முச்சந்தி
காசாவில் தொடரும் பட்டினிக் கொடுமை; போரில் உணவை ஆயுதமாக்கும் இஸ்ரேல்… ஐங்கரன் விக்கினேஸ்வரா

ஈரானுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதால், இஸ்ரேல், தனது கவனத்தை காசா பக்கம் மீண்டும் திருப்பி உள்ளது. வடக்கு காசாவில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் உடனடியாக மொத்தமாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ஹமாஸ் இயக்கத்தினர் மீது மிகப்பெரிய தாக்குதலை தொடங்கி இருப்பது தெளிவாகிறது.கடந்த வாரம் மட்டும் காசா மீது இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலில் 250க்கும் மேற்பட்ட உணவு தேடி வந்த சிறுவர்கள், பெண்கள் பலியான சோகம் நடந்துள்ளது.

ஆனாலும் தற்போது காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். ஹமாஸ் இயக்கத்தினரின் பிடியில் உள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அதிபர் டிரம்ப் பதவியேற்றவுடன் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 8 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மீண்டும் சண்டை தொடங்கியது. இருதரப்புக்கும் இடையே போர் நிறுத்தம் கொண்டுவர டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சி வெற்றிபெறவில்லை.
இதற்கிடையே இவ்வாரம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்கா சென்றுள்ளார். இஸ்ரேல் அதிகாரி ஒருவர் தெரிவித்ததன் படி, போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் காசாவில் இஸ்ரேலிய ராணுவம் உணவகம் மற்றும் உணவு தேடி வந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு நாளில் மட்டும் 74 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக இஸ்ரேலியப் படைகள் காசாவில் கடலோர விடுதியில் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டனர், மேலும் போரினால் பாதிப்பட்ட பாலஸ்தீனியர்கள், தங்களுக்கு தேவையான உணவு உதவியைப் பெற முயன்றபோது துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் கொல்லப்பட்டனர் என்று அங்குள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்னுமோர் ‘நக்பா’ ?

2023 அக்டோபரில் இருந்து உணவு மற்றும் மனிதாபிமான பொருட்களை கொண்டு செல்லும் அனைத்து வழித்தடங்களையும் காஸாவில் அடைத்துவிட்டு 77 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காஸா மீது மூர்க்கத்தனமான தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் நடத்தி வருகிறது.
கையில் இருந்தவற்றை எல்லாம் இழந்துவிட்டு பாலஸ்தீனிய மக்கள், பசி கொடுமையால் இப்படி கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். காஸாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணை கைதிகள் அனைவரையும் விடுவிக்கும் வரை போர் ஓயாது என்று சூளுரைத்துள்ள இஸ்ரேல், அகதிகள் முகாம், மருத்துவமனைகள், குடியிருப்புகள் என அனைத்து பகுதிகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி கொண்டு இருக்கிறது.
காஸாவில் இருக்கும் முப்பது வீதமான குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாட்டில் இருக்கின்றன. ஐந்து வயதுக்குட்பட்ட 71,000 குழந்தைகள், பட்டினியால் நலிவடைந்து கொண்டு இருப்பதாக ஐ.நா. கூறுகிறது. கர்ப்பிணிகளும் பிறந்த சில மாதங்களே ஆன குழந்தைகளும் உணவு கிடைக்காமல் மரணத்தின் விளிம்பில் இருக்கின்றனர்.
இஸ்ரேலின் பழிக்குப் பழி :
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பழி தீர்ப்பதாக கூறி காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் இலட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களை பசி, பட்டினியில் தள்ளி உள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இஸ்ரேல், காஸா போருக்கு 60,000 பாலஸ்தீனியர்களும் 1,500 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டு விட்டனர்.
இன்னும் ஓர் ‘நக்பா’ போன்று பட்டினியால் பாலஸ்தீன மக்களை படுகொலை செய்ய இஸ்ரேல் முயன்றுள்ளது. இதற்காகவே காஸாவில் அத்தியாவசிய, மனிதாபிமான பொருட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பசியால் இருபது இலட்சம் மக்கள் வாடிக் கொண்டிருக்கின்றனர்.இதனிடையே காசாவுக்கு உணவுப் பொருட்களை அனுப்பாவிட்டால் பல்லாயிரம் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்று உலக நாடுகளுக்கு ஐ.நா. இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலுக்கு உலகளாவிய கண்டனம்:
இஸ்ரேலின் கொடூரமான நடவடிக்கைகளுக்கு பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காஸா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள புதிய நில அடிப்படையிலான போர் நடவடிக்கைகள் உலகளவில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.
உள்நாட்டிலேயே போருக்கு எதிராக யூத மக்கள் எழுந்துள்ளமையால், இஸ்ரேல் அரசு ஆட்டம் கண்டுள்ளது. காஸாவில் இஸ்ரேலின் போர் ஒரு புதிய, வன்முறை கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலுக்குள்ளேயே இந்தப் போருக்கு எதிராகவும், அது நடத்தப்படும் விதம் குறித்தும் உள் நாட்டிலேயே குரல்கள் வலுத்து வருகின்றன. இந்த அதிர்ச்சி தரும் விமர்சனங்கள், உள்நாட்டில் ஒரு பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன.
தற்போது உள்நாட்டிலேயே போர் குறித்த விமர்சனங்களும், அதன் நடத்தப்படும் விதம் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன. இது, இஸ்ரேலிய சமூகத்தில் போரின் தாக்கம் மற்றும் அதன் எதிர்காலம் குறித்து ஆழமான கவலைகள் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. இந்தப் புதிய குரல்கள், இஸ்ரேலிய அரசியல் மற்றும் சமூகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்

![]()