பலதும் பத்தும்

யாழ். பல்கலைக்கழகம் : மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் ஒரே நேரத்தில் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகப் பேரவையின் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ பீடத்தின் ஓட்டுண்ணியல் துறை, சத்திரசிகிச்சையியல் துறை மற்றும் சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூன்று பேரைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய, திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்ப மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் என்பன நேற்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இந்தக் கூட்டம் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது.

இதன் அடிப்படையில், ஓட்டுண்ணியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ. முருகானந்தன் ஓட்டுண்ணியலில் பேராசிரியராகவும், சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி எஸ். குமரன் குடும்ப மருத்துவத்தில் பேராசிரியராகவும், சத்திரசிகிச்சையியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ். கோபிசங்கர் சத்திரசிகிச்சையியலில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த ஏககாலப் பதவி உயர்வுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் கல்வி மற்றும் ஆய்வுத் திறனை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button