கவிதைகள்
நடைப்பயிற்சி… கவிதை … முல்லைஅமுதன்

நடைப்பயிற்சிக்காக இறங்கினேன்.
நேற்று புன்னகைத்த இலை ஒன்று
சருகாகிய கதை சொல்கிறேன் என சொல்லியது.
நடையை நிறுத்தி கேட்டேன்.
என் கதை போலவே இருந்தது.
இருவரும்
வாழ்ந்துகெட்டவர்களோ என
மனது நினைத்துக்கொண்டது.
ஒற்றையாய் அந்த இலையை பொறுக்கிக்கொள்ள
வெள்ளை ஆடு ஒன்று வந்து கொண்டிருக்க..
தெருவை பெருக்கிக்கொண்டிருந்த
பழனிச்சாமியின் கண்களில் பட்டதை நானும் அறிவேன்.
தனிமை எனக்கானது மட்டுமில்லை..
குனிந்து இலையை பத்திரமாக
குழந்தை போல தூக்கி..
பலரும் பார்த்திருக்க,
சட்டையில் வைத்துக்கொண்டேன்..
![]()