முச்சந்தி

பயங்கரவாத சட்டத்தை தொடரும் ஜேவிபி… இனவாத வரலாற்றின் தொடர்ச்சியே!…. நவீனன்

(இனவாதம் மீண்டும் தலைதூக்கினால், நாட்டின் அனைத்து சமூகத்தையும் பாதிக்கும் என இந்த அரசும் தெரிந்து கொண்டு, தொடர்ந்தும் தமிழர் மீதான விரோத மனநிலையை உருவாக்கி வருகிறது)
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு (PTA) எதிராக, அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட தருணத்திலிருந்து தொடர்ச்சியாக எதிர்த்து வந்த கட்சி ஜேவிபி தான், அதன் வழியே தேசிய மக்கள் சக்தியும் (NPP) எதிர்த்து வந்தது.
ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் அதனை நீக்குவதாக உறுதி அளித்தார்கள். இன்னமும் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது என்பதே உண்மையாகும். எதிர்காலத்தில் இந்த சட்டத்தை மீண்டும் கடுமையாக அமல்படுத்துவார்களா என்பதும் எவருமே எதிர்பார்க்க முடியாதாகும்.
ஏனெனில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒன்றை கூறுவார்கள். வந்த பின்னர் வாக்களித்த மக்களின் நலன்களை புறக்கணித்து வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடுவர். ஆதலால் ஆட்சிக்கு வந்த இந்த அரசும் இந்த பயங்கரவாத சட்டத்தை இன்னும் நீக்கவில்லை.
ராஜபக்ச அரச பயங்கரவாதம்:
ராஜபக்ச ஆட்சியில் அரச பயங்கரவாதத்தை தீவிரப்படுத்திய காலத்தில், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ராஜபக்ச என்ற பெயரைச் சொல்லக் கூட பயந்து நடுங்கி வந்தார்.
இதே வேளை தேசிய மக்கள் சக்தி தாம் ஆட்சிக்கு வந்ததும் இந்தச் சட்டத்தை ரத்து செய்வதாக அவர்கள் வாக்குறுதி அளித்தனர். ஆனால் இந்த சட்டம் இன்னும் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜபக்சக்கள் தங்கள் அரசியலின் மிகக் கொடூரமான, இழிவான, இரக்கமற்ற, பாவகரமான செயல்களை இச்சட்டத்தின் பின்புறமாக நடாத்தி வந்தனர்.
மனித உரிமை மீறல்கள் மிக மோசமான நிலையில் இருந்த காலத்தில், ராஜபக்சக்களின் நிழலில் வளர்ந்த இக்கட்சியே தற்போது ஆட்சியில் உள்ளது.
இவர்களின் ஆட்சியில் கூட தொடர்ந்து இனவாதம் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதன் ஒரு பகுதியாகவே இச்சட்டம் இதுவரை அகற்றப்படவில்லை.
தேர்தலுக்கு முன்பாக அவர்களின் அரசியல் வாக்குறுதிகள் காற்றில் பறந்து விட்டன. மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தும் வகையில் பயங்கரவாத தடை சட்டம் இன்னமும் ரத்து செய்யப்படாதது தான்.
இந்த விவகாரத்தில் உறுதியாக சட்டத்தை ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் எந்த பேரினவாத கட்சியும் உறுதியாக முடிவு எடுப்பது இல்லை. ஆனால் முன்னைய காலத்தில் அந்தச் சட்டத்தை மேலும் கடுமையாக்க செய்யப்படும் வேலையை இக்கட்சிகள் செயற்ப்படுத்து வந்தன.
நீண்ட காலமாக சிறிலங்கா நாட்டின் பொருளாதாரம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.
முக்கியமான சிங்கள கட்சிகள் இன்னமும் இனவாத அரசியல் செய்யும் அதே நேரத்தில், நாட்டின் எதிர்க்கட்சிகளின் ஒரே தந்திரம் இனவாதம் என்பதால், இனங்களுக்கிடையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பற்றி அரசாங்கத்திற்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது.
முன்பு ராஜபக்சக்கள் இனவாத அரசியலை சுதந்திரமாகச் செய்ய ஒரு களத்தை உருவாக்க இந்த வங்குரோத்து அரசியல்வாதிகள் போலியான வாக்குறுதிகளை வழங்கி மக்களை திசை திருப்பி வந்தனர்.
இனவாதம் மீண்டும் தலைதூக்கினால், நாட்டின் அனைத்து சமூகத்தையும் பாதிக்கும் என அனைத்து கட்சிகளும் அறியும். குறிப்பாக ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு நாட்டிலும் இந்த இனவாத நிலை உருவாகியது.
ஆயினும் நடந்து முடிந்த தேர்தலில் நாட்டின் அனைத்து இனங்களின் நம்பிக்கையுடன் புதிய ஆட்சிக்கு வழி வகுத்தனர். ஆனால் ஆளும் கட்சியியும் இந்த சட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆனாலும் வெறும் அறிக்கை மூலம் தெரிவிக்காமல் இச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதே முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
1983 ஜேவிபியின் திட்டமிட்ட இனவாதம்:
1983இல் சிறிலங்காவின் தலைநகரில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த தமிழரின் பாரிய தொழில் நிறுவனங்களான மகாராஜா நிறுவனம், சென்ற் அந்தனீஸ் நிறுவனம் போன்ற நூற்றுக் கணக்கான நிறுவனங்கள் இனங்காணப்பட்டுத் தேடித்தேடி எரிக்கப்பட்டன. இதன் பின்னணியில் அப்போதைய ஆளும் கட்சி மாத்திரமின்றி , ஜேவிபியும் முக்கிய பங்காற்றியது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
இனவெறி கொண்ட சிங்கள காடையர்கள் கொள்ளையிலும் கொலையிலும் ஈடுபட, ஜேவிபியும் திட்டமிட்டு தமிழரின் தலைநகர்ப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்துத் தமிழரை துரத்தத் தலைப்பட்டது.
1981இல் யுஎன்பி அரசு தமிழரின் அறிவைச் சீர்குலைக்க நூலகத்தை எரித்து தலையிலே கையை வைத்தது எனலாம். ஆனால் ஜேவிபியோ பொருளாதாரத்தை முடக்கி தமிழரின் மடியிலே கையை வைத்தது என்றே கூறலாம்.
சமாதானத்தின் உண்மையான எதிரிகள் யார்?
2004 சமாதான பேச்சு வார்த்தை நடந்த காலகட்டத்தில் இலங்கையில் இனவாத பதட்ட நிலைமைகளை உக்கிரப்படுத்துவதன் ஒரு பாகமாக, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) பல்வேறு இனவாத பேரணிகளை நடத்தியது என்பது நினைவிருக்கலாம். சமாதானத்தின் உண்மையான எதிரிகள் யார்? என்ற தலைப்பில் இலங்கை தீவு பூராவும் ஒரு தொடர் விரிவுரைகளை நடத்தி வந்தது.
ஜே.வி.பி சமாதானத்திற்கு சார்பாக பேசியதாக கூறிக் கொண்ட போதிலும் இந்த விரிவுரைகளின் முழு இலக்கும் நாட்டை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளுவதாகும்.
2004 ஏப்ரல் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் அவரது சிறுபான்மை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமும் இடைநிறுத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சமாதான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க தற்காலிகமாக முயற்சித்தனர்.
ஆயினும், அக்காலத்தில் சுதந்திர முன்னணியின் பிரதான பங்காளியான ஜே.வி.பி, பேச்சுவார்த்தைகளை எதிர்த்து பிரச்சாரத்தில் ஈடுபட்டது. இந்த பேச்சுவார்த்தைகள், இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான தனது பிரேரணையின் அடிப்படையில் இடம்பெற்றது.
இலங்கை இராணுவத்தின் வீரம் செறிந்த இராணுவ பிரச்சாரத்தை பற்றி பரிந்து பேசுவதன் மூலம், 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை ஆரம்பத்திலேயே எதிர்த்த இராணுவத் தலைவர்களின் பிரிவுகளுடன் நேரடியாக ஜே.வி.பி அணிதிரண்டது.
அனுரவின் இனவாத வரலாறு.
அனுர 1995 ஆம் ஆண்டிலிருந்து அரசியலில் இருந்து வருகிறார். அத்துடன் 2000 ஆண்டு முதல் பாராளுமன்றில் உறுப்பினராக இருக்கிறார்.
2002 ரணில் கொண்டு வந்த சமாதானத்தை சிதைத்ததில் அனுர முக்கிய பங்கு வகித்தார் என்ற குற்றச்சாட்டும் பரவலாக உள்ளது. மகிந்தவை யுத்தத்திற்குள் தள்ளியது அனுர என்றும் பரவலான குற்றச்சாட்டும் உள்ளது.
இறுதி யுத்தம் நடைபெற்ற வேளையில், இறுதி நொடியில் ஒரு நிமிடம் கூட யுத்த நிறுத்தம் செய்ய விடாது தடுத்தது ஜேவிபியின் அனுர ஆதரவாளர்கள் கூட்டம் என்று பரவலாக நம்பப்படுகிறது.
மேலும் 2005 இலங்கை இராணுவத்திற்கு ஜே.வி.பி மூலமாக படைகளை திரட்டிக் கொடுத்தது என்பதை அநுர குமாரவே பகிரங்கமாக அறிவித்தார். அந்த இராணுவம் தான் தமிழர்மீது இனப்படுகொலை புரிந்தது. தமிழ சகோதரிகளை கற்பழித்து படுகொலை செய்ததும் உலகறிந்ததே.
தமிழரின் பூர்வீக தாயகத்தை பிரிப்பதில் முன்னின்றதும் ஜே.வி.பி தான். இணைந்த வடக்கு கிழக்கையும் நீதிமன்றம் சென்று பிரித்தது அனுரவின் கட்சியினர் தான் காரணம்.
1987களில் இந்திய எதிர்ப்பு, தமிழின எதிர்ப்பு என்ற இனவாத ஆயுதத்தை கையில் எடுத்த ஜே.வி.பியை சிங்கள மக்கள் பெரும் தேசபக்தர்களாக மதிக்கும் நிலை உருவாகியிருந்தது.
நிகழ்கால இனவாதம்:
இனவாதம் மீண்டும் தலைதூக்கினால், நாட்டின் அனைத்து சமூகத்தையும் பாதிக்கும் என இந்த அரசும் தெரிந்து கொண்டு, தொடர்ந்தும் தமிழர் மீதான விரோத மனநிலையை உருவாக்கி வருகிறது.
திருகோணமலையில் கந்தளாய் தமிழ் ஊர் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களின் ஊடாக தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்டது.
2004ஆம் ஆண்டு அனுர நீர்ப்பாசன அமைச்சராக வந்த பின்னர் கந்தளாயில் உள்ள தமிழ் விவசாயிகளுக்கு கந்தளாய் குளத்தில் இருந்து விவசாயம் செய்ய நீர் போகாமல் தடுத்து நிறுத்தினார்.
அது மட்டும் அல்லாமல் கந்தளாய்க் குளத்தை கட்டிய தமிழ் மன்னன் குளக்கோட்டனின் வரலாற்றை இருட்டடிப்பு செய்து அங்கே சிங்கள மன்னரின் சிலையை அனுர எழுப்பினார்.
அனுர தலைமையிலான JVP அல்லது NPP யின் இலக்கு தமிழரின் மொழி:மதம்;கலை கலாசாரம்;பண்பாடு என்பவற்றை அழித்து தமிழரை சிங்களவராக மாற்றுவதே ஆகும்.
நீர்கொழும்பில் இருந்த தமிழர்கள் அவ்வாறு சிங்களவராக மாற்றப்பட்டு வாழ்கின்றார்கள். தொடரும் சிங்கள மயமாக்கலில் திருகோணமலையில் குளக்கோட்ட னின் சிலையை அகற்றி சிங்கள மன்னனின் சிலையை வைத்துள்ளார்.
வணங்கா மண் வன்னியில் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலையில் பண்டார வன்னியன் பெயர் மாற்றப்பட்டுள்ளது. உதிரம் வீழ்ந்து உப்பு விளைந்த ஆனையிறவு உப்பு சிங்கள பெயராக மாற்றப்பட்டது. இவ்வாறு தமிழினத்தை சிங்கள மயமாக்கல் செய்வதே அனுரவின் நீண்ட கால திட்டமாகும்.
தானைத் தலைவன் பிறந்த வல்வெட்டித்துறையில் அனுர தமிழர் கலாசாரத்தை மறந்து எல்லோரும் இலங்கையராக மாறி கொண்டாட சொல்லியிருந்தார். இவையெல்லாம் இந்த அரசின் அப்பட்டமான இனவழிப்பை மென்மையாக செய்வதையே எடுத்துக் காட்டுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button