முச்சந்தி

கிரெம்ளின் பகையாளிகளின் மர்மக் கொலைகள்…. புட்டினை எதிர்த்தால் மரணமே முடிவு?….  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(அண்மையில் புட்டினால் பதவி நீக்கம் செய்த அமைச்சரின் மர்ம மரணமும், அதற்கு முன்னர் புட்டினை எதிர்த்தவர்களின் மர்ம மரணங்களும் தீர்க்கப்படாத தீர்ப்புகளாகவே உள்ளன. வரலாற்று ரீதியாக சோவியத் யூனியன் சிதைவின் பின்னரும், கிரெம்ளினின் உளவுக் குழுக்கள் ஐரோப்பா முழுவதும் தங்கள் எதிரிகளுக்கு எதிராக பல தாக்குதல்களை நடத்தியுள்ளன )
கிரெம்ளினின் எதிரிகள் எப்படி இறக்கிறார்கள் என்பதற்கு, விஷம் ஏற்றப்பட்ட தற்கொலைகள், உயரமான ஜன்னல்களுக்கு வெளியே தள்ளி விழுத்தல், அலெக்ஸி நவல்னி மீதான ‘கேஜிபி ஹார்ட் பன்ச்’ மூலம் கொல்லப்படுதல் என கொலைப்பட்டியல் நீள்கிறது. இப்படி நீளும் மர்மக் கொலைகளில் அண்மையில் பதவி நீக்கமான அமைச்சரின் மர்ம மரணமும் அடங்கும்.
பதவி நீக்கமான அமைச்சரின் மர்ம மரணம்:
கடந்த வாரம் புட்டினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ரஷ்யாவின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவைட் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
புட்டினால் ஸ்டாரோவைட் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அவர் மே 2024 இல் ரஷ்ய போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு, ஸ்டாரோவோயிட் கூர்ஸ்க் பிராந்தியத்தின் ஆளுநராக மே 2024 வரை கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் பணியாற்றினார்.
ஆகஸ்ட் 2024 இல் ஒரு திடீர் தாக்குதலில் உக்ரேனிய துருப்புக்களால் இப்பகுதி ஓரளவு கைப்பற்றப்பட்டது. மாஸ்கோ சமீபத்தில்தான் உக்ரேனியப் படைகளை கூர்ஸ்க்கில் இருந்து விரட்டியடிக்க முடிந்தது.
மரணமான அமைச்சரின் உதவியாளர் அலெக்ஸி ஸ்மிர்னோவ் ஏப்ரலில் கைது செய்யப்பட்டார். உக்ரைன் எல்லையில் நிலத்தடி காப்பரண்களை கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், பதவி நீக்கம் என்பது கூர்ஸ்க் நிகழ்வுகள் தொடர்பாக புடின் ஸ்டாரோவோயிட்டின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டமை என்பதை காட்டுகிறது எனவும் தெரிவித்தார்.
கிரெம்ளினை எதிர்த்தோர் முடிவு ?
கிரெம்ளினை எதிர்க்கும் அரசியல் விமர்சகர்கள், எதிர் நாட்டு உளவாளிகள் மற்றும் அரசை விமர்சிக்கும் புலனாய்வு ஊடகவியலாளர்கள் பல்வேறு முறைகளால் கொல்லப்பட்டுள்ளனர். மாஸ்கோவின் திட்டமிட்ட படுகொலை முயற்சிகளால் கொல்லப்பட்ட, அல்லது தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவருக்கும் இதுவரை தெரியாது.
அத்துடன் பொலோனியம் கலந்த தேநீரைக் குடிக்க கொடுப்பதன் மூலமோ அல்லது ஒரு கொடிய நரம்பு முகவரைத் (Nerve Agent) தொட வைப்பதன் மூலமோ நச்சுத்தன்மை கொண்ட தாக்குதல்கள் மூலம் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ரஷ்ய எதிர்ப்பாளர்கள் மர்மமான சூழ்நிலையில் இறந்து விடுவதால் அவை வேண்டுமென்றே செய்யப்பட்ட கொலைகளா அல்லது தற்கொலைகளா என்பதை தீர்மானிக்க கடினமாக உள்ளது. ரஷ்யாவின் எல்லைகள் தாண்டியும் இத்தகைய கொலைகள் இதுவரை கட்டுப்படுத்தப்படவில்லை.
சோவியத் சிதைவின் பின்னர், சந்தேகத்திற்கிடமின்றி கிரெம்ளினின் உளவுக் குழுக்கள் ஐரோப்பா முழுவதும் அவர்களின் எதிரிகளுக்கு எதிராக பல தாக்குதல்களை நடத்தியுள்ளன.
லிட்வினென்கோ லண்டனில் கொலை:
2018 இல் இங்கிலாந்தில் உள்ள சிறிய நகரமான சாலிஸ்பரியில்்முன்னாள் ரஷ்ய உளவுத்துறை அதிகாரி செர்ஜி ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியா ஆகியோர் நரம்பு முகவர் விஷம் குடித்து பல வாரங்கள் ஆபத்தான நிலையில் இருந்தனர். ஆயினும் அவர்கள் தப்பிப் பிழைத்தனர்.
பிரிட்டன் உடனடியாக ரஷ்ய உளவுத்துறை மீது குற்றம் சாட்டியது. ஆனால் மாஸ்கோ முழுமையாக அதனை மறுத்தது. அலெக்சாண்டர் பெட்ரோவ் மற்றும் ருஸ்லான் போஷிரோவ் ஆகிய இரு ரஷ்ய பிரஜைகளை இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள சந்தேக நபர்களாக பிரித்தானிய அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள் இருவரும் ரஷ்ய இராணுவ உளவுத்துறையில் முக்கிய அதிகாரிகள் என்று குற்றம் சாட்டப்பட்டனர்.
2006 ஆம் ஆண்டில், KGBயின் பிந்தைய வாரிசு நிறுவனமான FSB இன் முன்னாள் முகவரும், ரஷ்ய அரசை எதிர்த்த அலெக்சாண்டர் லிட்வினென்கோ (Alexander Litvinenko) லண்டனில் கதிரியக்க பொலோனியம்-210 கலந்த தேநீரைக் குடித்ததால் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். மூன்று வாரங்களுக்குப் பிறகு அவர் இறந்தார்.
பிரிட்டிஷ் விசாரணையில், ரஷ்ய முகவர்கள் லிட்வினென்கோவைக் கொன்றதாகக் கண்டறியப்பட்டது. அநேகமாக புட்டினின் ஒப்புதலுடன் இக்கொலை நடந்ததாக அறியப்பட்டது. ஆனால் கிரெம்ளின் இக்கொலையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்தது.
கொலையுண்ட போரிஸ் நெம்ட்சோவ்:
புட்டினின் அரசியல் எதிரியாக மிக உயர்ந்த நிலுயில் இருந்த போரிஸ் நெம்ட்சோவ் (Boris Nemtsov) கொலை இன்னோர் மர்மமாகும். முன்னைய ரஷ்ய அதிபர் போரிஸ் யெல்ட்சின் கீழ் துணைப் பிரதமராக இருந்தவர். புட்டினின் முன்னோடியாக இருந்த நெம்ட்சோவ் மாஸ்கோவில் பிரபலமான அரசியல்வாதியாகவும், புடினை கடுமையாக விமர்சித்தவராவார்.
2015 பிப்ரவரியில், அவர் தனது காதலியுடன் நடந்து சென்றபோது, ​​கிரெம்ளினை ஒட்டிய பாலத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மரணம் நாட்டையே பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
செச்சினியாவைச் சேர்ந்த ஐந்து பேர் அவரைக் கொன்றதற்காக குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். பின்னர் துப்பாக்கிதாரிக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் நெம்ட்சோவின் கூட்டாளிகள் இது அரசாங்கத்திடம் இருந்து கொலைப் பழியை திசை மாற்றுவதற்கான முயற்சி என்று கூறினர். மேலும் பிபிசியின் பத்திரிகையாளர்கள் நடத்திய விசாரணையில் அவர் கொல்லப்படுவதற்கு முன்பு கிட்டத்தட்ட ஒரு வருடமாக FSB முகவர்களால் நிழலாக தொடரப்பட்டது கண்டறியப்பட்டது.
அன்னா பொலிட்கோவ்ஸ்கயா கொலை:
நோவயா ஹசியத்தா (Novaya Gazeta) இன் மற்றொரு பத்திரிகையாளரான அன்னா பொலிட்கோவ்ஸ்கயா (Anna Politkovskaya) மரணமும் லித்வின்கோ விசாரணையுடன் தொடர்பாக இருந்தது. அக்டோபர் 7, 2006 அன்று புட்டினின் பிறந்தநாளில் அவரது மாஸ்கோ அடுக்குமாடி கட்டிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
செச்சினியாவில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கைக்காக அவர் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் செச்சினியாவைச் சேர்ந்த துப்பாக்கிதாரி, கொலையில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். மற்ற நான்கு செச்சினியர்கள் கொலையில் ஈடுபட்டதற்காக குறுகிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர்.
போரிஸ் பெரெசோவ்ஸ்கி இங்கிலாந்தில் மரணம் :
2013 ஆம் ஆண்டில், போரிஸ் பெரெசோவ்ஸ்கி (Boris Berezovsky) இங்கிலாந்தின் அஸ்காட்டில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார் என முதலில் கூறப்பட்டது. பின்னர் வெளிப்படையாக வந்த தகவல்களின் படி, அவரது குளியலறையில் தூக்கிலிடப்பட்ட நிலையில் உடல் கண்டறியப்பட்டது.
கிரெம்ளினில் பெரெசோவ்ஸ்கி முன்னாள் அதிபர் யெலட்சினுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர். புட்டின் பதவிக்கு வருவதில் 2000இல் முக்கிய பங்கை வகித்தவர ஆவார். பின்னைய வருடங்களில் அவர் புடினின் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார்.
மேலும் 2000 களின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் அரசியல் தஞ்சம் அடைந்தார். அவரது மரணம் குறித்து விசாரணைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவர் மரணத்திற்கு தற்கொலை என்பதைத் தவிர வேறு எதையும் உறுதியாக நிறுவவில்லை.
இருப்பினும், ஒரு ஜெர்மன் தடயவியல் விஞ்ஞானி – பெரெசோவ்ஸ்கியின் குடும்ப உறுப்பினர்களால் பணியமர்த்தப்பட்டு, அவர் பிரேத பரிசோதனை புகைப்படங்களை ஆய்வு செய்ததன் மூலம், ரஷ்யர் தன்னைக் கொல்லவில்லை என்று முடிவை ஏற்படுத்தச் செய்தனர்.
இதனைப்போல ரஷ்யாவிலும், வெளிநாடுகளிலும் பல விவரிக்க முடியாத மர்ம மரணங்கள் நடந்துள்ளன.
விமான விபத்தில் மர்மம்:
2023 ஆகஸ்டில் விமான விபத்தில் யெவ்ஜெனி பிரிகோஜின் (Yevgeny Prigozhin) மற்றும் அவரது வாக்னர் தனியார் இராணுவ நிறுவனத்தின் உயர்மட்ட லெப்டினென்கள் பலர் கொல்லப்பட்டனர்.
அவர் ஆயுதமேந்திய கிளர்ச்சியைத் தொடங்கிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அவரை முதுகில் குத்திய தேசத்துரோகி என்று முத்திரை குத்திப்பட்டார். ஆயினும் அவர் புட்டினை விமர்சிக்கவில்லை என்றாலும், பிரிகோஜின் ரஷ்ய இராணுவத் தலைமையை சாடியதுடன், உக்ரேனில் போருக்கு செல்வதற்கான நோக்கங்களை கேள்வி எழுப்பினார்.
அமெரிக்க உளவுத்துறை மதிப்பீட்டின்படி, விமானத்தில் இருந்த 10 பேரையும் கொன்ற விபத்து வேண்டுமென்றே வெடித்ததால் ஏற்பட்டது என்று அமெரிக்க மற்றும் மேற்கத்திய அதிகாரிகளின் கூற்றுப்படி கண்டறியப்பட்டது.
நவால்னியின் மர்ம மரணம்:
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் மரணம் மற்றும் அதன் பின்னணியில் விளாடிமிர் புட்டின் இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் மீண்டும் ரஷ்யா மீது உலகின் கண்டனக் கணைகள் அதீதமாக ஏவப்பட்டன.
கிரெம்ளின் படுகொலைகளின் பின்னணி பற்றிய கேள்வியை எழுப்பியுள்ள மேற்குலக ஊடகங்கள், பாரிய குற்றச்சாட்டுக்களை மாஸ்கோ மீது தெரிவித்துள்ளனர்.
மாஸ்கோவில் நவீல்னியின் மரணம் குறித்த செய்தி வெளியானபோது உலகத் தலைவர்களும், ஊடக வர்ணனையாளர்களும் உடனடியாக ரஷ்ய ஜனாதிபதியை நோக்கி விரல் நீட்டினர்.
47 வயதான அரசின் அதிருப்தியாளருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக சிலர் கூறினர். 2020 ஆம் ஆண்டில் நவால்னியின் முந்தைய படுகொலை முயற்சி நடந்ததைப் போலவே – இந்த ஆர்டிக் சிறைக் காலனிக்குள் அவர் மீது இதயத்தில் ஒரு பாரிய குத்தினால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கப்பட்டது.
இவ்வாறு கிரெம்ளின் பகையாளிகளின் மர்மக் கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. கே.ஜி.பியை எதிர்த்தால் மரணமே முடிவு என்று முன்பு கூறுவது போல தற்போது புட்டினை எதிர்த்தால் அவர்களின் நிலை என்னவாகும் என்பது கேள்விக்குறியே ?

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button