முச்சந்தி

மைத்திரி, ரணிலுக்கு நடந்த அதே நிலை தான் அனுரவுக்கும்

2015ம் ஆண்டின் பொது வேட்பாளர் தொடக்கம் இன்றைய தேசிய மக்கள் சக்தியின்மேதகு ஜனாதிபதி வரையிலான காலப்பகுதியில் நம் நாட்டின் அரசியல் நிலைப்பாட்டினை எனது சிந்தனைக்கு உட்பட்டவாறு விபரிக்கும் ஒரு முயற்சியாக இதனை பார்க்கிறோம்.

2015 ஜனாதிபதி பொது வேட்பாளர் மேதகு மைத்திரிபால சிறிசேன

2005ம் ஆண்டு முதல் 2015 வரை ஆட்சி புரிந்த அன்றைய ஜனாதிபதி மேதகு மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களது குடும்ப அரசாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள், முன்னால் மேதகு ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க பண்டாரநாயக அவர்கள் ஆகியோர்களின் தலைமையில் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டு மேதகு மைத்திரிபால சிறிசேன அவர்கள் நம் நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். கிராமிய பின்னணியை கொண்ட அவர், அடித்தள சமூகம் உட்பட நாட்டின் சகல இன மக்களினதும் துன்ப துயரங்களை நன்கறிந்தவர் என்றும் அனைத்து வர்க்கத்தினரையும் ஒரே நேர்கோட்டில் நிலை நிறுத்தி செயற்பட்டு நாட்டையும் மக்களையும் உயர்வடைய செய்வார் என்றும் மக்கள் நம்பினார்கள்.

அதற்கேற்றார் போல் அவரும் செயற்பட்டார். உதாரணத்திற்கு, சுயநலம் நிறைந்த நாட்டிற்கு நன்மை பயக்காத “20 வது சட்டத் திருத்தத்தை” நீக்கியமை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் அடிப்படை மாற்றங்களை” உருவாக்கியமை போன்ற இன்னோரன்ன பிரயோசனமான திட்டங்களை அமுல் படுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்றார்.

கட்சி அரசியல் மண்டையில் குடிகொண்டு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பலப்படுத்தும் குறுமதி படைத்து அவ் செயற்பாட்டிற்கு முன்னுரிமை கொடுத்து செயற்பட தொடங்கினார். ஏற்றி விட்ட ஏணியை உதைப்பதை போல் இவரை அரியணையில் அமர்த்திய கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களை பதவி நீக்கி, யாரை எதிர்த்து போட்டியிட்டு ஜனாதிபதியானாரோ அதே கௌரவ மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களை நாட்டின் பிரதமராக்கி 52 நாட்கள் மைத்திரி – மஹிந்த ஆட்சியை நிறுவி தனது அரசியல் பிற்போக்குவாதத்தை மேடையேற்றி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை காப்பாற்ற எத்தணித்து ஈற்றில் தனது அரசியல் வாழ்க்கைக்கு தானே சூனியம் வைத்துக்கொண்டார்.

பொது வேட்பாளாராக களமிறக்கப்பட்டு நாட்டின் ஜனாதிபதியாக ஆக்கப்பட்ட மேதகு மைத்திரிபால சிறிசேன அவர்கள் பல்வேறு அரசியல் சூழ்ச்சிகளை மேற்கொண்டு போட்டா போட்டிக்கு மத்தியில் வலுக்கட்டாயமாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை ஏற்றிருக்காமல் தூய சிந்தனையுடன் மக்கள் அவர் மீது கொண்டிருந்த நன்மதிப்பிற்கு மதிப்பளித்து சகல மக்களுக்குமான பொது ஜனாதிபதியாக செயற்பட்டிருப்பாறெனில் நாடும் மக்களும் காப்பாற்றப்பட்டு அவர் இன்றும், சிங்கப்பூரின் பெருந்தலைவர் லீ குவான் யூ மற்றும் மலேசியாவின் பிரதமர் மஹாதீர் பின் முகம்மது அவர்களை போன்று, நம் நாட்டின் பெருந்தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டு மக்கள் மனதில் வாழ்ந்துக் கொண்டிருந்திருப்பார். ஆனால், கட்சி அரசியல் மற்றும் சுயநலவாத தலைமைத்துவ போக்கு என்பன அவரை இன்று செல்லா காசாக மாற்றியுள்ளது.

2022ம் ஆண்டு கௌரவ மஹிந்த ராஜபக்ச அவர்களின் தயவால் 2022 முதல் 2024ம் ஆண்டு வரை நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மேதகு ரணில் விக்ரமசிங்க 

மேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக்கு எதிராக நடாத்தப்பட்ட “அரகலய” இளைஞர்கள் போராட்டத்தின் விளைவாக கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அனுசரணையில் பாராளுமன்ற தெரிவின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மேதகு ரணில் விக்ரமசிங்க அவர்கள் 2022ம் ஆண்டு அரியாசனமேற்றப் பட்டார்.

பொருளாதார ரீதியாக அதள பாதாளத்தில் இருந்த நம் நாட்டை தனது சர்வதேச அரசியல் பின்புலத்தை மையமாகக் கொண்டு மீட்கும் நடவடிக்கையில் முனைப்போடு செயற்பட்டு மக்களின் துயர்மிகு வாழ்வாதாரத்திற்கு ஒரு திசைக்காட்டியாக செயற்பட்டு மக்களின் நன்மதிப்பை பெற்றவராக உயர்ந்து நின்றார்.

என்ன செய்ய கட்சி அரசியல் என்ற வேதாளம் அவர் மனதில் மீண்டும் முருங்கை மரம் ஏறி ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்தும் ஒரு வழி பாதையில் இறங்கி, ஐ. தே. க. வின் இருப்பிற்கு ஆப்படித்த பிற்போக்குவாத அரசியல் வங்குரோத்துகளோடு இணைந்து, செயற்பட்டு தனது அரசியல் வாழ்விற்கு தானே குழி தோண்டிக் கொண்டார்.

சமகால ஜனாதிபதி மேதகு அநுரகுமார திசாநாயக அவர்களும், அவரது கட்சியும் அதன் கொள்கை மீறல்களும்

முப்பந்தைந்து வருட. கால ஆயுத மற்றும் அரசியல் போராட்டங்களுக்கு பின்னால் சிவில் அமைப்புகளை ஒன்றினைத்துக் கொண்டு 2024 ஜனாதிபதி தேர்தலில் 50% சத விகித வாக்குகளை எந்த ஒரு வேட்பாளர்களும் பெற்றுக்கொள்ளாத நிலையில் அநுரகுமார திசாநாயக அவர்கள் 42.31% வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

பாராளுமன்றத் தேர்தலிலே அவர்களது NPP (JVP+சிவில் அமைப்புகள்) கட்சி 2/3 பெரும்பான்மை பெற்று ஆட்சி பீடமேறியது. மக்களுக்கு தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாத ஒரு அரசாங்கமாக NPP அரசாங்கமும் ஜனாதிபதி அவர்களும் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வெறுப்புடன் பதிவிட வேண்டிய கடப்பாடு எமக்கிருக்கிறது.

JVP கொள்கை மாறாத ஒரு கட்சி, நாம் எந்த ஒரு கட்சியினுடனும் கூட்டு சேர மாட்டோம், எங்கள் கொள்கைகளை கடந்து செயல்பட மாட்டோம் என்றெல்லாம் மார் தட்டிக்கொண்டு வீராப்பு பேசிய JVPயின் தலைவரும் நாட்டின் ஜனாதிபதியுமான மேதகு அநுரகுமார திசாநாயக அவர்கள் இன்று ஏனைய கட்சிகளின் தலைமைகளை (முன்னால் ஜனாதிபதிகள் கௌரவ மைத்திரிபால சிறிசேன மற்றும் கௌரவ ரணில் விக்ரமசிங்க ஆகியோர்) போன்று தமது கட்சியின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வளங்கி செயற்பட்டு வருகின்றமை உள்ளங்கை நெல்லிக்கணியாக தென்படுகிறது.

ஆம், நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் NPP கட்சிக்கு பாராளுமன்றத் தேர்தலை போன்று செல்வாக்கு நிறைந்ததாக இருக்கவில்லை. ஆட்சிக்கு வந்து 7 மாத காலத்திலேயே 23 இலட்ச வாக்குகள் குறைந்து போய் விட்டன. பாராளுமன்றத் தேர்தலில் 2/3 பெரும்பான்மையை கொண்ட NPPயால் அதிகப்படியான உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்ற இயலவில்லை என்பதோடு தனித்து ஆட்சியமைக்கவும் முடியவில்லை.

எனவே, யார் யாருக்கெல்லாம் எதிராக பிரச்சாரம் செய்தார்களோ எந்தெந்த கட்சிகளுகளை எல்லாம் தூசித்தார்களோ அவர்களுடனேயே கூட்டிணைந்து இன்று ஆட்சியதிகாரத்தை பகிர்ந்து தங்களது JVP அல்லது NPP கட்சிகளின் கொள்கை கோட்பாடுகளை ஓரங்கட்டி தூரத்தே ஒதுக்கிவிட்டு வழமையான அரசியல் சாக்கடைக்குள் சங்கமமாகி இருக்கிறார்கள்.

அரசியல் அநாகரீகம், ஊழல் குற்றச்சாட்டு, அரசியல் துஸ்பிரயோகம், நிதி மோசடி, நாட்டின் வளங்களை சூரையாடல் என்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்னால் அரசியல் தலைமைகள் மேற்கொண்டு வந்தன என்றும் அவற்றிற்கும் அவ்வாறான தலைவர்களுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் மேடைகளில் சூளுரைத்து ஆட்சி பீடமேறிய ஜனாதிபதி அவர்களும் அவரது கட்சியும் தங்களால் குற்றம் சுமத்தப்பட்டவர்களுடனேயே இணைந்து அரசியல் திருமணம் செய்து கொண்டு உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களை பகிர்ந்து கொள்வது தமது கட்சியை பாதுகாத்து வளர்த்துக்கொள்வது என்ற ஒரு வழி பாதையே என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை என்பது மட்டுமே உண்மை.

எனவே, முன்னால் ஜனாதிபதிகளான மேதகு மைத்திரிபால சிறிசேன மற்றும் மேதகு ரணில் விக்ரமசிங்க அவர்கள் எவ்வாறு நாட்டையும் மக்களையும் புறந்தள்ளி தங்கள் தங்களது கட்சிகளின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து தங்களை அரசியல் அநாதைகளாக்கி கொண்டார்களோ அதே போன்று தான் தனது JVP கட்சி வளர்ச்சிக்காக செயற்படும் சமகால ஜனாதிபதி மேதகு அநுரகுமார திசாநாயக அவர்களையும் மக்கள், அவரது மக்களினதும் நாட்டினதும் நலன் மறந்த கட்சி அரசியலை வலுப்படுத்தும் ஒரு சாதாரண அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் தனது தேர்தல் வாக்குறுதிகளை மறந்து சுயநலமாக செயற்படும் JVPயின் தலைவர் மாத்திரமே என்ற அடிப்படையிலும் நிரந்தரமாக புறக்கணிப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button