கவிதைகள்
கவிதையைக் காணவில்லை… கவிதை… முல்லைஅமுதன்

கதவை
திறந்து வந்த காற்று
அருகில் உட்கார்ந்து கொண்டது..
நீண்ட நாட்களாகிவிட்டனவே..
என்னையே
பார்க்க வந்திருப்பதாக நினைத்தேன்..
உள்ளே கழுத்தை வளைத்து
அடுக்களையைப் பார்த்தேன்.
வழமையாக,
விருந்தினர் வந்துவிட்டால்
தேநீருடன் வருபவள்
வரவில்லை..
பக்கத்து வீட்டிற்க்குப் போயிருப்பாளோ?
கோப்பிப்பொடி இருக்கோ?
சர்க்கரை இருக்கோ??
திரும்பிப்பார்த்தேன்..
சொல்
என்பது போல கண்ணை நிமிர்த்தினேன்..
புன்னகைத்தது…ஏளனமாக..
உன்னைப்பார்க்க வரவில்லையே..
கவிதையுடன்
சற்றுப்பேசலாம் என்றே வந்தேன்..
கவிதையைக் காணவில்லை…
காற்று அறைக் கதவை
உக்கிரமாகச் சாத்தியபடி நகர்ந்தது..
என்னிடம்
பேசும் சொற்கள் தொலைந்திருந்தன.
![]()