கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல கொடியேற்றம் இன்று

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் 191 ஆவது வருடாந்த திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. கொடியேற்றத்துக்கு முன்னதாக தமிழ், சிங்கள மொழிகளில் காலை 6 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
கொடியேற்றத்தை அடுத்து எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தினந்தோறும் மாலை 6 மணிக்கு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழாவுக்கான நவநாள் வழிபாடுகள் நடைபெறும்.
இதையடுத்து எதிர்வரும் 12ஆம் திகதி இரவு 7 மணிக்கு கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் வெஸ்பர் ஆராதனை ஒப்புக்கொடுக்கப்படும்.
திருவிழா தினமான 13 ஆம் திகதியன்று அதிகாலை 4 மணிக்கு தமிழ் மொழியிலும், 5 மணிக்கு சிங்கள மொழியிலும், 6 மணிக்கு தமிழ் மொழியிலும் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும்.
இதேவேளை, திருவிழா பாடல் திருப்பலிகள் அன்றைய தினம் காலை 8 மணிக்கு கொழும்பு உயர் மறை மாவட்ட துணை ஆயர் அன்டன் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் தமிழ் மொழியிலும், காலை 10 மணிக்கு கொழும்பு உயர் மறை மாவட்ட துணை ஆயர் மெக்ஸ்வெல் சில்வா ஆண்டகையின் தலைமையில் சிங்கள மொழியிலும், நண்பகல் 12 மணிக்கு கொழும்பு உயர் மறை மாவட்ட துணை ஆயர் ஜே.டி. அன்தனி ஆண்டகையின் தலைமையில் ஆங்கில மொழியிலும் ஒப்புக்கொடுக்கப்பட ஏற்பாடாகியுள்ளன.
புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி கொட்டாஞ்சேனை புனித லூசியாள் பேராலயத்தில் அன்றைய தினம் மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8 மணியளவில் புனித அந்தோனியார் திருத்தலத்தை வந்தடைந்து நற்கருணை ஆசீர்வாதம் மற்றும் புனித அந்தோனியாரின் ஆசீர்வாதத்துடன் நிறைவு பெறும்.
![]()