முச்சந்தி

துப்பாக்கிச் சூடுகளுக்கு காரணம் என்ன?

நாட்டில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் பெரும்பாலானவை போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பாதாள குழுக்களுக்கு இடையிலான மோதலுடன் தொடர்புடையவை என்றும், எவ்வாறாயினும் இதனுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் நாட்டில் அதிகரித்துள்ள துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அமைச்சரவை பேச்சாளர் மேலும் குறிப்பிடுகையில்,

பாணந்துரையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளின்படி இவற்றில் பெரும்பாலானவை போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பாதாள குழுக்களுக்கு இடையிலான மோதல் என்றே தெரியவந்துள்ளது. இது தொடர்பில் அரசாங்கமும், பொலிஸாரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதுடன், அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாதவாறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளுக்கு சென்றிருந்தால் அவர்களை அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இதேவேளை ஒரு காலத்தில் போதைப் பொருள் வர்த்தகம், பாதாள குழுக்கள், அரசியல் அதிகாரங்கள், சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸாரில் சிலர் தொடர்புடையதாக செயற்படுத்தப்பட்ட வலையமைப்பை நாங்கள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இது தொடர்பான நடவடிக்கைகளை கண்காட்சி போன்று நடத்தப் போவதில்லை. நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன்னால் கொண்டு வர நடவடிக்கை எடுப்போம். இடம்பெறும் கொலை சம்பவங்கள் தொடர்பில் முன்னெடுக்கக் கூடிய உயர்ந்தபட்ச நடவடிக்கைகளை எடுத்து அவற்றை தடுக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button