கவிதைகள்
பெய்யும் மழை… கவிதை… முல்லைஅமுதன்

இன்று உன்னுடனேயே வந்துவிடவா?
கேட்டாள்.
தாராளமாக…
காற்று உள்ளே வர…. உடைந்த சன்னல்..
சூரிய வெளிச்சம் …அவ்வப்போது பெய்யும் மழை…
அடிக்கடி வந்து போகும் ஊர்வன…
குளிப்பதற்கு,குடிப்பதற்கு
குளம் நோக்கிப் பயணிக்கவேண்டும்…
எப்போதாவது வந்து போகும் தபால்காரன்..
சலிப்படைந்து
திட்டிக்கொண்டே தேநீர் தரும் சுப்பையா..
தேநீருடனேயே கடனையும் ஞாபகமூட்டுவார்.
சுவரெல்லாம் கிறுக்கிய பகுதிகல் போக,
உடைந்த பகுதிகள் அதிகம் தான்.
ஒரு உடைந்த மேசை..
கிழிந்த பாய்..அழுக்கேறிய தலையணை..ஆங்காங்கே
சிதறிய பத்திரிகை நறுக்குகள்.
எழுதி முடிக்கப்படாத நாவல்…
யாவற்றையும்
சீர் செய்யவேண்டும்.
அப்புறம் வாயேன்..நிரந்தரமாக..
![]()