சாதாரண பிரஜைகளின் கொலைகள் சாதாரணமாகிவிட்டது இலங்கையை ஆள்வது பாதாளக் குழுக்களே!; விமல் கூறுகிறார்

பாதாள குழுக்களே தற்போது நாட்டை ஆளுகின்றது என்றும், அரசாங்கம் முறையான நடவடிக்கை எடுக்காது மௌமாக இருக்கின்றது என்றும் தேசிய சுதந்திர முன்னணி தலைவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை வழக்கு நடவடிக்கையொன்றுக்காக கொழும்பில் நீதிமன்றத்திற்கு சென்று திரும்பியவேளையில் ஊடகவிலாளர்களை சந்தித்த போதே வீரவன்ச இவ்வாறு கூறினார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது தினசரி கொலைகள் இடம்பெறுகின்றன. சாதாரண பிரஜைகள் கொலை செய்யப்படுவது சாதாரணமாகிவிட்டது. இப்போது பாதாள குழுக்களுக்களே இலங்கையை ஆளுகின்றன. அவர்களே சட்டதிட்டங்களை செயற்படுத்துகின்றனர். அந்த நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டமை தொடர்பிலும், அதற்கு இடமளித்து அரசாங்கம் பார்த்துக்கொண்டிருப்பது தொடர்பிலும் எமக்கு கவலையாக உள்ளது. ஆனால் பல்வேறு கதைகளை கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இப்போது இந்த விடயத்தில் மௌமாக இருப்பது தொடர்பில் நாங்கள் மிகவும் கவலையடைகின்றோம்.
இதேவேளை சபைகளை அமைப்பதற்கு முன்னர் இந்த நாட்டில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவே வேண்டும். மக்கள் இப்போது பெரும் துன்பத்திலேயே இருக்கின்றனர். உலக வங்கியின் அறிக்கையின் பிரகாரம் நாட்டில் 51 வீதத்திற்கும் அதிகமானவர்கள் வறுமை நிலையில் இருக்கின்றனர். அவர்கள் இரண்டு நேரமே உண்கின்றனர். இவ்வாறான நாட்டில் பூச்சாண்டி கதைகளை கூறிக்கொண்டிருப்பதில் பலனில்லை. வேலை செய்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றி மாதம் மாதம் அதன் முன்னேற்றம் தொடர்பில் அறிவித்தே முன்னால் செல்ல வேண்டும். ஆனால் மக்களின் கவலைகள் தொடர்பில் எவ்வாறான வேலைத்திட்டங்கள், புதிய தீர்மானங்கள் எதனையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. இதனை இடதுசாரி அரசாங்கம் என்று கூறினாலும் இதனை போன்று வலதுசாரி அரசாங்கம் இதற்கு முன்னர் உருவாகியதில்லை என்றார்.
![]()