உலகம்

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் பெயரை பரிந்துரைத்த பாகிஸ்தான் – பின்னணி என்ன?

அமெரிக்க நாட்டு ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புக்கு வரும் 2026-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டுமென சமூக வலைதள பதிவு மூலம் பாகிஸ்தான் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உளள்து. அது குறித்து விரிவாக பார்ப்போம்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பாகிஸ்தான் தரப்பு பதிவிட்டுள்ளதாக உலக செய்திகளை வெளியிட்டு வரும் செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதில் அதிபர் ட்ரம்ப் முக்கிய பங்காற்றியதாகவும், இரு தரப்பிலும் நேரடியாக பேசியதாகவும் அவரை புகழ்ந்துள்ளது.

மேலும், இதற்கு முன்பு கடந்த காலங்களில் காஷ்மீர் விவகாரத்தில் சுமூக பேச்சுவார்த்தை தொடர்பாக ட்ரம்ப் முன்னெடுத்த நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் சுட்டிக்காட்டி உள்ளது.

அமைதிக்கான அவரது முயற்சிகள் பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு தொடர்ந்து பங்களிக்கும் என்று பாகிஸ்தான் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அமைதி வேண்டி அவர் முன்னெடுக்கும் முயற்சிகள் பெரிதும் போற்றத்தக்கது எனவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு குறித்து ட்ரம்ப் கருத்து: அண்மையில் அமைதிக்கான நோபல் பரிசு குறித்து ட்ரம்ப் வசம் கேட்கப்பட்டது. “நான் நான்கு அல்லது ஐந்து முறை வரை அதை பெற்றிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க மாட்டார்கள். ஏனெனில், தாராளமய வாதிகளுக்கு தான் அந்த விருது வழங்கப்படும்” என ட்ரம்ப் கூறியிருந்தார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது நான்தான் என ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வந்தார். இதற்கு பிரதமர் மோடி அண்மையில் மறுப்பு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தொலைபேசியில் ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி தெளிவுபடுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்க நாடு எந்தப் பங்கும் வகிக்கவில்லை என ட்ரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக கூறி இருந்தார். இதையடுத்து ‘இந்தியா – பாகிஸ்தான் என இரு நாட்டு தலை​வர்​களே போர் நிறுத்​தத்​துக்கு காரணம். இதில் அமெரிக்கா​வுக்கு எந்த பங்​கும் இல்​லை’ என்று அண்மையில் ட்ரம்ப் உறு​திபட தெரிவித்திருந்தார்.

ரஷ்யா – உக்ரைன் போர், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் என உலக அளவிலான போர் சூழலை தணிக்கும் முயற்சியை ட்ரம்ப் முன்னெடுத்துள்ளார். இஸ்ரேல் – ஈரான் மோதலில் அமெரிக்கா ஈடுபடுவது குறித்த முடிவை இன்னும் சில நாட்களில் அதிபர் ட்ரம்ப் அறிவிப்பார் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button