இலங்கையின் யுத்தக் குற்றங்களில் சர்வதேச கரிசனை குறைந்துள்ளது

தமிழ் மக்களுக்கான நீதியானது முழுமையாக கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனைய நாடுகளில் தற்போது இடம்பெற்றுவரும் யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமை காரணமாக இலங்கையில் இடம்பெற்றவற்றுக்கான சர்வதேச கரிசனை குறைவாக காணப்படுகின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
இம்மாதம் சுவீடன் ஸ்டாக்ஹோம் என்னும் இடத்தில் 12 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை இடம்பெற்ற அமைதி மற்றும் மேம்பாட்டு மன்றம் 2025 என்னும் கருத்தரங்கில் விசேட அழைப்பின் பெயரில் இரா.சாணக்கியன் எம்.பி. கலந்துகொண்டிருந்தார்.
இலங்கையிலிருந்து வழக்கு ஆய்வு என்னும் தொனிப்பொருளில் இடம்பெற்ற கூட்டு உருவாக்கம் மூலம் ஒருமித்த கருத்தை உருவாக்குதல் என்னும் ஆலோசனைக் கூட்டத்தில் பேச்சாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இரா.சாணக்கியன் எம்.பி. ,
குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற அநீதிகள், இனப் படுகொலைகள் மற்றும் அரசியல் கொலைகள் சம்பந்தமான சர்வதேச பார்வையானது குறைவடைந்துள்ளது. இதற்கான காரணம் இலங்கையில் 2009ஆம் ஆண்டு முடிவடைந்த உள்நாட்டுப் போருக்குப் பின்னரும் உலகில் பல பகுதிகளில் யுத்தக்குற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வகை மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறிய நடவடிக்கைகள் தொடர்ந்தும் சில நாடுகளில் இடம்பெற்றன. இடம்பெற்று வருகின்றன.
இவற்றில் குறிப்பிடத்தக்க நாடுகள் ஈராக், சிரியா ,மியான்மார், ரஷ்யா, இஸ்ரேல், உக்ரைன், பாலஸ்தீனம். இந்நாடுகள் அனைத்தும், யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையதாக சர்வதேச அமைப்புகளால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கான முன்னுரிமை காரணமாக இலங்கையில் இடம்பெற்றவற்றுக்கான கரிசனை குறைவாக காணப்படுகின்றது.
இன்றளவில் யுத்தம் மௌனிக்கப்பட்டும் நாட்டின் அரசியல் நிலைமை பொருளாதாரம் என்பன ஸ்திரனமற்றுக் காணப்படுகின்றது அதிலும் தமிழ் மக்களுக்கான நீதியானது முழுமையாக கேள்விக்குறியாகவே உள்ளது. இருப்பினும் சர்வதேசத்தின் பார்வை எமது நாட்டின் மீதும் மக்களின் மீதும் அழுத்தமாக பட வேண்டும். ஆரோக்கியமான பொருளாதார பலம்மிக்க நீதியான நாட்டை கட்டியெழுப்புவதற்கு சர்வதேசத்தின் அழுத்தம் மிக இன்றி அமையாததாக காணப்படுகின்றது என்றார்.
![]()