24 வீத வாக்கே கிடைத்தது யாழில் 76 வீத வாக்குகள் அரசுக்கு எதிரானது

யாழ்ப்பாணத்தில் 24 சதவீத வாக்குளை பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு எதிராக 76 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டது என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதை வைத்துக்கொண்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சியையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்று தேசிய மக்கள் சக்தி கணக்கு போடுவார்களாக இருந்தால் மக்கள் அது பற்றி யோசிக்க வேண்டும் என்றார்.
யாழ்ப்பாணம் – கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் ஆறு மாதத்தில் அரசாங்கம் எதையுமே முன்னகர்த்தவில்லை. ஜெனிவா விவகாரம் தற்போது வரவுள்ள நிலையில் அதை சமாளிப்பதற்கான பேச்சாகவே ஜனாதிபதியின் உரையை நாங்கள் பார்க்க முடியும்.
கடந்த ஆறு மாதத்தில் நம்பிக்கை தரக்கூடிய பல விடயங்களை செய்து இருக்கலாம். பல வாக்குறுதிகளை ஜே.வி.பி. அரசாங்கம் தந்து இருந்த போதும் கூட எதையுமே செய்யவில்லை.
அரசியல் கைதிகளில் 10 பேர் தண்டனை விதிக்கப்பட்டவர்கள். அந்த 10 பேர் விடயத்திலும் ஜனாதிபதி மட்டும் தான் முடிவெடுக்க முடியும். கடந்த காலத்தில் எத்தனையோ பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. அரசியல் கைதிகள் விடயத்தில் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்பது உண்மையில் விவாதத்துக்கு அப்பாற்பட்ட ஒரு விடயம்.
பயங்கரவாத தடைச் சட்டம் சர்வதேச மனித உரிமை விதிகளை மீறி தயாரிக்கப்பட்ட சட்டம் என்று கூறி சட்டம் நீக்கப்பட்டு அதை போன்று உயர்ந்த எந்த சட்டமும் கொண்டுவரக் கூடாது என்று ஜேவிபியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டிருந்தது.
ஆகவே அந்த அளவுக்கு சர்வதேச மனித உரிமைகளை மோசமாக மீறுகிற வகையில் உருவாக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழே அரசியல் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
குறைந்தது தண்டிக்கப்பட்ட 10 அரசியல் கைதிகளுக்காவது பொது மன்னிப்பை கொடுக்கலாமே? அதுவே உங்கள் வாக்குறுதியாக இருந்தது. அதைக் கூட செய்ய தயாரில்லாதவர்கள் புது புது விடயங்களை கற்பனையில் சொல்வதை விட செய்வேன் என்ற விடயங்களை முதலில் செய்ய வேண்டும். ஜேவிபியின் வாக்குறுதிகளுக்கு ஆங்கிலத்தில் ஒன்று சொல்வார்கள். காஸ் என்று சொல்வார்கள். அதில் வேறு எதுவும் இருக்காது.
கோட்டாபய ராஜபக்சவின் முகத்தை கண்டுபிடிக்க இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டது. அதேபோல அனுர குமார திசாநாயக்கவின் முகத்தை ஆறு மாதத்திற்குள் காட்டியிருக்கிறார்கள்.
தென்னிலங்கையில் மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவின் உண்மையான முகத்தை காட்டியவுடன் தண்டனையை கொடுத்தார்கள். வடகிழக்கு மக்களுக்கு இது ஒரு பெரிய காரியம் அல்ல.
புலம்பெயர் தமிழர்கள் ஏன் நாட்டை விட்டுப் போனார்கள். இனப் பிரச்சினையே அதற்கு காரணம். அந்த இன பிரச்சனைக்கு தற்போது ஏதாவது முடிவெடுக்கப்பட்டிருக்கின்றதா? முதலீடு செய்யச் சொல்லி அவர்களை எந்த அடிப்படையில் கூறுவது? அவர்களுக்கு தேவையான தீர்வை கொடுக்காமல் முதலீட்டை கோருவது என்பது உங்கள் இனவாதம் கண்களை மூடி இருக்கின்றது என்பதை நாங்கள் விளங்கிக் கொள்ளலாமா?
கடந்த கால அரசாங்கங்கள் இனவாத அரசாங்கங்கள் தான். ஆனால் அவை அதை வெளிப்படையாக காட்டியது. ஆனால் இந்த ஜேவிபி அரசாங்கம் மூடி மறைத்து இனவாதத்தை காட்டுகிறது.
தமிழ் மக்களுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு சமஸ்டி தீர்வு வழங்கப்பட்டாலே தமிழ் கட்சிகள் என்ற வகையில் நாங்கள் புலம்பெயர் தமிழர்களின் முதலீட்டுக்கு உத்தரவாதம் வழங்க முடியும். அப்படிப்பட்ட ஒரு நிலை இல்லாமல் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஜேவிபி ஆட்சியில் முதலீடுகளை செய்யப் போவதாக இருந்தால் அதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் வழங்க முடியாது – என்றார்.
![]()