொழிப்பது, அவர்களின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வது, அந்த நிலத்தில் குடியேற்றுவது, இனஒதுக்கல் செய்வது, இனப்படுகொலை செய்வது என்பன உரையாடப்பட வேண்டிய அவசியம் உள்ளது என்கிறார் பிரான்சிஸ்கா.
இஸ்ரேல் தன்னை பாதுகாக்கும் உரிமை கொண்ட நாடு என ஒக்ரோபர் ஏழில் சம்பவத்தை வைத்து ஊதத் தொடங்கிய சங்கு, எழுபது வருடமாக பாலஸ்தீன மக்களும் பாலஸ்தீன நாடும் தன்னை பாதுகாக்கும் உரிமை கொண்டது என ஒலிக்கத் தயாராக இருப்பதில்லை.
மேற்குலக நாடுகள் ஒருபோதும் இதை வெளிப்படையாக பேசியது கிடையாது.
காசாவை ஓர் உடல்-உளச் சிதைப்பு முகாமாக (கொன்சன்றேசன் காம்ப்) இஸ்ரேல் உருவாக்கிப் பேணுகிறது. அவர்கள் சுதந்திரமாக வேறெங்கும் செல்லவும் முடியாது. இன்னொருபுறம் மேற்குக் கரையை சுற்றிவளைத்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டுள்ளது இஸ்ரேல்.
இவ்வாறு ஓர் அரசு வடிவம் சிதைக்கப்பட்ட பாலஸ்தீனத்துடன் கட்டுறுதியான அரச வடிவத்துள் தரைப்படை விமானப்படை கடற்படை என வைத்திருக்கும் இஸ்ரேல் மோதுகிறது. இந்த நிலைமையில் அமெரிக்கா உட்பட்ட மேற்குலக போர்வையுள் வன்முறையை புணரும் இஸ்ரேலுடன் ஹமாஸ் செய்வது போரா என்ன. தற்காப்பு எல்லைக்குள்ளும் கெரில்லா தாக்குதல் என்ற எல்லைக்குள்ளும் ஹமாஸ் இயங்க விடப்பட்டுள்ளதுதான் யதார்த்தம்.
காசா அரச வடிவத்துள் இயங்கவில்லை. இதெப்படி போர் என்று வரையறுக்குள் வருகிறது என தெரியவில்லை. நடப்பது அப்பட்டமான இனப்படுகொலை நடவடிக்கையே ஒழிய வேறில்லை.
தனது மனச்சாட்சிக்கு நேர்மையாக, ஓர் இனப்படுகொலைக்கு எதிராக, பசிக்கு எதிராக தார்மீகக் கோபத்துடனும் பொறுப்புடனும் துணிச்சலுடனும் ஆதாரங்களுடன் பேசுகிறார் பிரான்சிஸ்கா. அத் தகவல்களை களத்தில் நின்று இயன்றரை ஆய்வுசெய்து ஐநா முன் அறிக்கையிட்ட பிரான்சிஸ்கா அதிகார வர்க்கத்துக்கு ஓர் இடைஞ்சல். மக்களுக்கு அவர் ஒரு துணிச்சல்காரி. சர்வதேச அரசுகளை ‘சர்வதேச சமூகமாக’ உருமாற்றி வரைவுசெய்து பேசும் அதிகார வர்க்கத்துக்கு, உலக மக்களை சர்வதேச சமூகமாக வரைவுசெய்யும் குரல் அவரது.
மற்றைய நாடுகளில் ‘ஜனநாயத்தை’ ஏற்றுமதி செய்ய குண்டுவீசி போர் செய்தவனெல்லாம் சமாதானத்துக்கான நோபல் பரிசை எடுக்க அலையும் ஓர் உலகில், அவர்களின் முகமூடியை உருவிக் காட்டும் பிரான்சிஸ்கா ஒரு குற்றவாளி? ஆம், அவர் குற்றவாளியா என்பதை உலகே நிரணயிக்க வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button