முச்சந்தி

வடக்கில் கட்டப்படும் விகாரைகள்!… தெற்கில் அழிந்த சைவ ஆலயங்கள்!!…  நவீனன்

(அநுராதபுரத்தில் 117 சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டன அல்லது வரலாற்றில் இருந்து காணாமல் போயுள்ளன. பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான தொண்டீஸ்வரம் ஆலயம் முற்றாக அழிந்துவிட்டது அல்லது அழிக்கப்பட்டு விட்டது)
ஈழத்தின் தொன்மையான பஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்றான தொண்டீஸ்வரம் சிவன் கோவில் இருந்த இடமே தெரியாமல் அழிக்கப்பட்டு விட்டது.
தென் இலங்கையில் உள்ள தேவேந்திர முனையில் மாத்தறையில் காணப்பட்டதாகவும் போர்த்துக்கீசர் காலத்தில் அழிவுற்றதாகவும் வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.
பஞ்ச ஈஸ்வரங்கள் நிலை:
இலங்கையில் பல சிவன் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் பஞ்ச ஈஸ்வரங்கள் எனப்படும் ஆலயங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன.
சிலாபம் நகரில் முன்னேஸ்வரம், திருகோணமலையில் திருகோணேஸ்வரம், மன்னாரில் திருகேதீஸ்வரம், கீரிமலையில் நகுலேஸ்வரம், மாத்தறையில் தொண்டீஸ்வரம் என ஐந்து சிவன் ஆலயங்கள் பஞ்ச ஈஸ்வரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இவ்வாறு காணப்படும் பஞ்ச ஈஸ்வரங்களில் மாத்தறை பகுதியிலுள்ள தொண்டீஸ்வரம் ஆலயம் மாத்திரம் அழிவடைந்து, ஆலயம் இருந்தமைக்கான அடையாளங்களே முற்றாக இல்லாது போயுள்ளன.
தொண்டீஸ்வரம் சிவன் கோவில்:
விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முதல் இலங்கையில் பஞ்ச ஈஸ்வரங்கள் இருந்தன. தொண்டீஸ்வரம் மாத்தறையில் இருந்தது. இன்றைக்கு அந்த ஆலயம் முற்றாக அழிந்துவிட்டது அல்லது அழிக்கப்பட்டு விட்டது.
பழமையான பஞ்ச ஈஸ்வரங்களில் ஒரு ஆலயமான தொண்டீஸ்வரம் என்கின்ற தொன்மை வாய்ந்த ஆலயத்தை ஏன் இன்னும் கட்டுவதற்கு முயற்சிக்கவில்லை என்பது தெரியவில்லை.
தொண்டீஸ்வரம் சிவன் கோவில் தொண்டீஸ்வரம் ஆலயம் காணாமல் போனதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. மாத்தறை மாவட்டத்தின் தேவேந்திரமுனை (தெவிநுவர) எனும் பகுதியிலேயே இந்த ஆலயம் இருந்ததாக நம்பப்படுகின்றது.
எனினும், இந்த ஆலயம் தொடர்பான எந்தவித தகவல்களும் தற்போது இல்லாது போயுள்ளதுடன், ஆலயம் முழுமையாக அழிவடைந்து காணாமல் போயுள்ளது.
தேவேந்திரமுனை (தெவிநுவர) பகுதியிலுள்ள பௌத்த விகாரையொன்றில் மாத்திரம், பழமை வாய்ந்த சிவலிங்கம் ஒன்று மற்றும் ஆலயம் ஒன்று காணப்பட்டமைக்கான பழமை வாய்ந்த கற்கள் சிலவற்றை அங்கு காண முடிகின்றது.
தேவேந்திரமுனை பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற விஷ்ணு ஆலயத்திற்கு அருகாமையில் ஒத்பிலிம புராண விகாரை வளாகத்தில் இந்த சிவலிங்கம் மற்றும் சில சான்று பொருட்களை காண முடிகின்றது.
இவ்வாறு காணப்படுகின்ற இந்த சான்றுகளே, தொண்டீஸ்வரம் ஆலயத்தின் சான்றுகளாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. எனினும், இதை தவிர தேவேந்திரமுனையின் எந்தவொரு இடத்திலும் வேறு தொண்மை வாய்ந்த சான்றுகளை அடையாளம் காண முடியவில்லை.
 
விகாரைகள் புணர் நிர்மானம் :
ஆனால் அழிந்த பல புராதண விகாரைகள் சிறிலங்கா எங்கும் புணர் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. விகாரைகள மீள நிர்மாணிக்கும் சிங்கள அரசு அழிந்து போன சைவ ஆலயங்களை ஒரு போதும் புணர் நிர்மானிப்பதே இல்லை எனலாம்.
உதாரணமாக பொலன்னறுவை நகரில் சோழர்களினால் நிர்மாணிக்கப்பட்ட
சிவன் ஆலயத்தை மீள நிர்மாணிக்க அரசாங்கம் ஒரு போதும் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆனால் தமிழரின் பாரம்பரிய பகுதிகளில் பௌத்த விகாரைகளை தொடர்ந்தும் நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்து வருவதான தகவல்கள் பல வெளியாகியுள்ளன.
தேவேந்திர முனைப்பகுதியில் கோபுரமும் விக்கிரகங்களும் அகற்றப்பட்டு வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் இன்றி தொல் பொருளியல் திணைக்களத்தினால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
அருகாமையில் வசிக்கும் தென் பகுதி சிங்கள மக்களினால் இது இராவணனினால் வழிபட்ட தலமாகவும் கருதப்படுகிறது.
சிங்கள ஊராக மாறும் தமிழ் நிலம் :
மாதுறை (பெரிய துறைமுகம்) என்ற பண்டைய தமிழ்ப் பெயர் தான் மாத்தறை என அழைக்கப்படுகிறது. இது போல கள்ளுத் துறை என்ற தமிழப்பெயர் களுத்தற என்றானது போல சிங்கள ஊராக களுத்தறை என மாறி இருக்கலாம் என்றும் கூப்படுகிறது.
அதேபோன்று, மாதோட்டம் என்பது மாதொட்ட(பெரிய துறைமுகம்) என்று இருந்திருக்கலாம். இன்று ஹம்பன்தொட்ட என்றிருக்கும் ஊர் பண்டைக் காலத்தில் பிறநாடுகளில் இருந்து ஹம்பன் என்றழைக்கப்பட்ட படகுகளில் வணிகர்கள் இலங்கைக்கு வந்திறங்கிய துறையாக (தொட்ட) இருந்தது என்றும் சொல்லப்படுகிறது.
ஆனாலும் மறுக்க முடியாத ஒரு உண்மை என்னவென்றால் தமிழர்கள் வடக்கு கிழக்கின் எல்லைகளுடன் மட்டுப்படுத்த தங்கள் ஆலய இருப்பை தக்கவைத்தமை என்பதாகும்.
பழமையான தொண்டீஸ்வரம் காணாமல் போனதா?
இலங்கையில் பழமையான தொண்டீஸ்வரம் சிவன் கோவில் எப்படி காணாமல் போனது என்று எவருக்கும் தெரியவில்லை. இலங்கையிலுள்ள பல சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டு வந்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
அநுராதபுரம் மாவட்டத்தில் மாத்திரம் 117 சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
போத்துக்கீசரால் உடைக்கப்பட்ட தொண்டீசுவரம் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சிவன் கோயிலாகும். இக்கோயில் போத்துக்கீசர் ஆட்சியின் போது போத்துக்கீசரால் உடைக்கப்பட்டு (Souza d’Arronches) கத்தோலிக்க கிறித்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் தொல்லியல் தகவல் மூலம் அறியமுடிகிறது.
பஞ்ச ஈஸ்வரங்கள் என்று குறிப்பிடப்படும் ஐந்து சிவாலயங்களில் நகுலேச்சரம், திருக்கோணேச்சரம், திருக்கேதீச்சரம், முன்னேசுவரம் ஆகிய நான்கும் பல்வேறு இடர்பாடுகள் மத்தியில் இன்றும் சிவாலயங்களாகத் திகழ்கின்றன.
அதேவேளை தெற்கிலிருந்த தொண்டீசுவரம் இலங்கையை ஆக்கிரமித்த போத்துக்கீசியரால் சிதைக்கப்பட்டது. இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது ஒரு பெரிய சிவலிங்கம் ஒன்று ஆய்வாளர்களால் அகழ்ந்து எடுக்கப்பட்டது.
இருப்பினும் இந்த தகவல் வெளியில் வெளிவராமல் சிங்கள அரசால் தடுக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளரான முருகர் குணசிங்கம் அவர்கள் கூறியுள்ளார்.
தற்போது தொண்டீஸ்சரம் கோயில் இருந்த இடத்தில் ஒரு விஷ்ணு கோயில் அங்கிருந்த சிங்களப் பௌத்த துறவிகளால் எழுப்பப்பட்டுள்ளது. தற்போது தெவிநுவர கோயில் என அழைக்கப்படுகிறது.
தமிழர் தலைநகரில் :
தமிழரின் தலைநகரான திருகோணமலை பன்குளம் என்ற இடத்தில் இருந்த தமிழ் மக்கள் போர்க்காலத்தில் அவ்விடத்தை விட்டு வடக்கிற்கு அகதிகளாக கலைக்கப்பட்டு விட்டார்கள்.
போர்க் காலத்தில் தம்பலகாமம் தம்பலகமுவ ஆக பெயர் மாற்றம் பெற்றது. புல்மோட்டை புல்மூட்ட ஆகியதும் கதிரவெளி என்ற தமிழ் நிலம் கதுரவெல ஆகியதும் சிங்கள பேரினவாத அரசின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் இடம்பெற்றது.
சிங்களவர்களால் அழிக்கப்பட்ட ஆலயங்கள் அனைத்தும் தொல்லியல் ஆவணங்களில் இருந்து நீக்கப்பட்டன. இலங்கை தமிழ்வேந்தன் இரவணனால் தோன்றி வழிபாடு செய்யப்பட்ட அருள்மிகு ஈஸ்வரன் ஆலயங்களும் அழிக்கப்பட்டன.
தற்போது தொண்டீஸ்வரத்தின் நிலமை Devundara vishnu devalaya என்று அழைக்கப்படுகின்றது. கதிர்காமம் போல் கப்புறாளைகளே அங்கு பூசை செய்கின்றனர்.
117 சைவ ஆலயங்களை காணவில்லை:
அநுராதபுரம் மாவட்டத்தில் மட்டும் 117 சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டன அல்லது வரலாற்றில் இருந்து காணாமல் போயுள்ளன என இந்து தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அநுராதபுரம் மாவட்டத்திற்கு பக்கத்தில், பொலன்னறுவை மாவட்டத்தில் இன்றும் சிவன் கோவில் இருக்கின்றது. பாரியளவில் சிதிலமடைந்து காணப்படும் அந்தச் சோழர் காலத்து சிவன் கோவிலை சீரமைக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்கவில்லை.
ஆனால், கௌதாரி மலையிலும், நெடுந்தீவிலும் விகாரைகளை கட்டலாமா, அல்லது தமிழர்கள் வாழும் இடங்களில் எகட்டலாமா என்று ஒவ்வொரு இடமாக அரசாங்கம் ஆராய்ச்சி செய்து வருகிறது.
மேலும், தொண்டீஸ்வரம் சிவன் கோவிலை சீரமைக்க மட்டுமன்றி, ஆவணப்படுத்த கூட சிறிலங்கா அரசாங்கம் தயாராக இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
அநுராதபுரம் மாவட்டத்தில்அழிந்த 117 சைவ ஆலயங்களை கட்டுவதற்கு முன்பாக அந்த கோயில்கள் பற்றிய வரலாற்றையும் அரசு மறைத்து வைத்துள்ளது.
மன்னாரில் ஆலய அழிவு
மன்னாரில் மாதோட்டம் என்ற நகரம் தமிழ் மன்னனான மகாதுவட்டா என்கின்ற மன்னனால் ஆளப்பட்டது. திருக்கேதிஸ்வரம் ஆலயம் இந்த மன்னனால் தான் கட்டப்பட்டது.
மன்னார் துறைமுகம் நோக்கி மூன்று கோட்டைகள் அதாவது காந்த கோட்டை, இரும்பு கோட்டை, வெள்ளி கோட்டை என்பன இந்த மன்னனால் கட்டப்பட்டது என்பதை வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.
ஈழந்தமிழ் மக்களின் வரலாற்றை ஆராயும் ஆராய்ச்சியாளர்கள், அழிக்கப்பட்ட சிவ ஆலயங்கள் தொடர்பான வரலாறுகள் ஆராயப்பட்டு உண்மை வெளிக்கொண்டு வரப்படவேண்டும். இலங்கையில் தமிழர் சரித்திர நாகரிகம் மிகத் தொன்மை வாய்ந்தது.
அழிந்து போன ஆலயங்கள் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் பல்கலைக் கழகங்களுக்குச் சமர்ப்பிக்க,
தமிழ் ஆர்வலர்கள் முன்வரவேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button