இலங்கை

மக்கள் எமக்கு வழங்கிய ஆணைக்கு மாறாக டக்ளஸுடன் பேச அனுமதி தந்தது யார்?; சிவஞானத்துக்கு சிறீதரன் எம்.பி.கடும் கண்டனமும் அதிருப்தியும் தெரிவிப்பு

உள்ளூராட்சி சபைகள் தேர்தலின் அடிப்படையில், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சில சபைகளில் ஆட்சியமைப்பதற்காக, தமிழ்த் தேசிய விரோதக் கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவைக் கோரியதற்கும், அதுவிடயம் சார்ந்து குறித்த கட்சியின் செயலாளரான டக்ளஸ் தேவானந்தாவை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்ததற்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் கந்தையா சிவஞானம் மீது அதியுச்ச கண்டனத்தையும், அதிருப்தியையும் பகிரங்கமாகப் பதிவு செய்வதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் கந்தையா சிவஞானத்துக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே சிவஞானம் சிறீதரன் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கீழ்வரும் விடயங்கள் மீதும் தங்களின் கவனத்தைக் கோருகிறேன்.

1. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்கொண்ட வீழ்ச்சியின் பின்னரும், தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தியே இந்த உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்களின் வாக்குகளை கணிசமான அளவில் பெற முடிந்தது.

2. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் வடக்கு — கிழக்கிலுள்ள சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து கலந்தாலோசிக்கும் பொருட்டு 2025.05.10 ஆம் திகதி வவுனியாவில் கூடிய கட்சியின் அரசியற்குழுக் கூட்டத்தில், பெரும்பான்மையைப் பெறமுடியாது போன சபைகளில் ஆட்சியமைப்பதற்கு தமிழ்த்தேசியக் கட்சிகளின் ஆதரவைக் கோருவதென்ற முடிவே மிகத்தெளிவாக எட்டப்பட்டது.

3. இவ்வாறான நிலையில், தமிழினப் படுகொலைக்கான நீதிகோரும் பயணத்தில் இதயசுத்தியோடு செயற்படும் அரசியற் பேரியக்கம் என்று கூறிக்கொள்ளும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, இனப்படுகொலையின் பங்காளியான ஈ.பி.டீ.பியுடன் இணைந்து சபைகளைக் கைப்பற்ற வேண்டுமென்று நினைத்துப்பார்ப்பதே மிகக்கீழ்த்தரமானது என கருதப்படுமிடத்து, தமிழ்த்தேசிய விரோதியும், இனப்படுகொலையாளியுமான டக்ளஸ் தேவானந்தாவோடு பேச்சுவார்த்தை நடாத்துவதென்ற தீர்மானம் யாரால், எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு, தமிழரசுக் கட்சியின் பதில் தலைவராகவும் குறித்த சந்திப்பில் ஈடுபட்டவராகவும் தங்களுக்கே உள்ளதென்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

4. 2004 ஆம் ஆண்டு ஊர்காவற்றுறையில் மக்கள் சந்திப்பில் ஈடுபடுவதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக சென்றபோது நாரந்தனை – தம்பாட்டி பகுதியில் வைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் மீது டக்ளஸ் தேவானந்தாவும் அவரது கட்சி உறுப்பினர்களும் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் எமது இனத்துக்காக உயிரிழந்ததையும், எமது கட்சியின் மேனாள் தலைவர் மாவை.சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் காயமடைந்திருந்த சந்தர்ப்பத்தையும் நாம் இவ்விடத்தில் நினைவிற்கொள்ள வேண்டும்.

5. மண்டைதீவு புனித தோமையார் தேவாலயக் கிணற்றில் 60 இற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்களை புதைத்துக் கொன்றதன் பின்னணியில் இலங்கை அரசும், அப்போதைய இராணுவத் தளபதி கொப்பேக்கடுவவும் நேரடித் தொடர்புறும் அதேயளவுக்கு டக்ளஸ் தேவானந்தாவும் அந்தப் படுகொலைகளின் பிரதான சூத்திரதாரிகளுள் ஒருவர் என்ற மெய்ப்பிக்கப்பட்ட உண்மையையும் இவ்விடத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.

6. மிக முக்கியமாக, செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் தற்போது நடைபெற்று வரும் அகழ்வுப்பணிகளின் மூலம் அவ்விடம் ஓர் மனிதப்புதைகுழியாக இனங்காணப்பட்டுள்ள நிலையிலும், அங்கு மீட்கப்படும் மனித எச்சங்களின் படுகொலையாளியாக இலங்கை அடையாளப்படுத்தப்படும் நிலையிலும், அதன் பங்காளியான டக்ளஸ் தேவானந்தாவுடன் வெறும் ஆட்சியதிகாரங்களுக்காக கூட்டமைக்க முற்படுகின்றமை இந்த மண்ணுக்கும், எமக்கு ஆணை வழங்கிய மக்களுக்கும் எமது கட்சி செய்யும் வரலாற்றுத் துரோகமாகவே அமையும்.

7. இத்தகைய சந்திப்பொன்று இன்று(வியாழன்)நடைபெறவுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிந்துகொண்ட பின்னர், பாராளுமன்ற உறுப்பினராகவும், கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராகவும் அது தொடர்பிலான எனது நிலைப்பாட்டை தெரியப்படுத்துவதற்காக தங்களுக்கு இருதடவைகள் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டிருந்ததுடன், தாங்கள் பதிலளிக்கவில்லை என்றதும் இந்த சந்திப்பை கைவிடுமாறு குறுஞ்செய்தி ஒன்றையும் அனுப்பியிருந்தேன்.

எனவே, எமது கட்சியின் மீது மக்களிடத்தே மீந்திருக்கும் கொஞ்சநஞ்ச அபிமானத்தையும் சிதைக்கும் வகையிலான இந்தக் கூட்டுத் தொடர்பில் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதுடன், கட்சியின் நலனிலும் மக்களின் மன உணர்வுகளிலும் மிகமோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய தீர்மானங்களை எதேச்சதிகாரத்தனமாகவும், தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர்களோடு இணைந்தும் தாங்கள் எடுத்த முடிவாகவே கருத முடிகிறது.

அதற்கமைய,தமிழ்த்தேசிய விரோதிகளோடு கூட்டிணைவதைக் காட்டிலும் பலமான எதிர்க்கட்சியாக இருப்பது மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்கும் தீர்மானமாக அமையும் என்றவகையில் கட்சி சார்பிலான அடுத்தகட்ட நகர்வுகளை முன்னெடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன் என அந்த கடிதத்தில் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button