முச்சந்தி

உக்ரைனின் அதிரடியில் அழிந்த போர் விமானங்கள்….  ரஷ்யாவின் பதிலடி- அணு ஆயுத தாக்குதலா?….  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(உக்ரைனிய ஆபரேஷன் சிலந்தி வலை (ஸ்பைடர் வெப்) தாக்குதல் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட ‘பேர்ல் ஹார்பர்’ அழிவு என்ற கருதலாம். ரஷ்ய வான் தளங்கள் மீதான உக்ரைன் ட்ரோன் தாக்குதல் மிக கச்சிதமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.)

போர் முனைகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான கிலோ மீற்றர்கள் தூரத்துக்கு அப்பால் ரஷ்யாவின் ஆர்ட்டிக் மற்றும் தூர கிழக்கு சைபீரியாப் பகுதிகளில் அமைந்திருந்த முக்கிய விமானத் தளங்களின் மீதே மிகப் பெருமெடுப்பிலான ட்ரோன் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

ரஷ்யாவிடம் உலகிலேயே அதிக அளவில் அணு ஆயுதங்கள் இருந்தும் கூட உக்ரைன் தொடர்ச்சியாக ரஷ்யா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த வார இறுதியில் உக்ரைன் நடத்திய திட்டமிட்ட டிரோன் தாக்குதல் காரணமாக 41 ரஷ்ய போர் விமானங்கள் அழிக்கப்பட்டு உள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. முக்கியமாக ரஷ்யாவின் குண்டு போடும் போர் விமானங்களான Tu-95 மற்றும் Tu-22 அழிக்கப்பட்டது. உக்ரைன் மீது குண்டுகளை வீச ரஷ்யா இந்த போர் விமானங்களை பயன்படுத்தி வந்தது. ரஷ்ய இராணுவ விமான நிலையங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.

ரஷ்யாவின் பேர்ல் ஹார்பர் ?

ரஷ்ய விமானத் தளங்கள் மீதான தாக்குதலை அமெரிக்க நாட்டின் பேர்ல் ஹார்பர் (Pearl Harbour ) தாக்குதலுக்கு ஒப்பானது என இராணுவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

உக்ரைனின் ஆச்சரியமான பேரழிவை ரஷ்யாவிற்கு தந்த தாக்குதலாகும். ஜப்பானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் போர் இல்லாதபோது பேர்ல் ஹார்பர் மீதான தாக்குதல் நடந்தமை குறிப்பிடத்தக்கது. கிரெம்ளின் தொடர்ந்து உக்ரைனின் நகரங்கள் மீது பாரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், உக்ரைனிய
தாக்குதல் மாஸ்கோவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

உக்ரைனிய தரப்பு அறிக்கைகளின்படி, நாற்பது விமானங்கள் தாக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையைத் திட்டமிட்டு செயல்படுத்திய உக்ரைனின் பாதுகாப்பு சேவை – இந்தத் தாக்குதல் ரஷ்யாவின் க்ரூஸ் ஏவுகணைகளை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட 34 சதவீத மூலோபாய குண்டுவீச்சு விமானங்களை அழித்ததாகக் கூறுகிறது.

“ஒப்பரேஷன் ஸ்பைடர் வெப்”

உக்ரைனில் இருந்து பல ஆயிரக்கணக்கான கிலோ மீற்றர்கள் தொலைவில் சைபீரியாவில் அமைந்துள்ள பெலாயா(Belaya), தூர வட கிழக்கில் அமைந்துள்ள ஒலெனியா (Olenia), மற்றும் டியாகிலெவோ (Dyagilevo), இவானோவோ (Ivanovo) ஆகிய விமானத் தளங்களே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.

நீண்ட காலமாக திட்டமிடப்பட்டுவந்த இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள ட்ரோன் விமானங்கள் கப்பல் சரக்குக் கொள்கலன்களைச் சுமந்து செல்கின்ற ட்ரக் வாகனங்கள் மூலமே வான் தளங்களை அண்டிய பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன என்ற தகவலை உக்ரைன் பாதுகாப்புச்சேவை வட்டாரங்கள் வெளியிட்டிருக்கின்றன.

வெடிகுண்டு தாங்கிய ட்ரோன்கள் ட்ரக் கொள்கலன்களின் கூரைப் பகுதிகளுக்குள் மரத்தினால் வடிவமைக்கப்பட்ட மறைவிடங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்டுள்ளன. மரத்தினாலான பகுதிகள் ரிமோர்ட் கொன்ட்ரோல் முறையில் திறக்கப்பட்டதும் அவை அங்கிருந்து மெலெழுந்து பறந்து சென்று ரஷ்ய வான் தளங்களைத் தாக்கும் விதமாகத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்துவது போன்று ட்ரக் வாகனம் ஒன்றின் மேற்பகுதியில் இருந்து ட்ரோன்கள் கிளம்பிப் பறக்கின்ற வீடியோக் காட்சிகளும் வெளியாகியுள்ளன. சைபீரியா வரை ஆழ ஊடுருவி நடத்தப்பட்ட இத் தாக்குதல் நடவடிக்கைக்கு “ஒப்பரேஷன் ஸ்பைடர் வெப்” ( Operation Spiders Web) என்று பெயரிடப்பட்டுள்ளது.

ரஷ்ய 40 போர் விமானங்கள் அழிப்பு:

ரஷ்யாவின் ஐந்து விமானப்படை தளங்கள் மீது உக்ரைன் ராணுவம் ட்ரோன்கள் மூலம் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட ரஷ்யப் போர் விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவிற்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

ஜூன் முதலாம் திகதி ஞாயிறு நடத்தப்பட்ட உக்ரைனின் பெருந் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள ரஷ்ய அரசு, எதிர்காலத்தில் எத்தகைய பதில் தாக்குதல் நடத்தப்படலாம் என்பது தான் தெரியவில்லை.

அணு ஆயுதங்களைச் சுமந்துகொண்டு நீண்ட தூரம் பறக்கவல்ல பல சண்டை விமானங்களும் அவற்றில் அடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா சந்தித்துள்ள இந்த இழப்பு எண்ணிக்கையைச் சுயாதீனமான வட்டாரங்கள் இன்னமும் உறுதிப்படுத்தவில்லை. எனினும் விமானங்கள் பல எரிந்து வெடித்துச் சிதறுகின்ற காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன.

தாக்குதலுக்கு உள்ளான ரஷ்ய போர் விமானங்களில் அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் Tu-95, Tu-22, M3 மற்றும் A-50 போர் விமானங்களும் அடங்கும் என உக்ரேனிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைதிப் பேச்சு முறியுமா ?

இதேவேளை கடந்த திங்களன்று (2/6/25)துருக்கியின் இஸ்தான்புலில் இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் ரஷ்ய – உக்ரேன் அதிகாரிகள் இடையே நடைபெற்றது. பேச்சுவார்த்தை தீர்க்கமான முடிவுகள் இன்றி முறிவடைத்துள்ளது.

இரண்டு நாடுகளுக்கும் இடையே இந்தப் போரை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது என்பதில் ஒருமித்த கருத்து ஏற்படாமல் இருப்பதால் பேச்சுவார்த்தை மீது குறைவான எதிர்பார்ப்புகளே இருந்து உள்ளமை தெரிகிறது.

2022 பெப்ரவரியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உக்ரேன் மீது முழு அளவிலான போரைத் தொடங்கினார். 2014இல் ரஷ்யா ஆக்கிரமித்த உக்ரேனிய பகுதியான கிரைமியா உடன் சேர்த்து தற்போது 20% உக்ரேன் நிலப்பரப்பு ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

தற்போது இந்த தாக்குதலின் பின்னர் ரஷ்யாவின் பதிலடி எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். உக்ரேன் மார்தட்டுவது போல ரஷ்யா பாரிய இழப்பை சந்தித்து இருந்தால், மாஸ்கோவின் பதிலடி அகோரமாகவே இருக்கும் என்பதை ஊகிக்கலாம்.

இந்த வான் தாக்குதல் ஆபரேஷனுக்கான தங்களுடைய அலுவலகம் ரஷ்யாவின் பிராந்தியங்கள் ஒன்றில் அதன் எஃப்.எஸ்.பிக்கு (FSB)அடுத்தே இருந்தது என்று ஜெலென்ஸ்கி தெரிவித்து உள்ளார். எஃப்.எஸ்.பி என்பது ரஷ்யாவின் சக்தி வாய்ந்த பாதுகாப்பு அமைப்பு ஆகும்.
அத்துடன் இந்தத் தாக்குதல்களில் சம்மந்தப்பட்ட நபர்கள் அதற்கு முன்பே பாதுகாப்பாக ரஷ்யாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இரண்டு நாட்டு போர் அடுத்த கட்டத்திற்கு சென்று உள்ளது. போர் கடுமையான நிலையை அடைந்து உள்ளது. இதற்கு பதிலடி தர ரஷ்யா மிக கடுமையான முடிவுகளை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது உக்ரைனுக்கு பதிலடி கொடுக்க ரஷ்யா அடுத்த எந்த கட்டத்திற்கும் செல்லும் என்றும் கூறப்படுகிறது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button