முச்சந்தி

கிழக்குக் கடலில் கொள்ளையர் கும்பல்!

கிழக்கு மாகாணத்தில் மீனவர்கள் மீது திட்டமிட்ட வகையில் இடம்பெறும் குற்றச்செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  இடம்பெற்ற, கிழக்கு மாகாண பகுதியில் மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை தொடர்பில் பதிலளித்து உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் இதனை தெரிவித்தார்.

குறித்த பிரேரணையை முன்வைத்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர்ன்கூறுகையில்,

மிகவும் கவலையுடன் சபை ஒத்திவைப்பு வேளையில் இந்த பிரச்சினையை முன்வைக்கிறேன். இந்த பிரச்சினை கிழக்கு மாகாணத்தில் மீனவர்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் துன்புறுத்தல்களை வெளிப்படுத்தியுள்ளது. கல்முனை, கல்முனைகுடி, சாய்ந்தமருது,அம்பாறை மாவட்டம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த கடலோர மீனவச் சமூகங்கள் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு அமைப்புசார் கொள்ளைக்கூட்டத்தால் திட்டமிட்ட வகையில் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

ஆழ்கடலில் பிடிக்கும் மீன்கள் கொள்கையடிக்கப்படுகிறது.மீனவ உபகரணங்கள் அழிக்கப்படுகின்றன.இத்தனை காலமாக இதற்கு எதிராக நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.இந்த கொள்ளைச் செயல்களுக்கு தலைமை வகிப்பவரின் பெயரை அனைவரும் அறிவார்கள்.அந்த பெயரை இங்கு சொல்வது நாகரீகமல்ல, அவர் களுவாஞ்சிக்குடி பகுதியில் வேகப்படகுகளை கொண்டு இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்.அவர் தனிமனிதரல்ல அவருக்கு பின்னால் பெரிய கொள்ளை கூட்டமே உள்ளது.

முன்னாள் போராளி என்று தன்னை குறிப்பிட்டுக்கொண்டு பாராளுமன்றத்துக்கு வந்து, தற்போது பதவி இழந்துள்ளவர்களின் குழுக்கள் இந்த சம்பவத்தில் தொடர்புப்பட்டுள்ளார்கள்.எமது மீனவர்கள் குற்றவாளிகலல்ல, இவர்கள் கடலுக்கு செல்ல அச்சமடைந்துள்ளார்கள் .இந்த கொள்ளை கூட்டத்தால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசேட கவனம் செலுத்தி பதிலளிக்க வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய எம்.ஏ.ஹிஸ்புல்லா முன்வைத்த பிரேரணையை நான் ஆமோதிக்கிறேன்.இது நீண்டகால பிரச்சினையாகும்.இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.அம்பாறை,சாய்ந்தமருது,ஒலுவில், காத்தான்குடி,திருகோணமலை பகுதி மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் போது கரையில் உள்ள ஒரு கொள்ளைக்கூட்டம் மீனவர்களை தாக்கி சொத்துக்களை கொள்ளையடிக்கிறார்கள்.இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, திருகோணமலை பகுதியில் மீனவர் ஒருவர் மீது அண்மையில் துப்பாக்கிச்சூட்டு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.15 அல்லது 20 நாட்களுக்கு முன்னர் மீனவர் ஒருவர் கடற்படையினரால் தாக்கப்படும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பேசிய போது பொலிஸ் அதிகாரி குறிப்பிடுகிறார் வடக்கில் அவ்வாறான முறைப்பாடு ஏதும் பதிவு செய்யவில்லை என்று.

எமது தேசிய தலைவன் வடக்கில் ஆண்ட காலத்தில் எமது படகுகள் அச்சமில்லாமல் கடலுக்கு சென்றன.கடற்படையினர் எம்மவர்களை கொன்றார்கள். இப்போது நிலைமை மோசமாகவுள்ளது. அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய பணித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.அரசியல்வாதிகள் முட்டாள்களாக இருக்கலாம், இவர்களின் பொய்யால் ஏமாறுவதற்கு தமிழர்கள் முட்டாள்கள் அல்ல என்றார்.

இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், இந்த சம்பவம் குறித்து முப்படைகளின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன். கிழக்கு மாகாணத்தில் உள்ள இந்த கொள்ளையர் கும்பல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் என்றார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர கிழக்கு மாகாண மீனவர்கள் தாக்கப்பட்டமை குறித்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திட்டமிட்ட வகையில் இடம்பெறும் இவ்வாறான குற்றச்செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க பணிக்கப்பட்டுள்ளது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button