நிலத்தை தானே உழும் உழவு இயந்திரம்!

விவசாய நிலத்தை ஓட்டுநர் உதவியின்றி தானே உழும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள உழவு இயந்திரம் ஒன்றின் சோதனை இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள இந்த உழவு இயந்திரம் செயற்கைகோள் உதவியுடன் சென்சார் மூலம் தகவல்களைப் பெற்று நிலத்தின் நீள அகலத்தை துல்லியமாக கணக்கிட்டு வெற்றிகரமாக உழுது முடித்து ஆராய்ச்சியாளர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
Global Navigation Satellite System (GNSS) எனப்படும் செயற்கைகோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்த உழவு இயந்திரத்தின் தொடுதிரைக் கணினி வசதியும் வழங்கப்பட்டுள்ளது. வெளிச்சம் குறைந்த நேரத்தில் கூட எந்த தடையுமின்றி நிலத்தை உழும் வகையில் உழவு இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் ஓட்டுநர் மூலமும், மற்ற நேரங்களில் ஓட்டுநர் இல்லாமல் தானாகவே செயல்படும் வகையில் இரண்டு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது வேளாண் துறைக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும்.
இதுதவிர, தொலைதூரத்தில் இருந்து இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இருசக்கர நெல் விதைக்கும் இயந்திரமும் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியைப்பயன்படுத்துவதன் மூலம் விவசாயப் பொருட்களின் உற்பத்திச்செலவு கணிசமாக குறையும் என்றும் கூறப்படுகிறது.
வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை, உரிய விலை கிடைப்பதில்லை என்பது போன்ற பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வரும் விவசாயிகளுக்கு இதுபோன்ற அதிநவீன தொழில்நுட்பங்களுடன் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் வேளாண் கருவிகள்இந்தியாவின் விவசாய உற்பத்தியை அதிநவீனமயமாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஓட்டுநர் இல்லாத கார்கள், பயணிகள் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் வரிசையில் ஓட்டுநரில்லா உழவு இயந்திரத்தை இணைந்திருப்பது மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இணையாக விவசாயத்துறையும் ஈடுகொடுத்து முன்னேறி வருவதையே காட்டுகிறது.
![]()