இலங்கை

சஜித்தை வீழ்த்த ஒரு குழு தீவிரம்; ஐ.ம.ச.வி.னுள் உட் கட்சி மோதலால் பின்னடைவு 

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் அக்கட்சியிலுள்ள ஐ.தே.க. ஆதரவாளர்களாக செயற்படும் சில சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையில் காணப்படும் கருத்து வேறுபாடுகள் காரணமாகவே உள்ளூராட்சி தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை அடையமுடியவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தலைமையின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தி அதிக அதிகாரத்தைப் பெற்றிருந்தாலும், கட்சிக்குள் இருந்து அவருக்கு போதுமான ஆதரவு கிடைத்திருந்தால், ஐக்கிய மக்கள் சக்தி இன்னும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்க முடியும் என்று பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

கட்சியின் சில சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் தவிர, சிரேஷ்ட உறுப்பினர்கள் என்று கூறிக் கொள்ளும் கட்சிக்குள் இருக்கும் ஒரு குழுவிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாசவுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுப்பதுவும் அவரை கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கும் இந்த குழு முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் உள்ளூராட்சி தேர்தலின் வெற்றியை சீர்குலைக்கும் வகையில் அவர்கள் எவ்வித பிரசார நடவடிக்கையிலும் பங்குபற்றவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக உள்ளூராட்சி தேர்தல் காலப்பகுதியில் இம்தியாஸ் பாக்கீர் மார்க்காரின் இராஜினாமா, இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக சமூக ஊடக பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பு மற்றும் கொழும்பில் மே தினத்தை நடத்துவதற்கு எவரும் முன்வராமை போன்ற இடையூறு நடவடிக்கைகளும் இந்த குழு முன்னெடுத்ததாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் கட்சியின் தலைமையை மாற்றுவதற்கும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஐக்கிய மக்கள் சக்தியை இணைக்கும் முயற்சிகளில் சில சிரேஷ்ட உறுப்பினர்கள் முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளமையால், சஜித் பிரேமதாசவுக்கும் அக்கட்சியிலுள்ள ஐ.தே.க. ஆதரவாளர்களாக செயற்படும் சில சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையில் காணப்படும் கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button