முச்சந்தி

வஞ்சிக்கப்படுகிறாரா முன்னாள் வங்க பிரதமர் ஹசீனா?…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

( மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என, வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஆனால் இவை அனைத்தும் திட்டமிட்ட குற்றச்சாட்டுகள் என்று எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன)
வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக புதிய வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சரின் பெயர்களை அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் இணைத்துள்ளது.
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தை தொடர்ந்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது.
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்கில், ஷேக் ஹசீனா மீது அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) முறைப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
புதிய அரசு அமைந்த உடன் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் செய்தது உட்பட ஏராளமான வழக்குகள் பதியப்பட்டன. சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்தும் உள்ளது.
இந்த சர்வதேச குற்ற தீர்ப்பாயம், 1971ல் வங்கதேச போருக்கு பின் முன்னாள் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மானால் தொடங்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டவர்களை விசாரிக்க தொடங்கிய இந்த அமைப்பு, பின் செயலிழந்தது. அதை முன்னாள் பிரதமரும், முஜிபுர் ரஹ்மான் மகளுமான ஷேக் ஹசீனா, 2010ல் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார். தற்போது இந்த தீர்ப்பாயம் ஷேக் ஹசீனா வழக்குகளை விசாரித்து வருகிறது.
ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ
இந்நிலையில், கடந்த ஆகஸ்டில் அரசின் இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக போராடுவோரை சுட்டுக்கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை ஆதாரமாக வைத்தே ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர், முன்னாள் போலீஸ் ஐ.ஜி., ஆகியோர் மீது, மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக புதிய வழக்கை தீர்ப்பாயம் பதிந்துள்ளது. இதன் விசாரணை முடிந்ததும் அதற்கான தண்டனை அறிவிக்கப்படும்.
பங்களாதேஸில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டத்தினால் தான் நாடு இல்லாமல் வீடு இல்லாமல் பாதிக்கப்பட்டு இருப்பதாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா(Sheikh Hasina) வெளியிட்ட குரல் பதிவொன்றும் வெளியாகியுள்ளது.இந்த குரல் பதிவானது அவரின் முகப்புத்தக பக்கத்தில் வெளியாகியுள்ளது.
பங்களாதேசத்தில் கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் கடும் போராட்டம் மற்றும் வன்முறை ஏற்பட்டது. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் கட்டுப்பாட்டை மீறி சென்ற நிலையில் அவர் பதவி விலக மறுத்தார்.
அதனை தொடர்ந்து, நடந்த போராட்டத்தில் அறுநூறு பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர். இதனால் பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இந்நிலையில், கடந்த பல மாதங்களுக்கும் மேலாக பொது வெளியில் வராமல் இருக்கும் ஷேக் ஹசீனா குரல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.பங்களா மொழியில் அவர் வெளியிட்டு இருக்கும் அந்த குரல் பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது, வீடு, நாடு இல்லாமல் தவிக்கிறேன் வெறும் 20-25 நிமிடங்களில் நாங்கள் மரணத்தில் இருந்து தப்பினோம்.
ஒகஸ்ட் 21ஆம் திகதி கொலையில் இருந்து தப்பியதாக நான் உணர்கிறேன். கடந்த ஆண்டு நடந்த கொலை முயற்சி, முதல் முறையாக நடந்தது இல்லை. எனது வாழ்க்கையில் என்னைக் கொல்வதற்கு பல முறை சதி நடந்திருக்கிறது.
எனக்கு எதிராக உள்ளவர்கள் என்னை கொலை செய்ய எப்படி எல்லாம் திட்டமிட்டு இருந்தார்கள் என்பதை உலகம் அறியும். வீடு, நாடு இல்லாமல் நான் தவிக்கிறேன். அனைத்தும் தீக்கிரையாக்கபட்டது என அழுதபடி கூறும் வகையில் இந்த குரல் பதிவு உள்ளது.
இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர் போராட்டம்:
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது.
இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்துள்ளது.
அதேநேரத்தில், ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை மற்றும் ஊழல் வழக்கு வங்காளதேசத்தில் பதிவு செய்யபட்டுள்ளது. அவருக்கு எதிராக கைது வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டது.
எனவே அவரை வங்காள தேசத்திற்கு திருப்பி அனுப்பும்படி அந்நாட்டு அதிகாரிகள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். எனினும், ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கையை இந்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
கடந்த ஆகஸ்ட் மாதங்களில் மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை அடக்க முயற்சித்ததற்காக முன்னாள் பிரதமர், முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸாமான் கான் மற்றும் முன்னாள் காவல் ஆய்வாளர் அப்துல்லா அல் மாமுன் ஆகியோர் மீது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான வழக்கை ஐ.சி.டி பதிவு செய்துள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாமுன் மட்டும் குற்றத்தை ஒப்புக்கொண்டு, இந்த வழக்கில் அரசு சாட்சியாக சேரக் கோரியுள்ளதாக வங்கதேச பிராந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு ஐ.சி.டி ஆறு மாத சிறைத்தண்டனை விதித்திருந்தது. இந்தியாவில் தஞ்சமடைந்த பின்னா், முதன்முறையாக ஒரு வழக்கில் அவா் தண்டனை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் மீள​ வங்​கதேசம்​ வருவேன்
நான் மீண்டும் வங்கதேசம் வருவேன் என தனது கட்சி நிர்வாகிகளிடம் முன்னாள் பிரதமர் ஹசீனா தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் பிரதமராக பதவி வகித்த அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா (77) தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் குடும்பத்தினருடன் சமூக வலைதளம் மூலம் ஹசீனா கலந்துரையாடினார்.
அப்போது அவர் கூறியதாவது, வங்கதேச மக்கள் மீது அக்கரை இல்லாதவர் இப்போது இடைக்கால அரசை வழிநடத்துகிறார். முன்பு சிறிய தொகையை மக்களுக்கு கடனாக கொடுத்து அதிக வட்டி வசூலித்தவர. இதன்மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வெளிநாட்டில் ஆடம்பரமாக வசித்தார். அப்போது அவருடைய ஏமாற்று வேலையை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
எனவே, அவருக்கு அரசு நிறைய உதவி செய்தது. ஆனால் மக்கள் பலனடையவில்லை. அவர் தனக்கு நல்லவற்றை பெற்றுக்கொண்டார். அப்போது அவருக்கு உருவான அதிகார மோகத்தால் இப்போது வங்கதேசம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
வளர்ச்சிக்கான மாதிரியாக விளங்கிய வங்கதேசத்தை அவர் தீவிரவாதிகளின் தேசமாக மாற்றிவிட்டார். நம்முடைய கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விவரிக்க முடியாத வகையில் கொல்லப்படுகிறார்கள். நம் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் காவலர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் அடக்கு முறைக்கு உள்ளாகிறார்கள்.
வங்கதேசத்தில் நடக்கும் பாலியல் குற்றங்கள், கொலை, வழிப்பறி உள்ளிட்ட செயல்கள் பற்றிய செய்திகள் வெளியில் வருவதில்லை. அவ்வாறு மீறி வெளியிடப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊடகங்கள் மிரட்டலுக்கு உள்ளாகின்றன. இதையெல்லாம் எவரும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
உங்களுக்கு நீதி கிடைக்கும். குற்றச் செயலில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படுவார்கள். இது என்னுடைய வாக்குறுதி. நான் மீண்டும் வங்கதேசம் வருவேன். அதற்காகத்தான் இறைவன் என்னை உயிருடன் வைத்திருக்கிறார் என்று கருதுகிறேன் என்று ஹசீனா தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button