இலக்கியச்சோலை

எத்தனையோ இளைஞர்களை எழுத வைத்த இதழாசிரியர்; தினகரன் சிவகுருநாதன்…. ராஜாஜி ராஜகோபாலன்

ராஜாஜி ராஜகோபாலன், கனடா
அமரர் சிவகுருநாதன் அவர்களுடனான எனது பால்யகால நினைவுகளை அவரின் நினைவாக வெளியிடப்படும் “ இலங்கை இதழியலில் சிவகுருநாதன்” நூலில் பகிர்ந்துகொள்ள வேண்டுமென ஐங்கரன் விக்கினேஸ்வரா தொடர்ந்து கேட்டவண்ணமிருந்தார். இது நானெழுதிய சிறு நனவோடை.
அது அறுபதுகளின் இறுதி. எழுத்துலகில் நான் காலடியெடுத்து வைத்த காலமும் கொழும்பு கல்வி அமைச்சின் கீழான திணைக்களமொன்றில் பணியில் இணைந்த காலமும் அதுவே. கொம்பனித் தெருவிலுள்ள மலே வீதி இன்றும் ஆசிரியர்களும் கல்வியாளர்களும் பெருமளவில் நடமாடும் வீதி என்பதை அறிவீர்கள்.
அவர்களின் எண்ணிக்கையளவுக்கு இல்லாவிட்டாலும் தமிழ் எழுத்தாளர்களும் கணிசமான அளவுக்கு அங்கே நடமாடியிருப்பார்கள் என்பதைக் குப்பிழான் சண்முகன் போன்ற ஆளுமைகள் விரிவாகச் சொல்லக்கூடும். அதே வீதியால் ஒரு பதினைந்து நிமிடம் கோட்டையை நோக்கி நடந்து சென்றால் அடுத்துவரும் முச்சந்தியில் தினகரன் அலுவலகம் கண்ணுக்கு முன்னால் நிமிர்ந்து குறுக்கே நிற்கும், அது லேக் ஹவுஸ் நிறுவனத்தின் வெண்ணிறக் கட்டிடம் என்றபோதிலும் அது தினகரன் கட்டிடமாகவே எண்ணற்ற கொழும்புவாழ் தமிழ் எழுத்தாளர்களுக்கும் எனக்கும் வாலாயமாகிப் போனதொன்று.
விடுவிடுவெனப் படிக்கட்டுகளில் ஏறி முன் வாசலில் மிதந்தால் துவாரபாலகர்போல் ஒருவர் வரவேற்பார். என்னைப்போன்றவர்கள்மீது ஒருவகை அபிமானம் கொண்டவர்போல் தடையேதுமின்றி உள்ளே செல்ல அனுமதிப்பார். இன்னும் மேலேறிச் சென்றால் தினகரன் ஆசிரியர் சிவகுருநாதனின் அலவலக வாசலுக்கு வந்துவிடலாம்.
அதுவொரு சிறிய அறை. இல்லையில்லையென்றாலும் மூவர் மட்டுமே கதிரைகளைப் போட்டு அமர்ந்துகொள்ளலாம் என்ற அதன் தோற்றம் இப்போது நினைவுக்கு வருகிறது. கண்ணில் நிறைந்துகொள்ளும் எடுப்பான தோற்றத்தில் வெள்ளை நிறச் சட்டையும் வேட்டியுமாக மேசையின் முன்னால் அமர்ந்திருப்பார் சிவகுருநாதன். அவரைக் காணச்சென்ற எந்தவொரு நாளும் அவரை நான் சந்திக்காமல் வேலைக்குத் திரும்பியதில்லை. பணிக்கு நேரத்தோடும் நாள் தவறாமலும் அவர் வந்து சேர்வது மாதத்துக்கு இரண்டு நாளாவது விடுப்பு எடுக்கும் எனக்குப் பெரும் அதிசயமாயிருக்கும்.
அப்போதெல்லாம் அவரை எப்படி அழைத்தேன் என்பது நினைவிலில்லை. பெரும்பாலும் “அண்ணை” என அழைத்திருக்கலாம். எப்படி அழைத்தாலென்ன “வாரும்” என்ற அவரின் மென்மையான வரவேற்பில் கட்டுண்டு கதிரையில் இருந்துகொள்வேன். அவருக்கு நன்றாய்த் தெரியும் நான் என்ன கேட்கப் போகிறேனென்று. அதை அவர் முகம் சொல்லிக் காட்டிவிடும். என்றாலும் நான் வாயால் கேட்கவேண்டும் என்னுமாப்போல் அமைதியுடன் தொடர்ந்து மேசைமேலிருக்கும் பத்திரிகை, கடதாசி நறுக்குகள், கையெழுத்துப் பிரதிகள் எழுப்பிய குவியலில் கவனம் வைத்திருப்பார், முகமோ தொடர்ந்து புன்னகை பூத்தவண்ணமிருக்கும்.
“அண்டைக்கு ஒரு கதை தந்தேன் பாருங்கோ” என்று தயக்கத்துடன் தொடங்குவேன். எனக்கு நன்றாய்த் தெரியும் சில கிழமைகளுக்கு முன்னர் அவரிடம் கையளித்த கையெழுத்துப் பிரதி நிச்சயம் அவருக்கு நினைவிருக்கும். ஏதாவது கதைக்கவேண்டுமே என்பதற்காகவே இதை நான் எடுத்துவிட்டேன் என்பதும் அவருக்குத் தெரிந்திருக்கும். இதுபோன்ற ஒவ்வொரு சந்தர்ப்பதிலும் இதுவே எனது முதல் வசனமாக இருந்திருக்கிறது என்பது மட்டுமல்ல அதற்கு அவர் சொல்லும் பதிலும் அவ்வாறே:
“போடுவம், போடுவம்.”
இந்த இரண்டு சொற்களில் அடுத்த ஞாயிறு தினகரன் இதழின் நடுவே எனது சிறுகதை கதாநாயகி ஓவியமாய் அலங்கரிக்க இடம்பெறுவதைக் கனவில் கண்டு லயிக்கத் துவங்கிவிடுவேன். அதிலிருந்து இரண்டு கிழமைக்குள் லேக் ஹவுஸ் அனுப்பும் 25 ரூபாய்க்கான காசோலையும் வந்து சேர்ந்துவிடும். அந்தக் காலத்தில் எனது அறைக்கான ஒரு மாத வாடகையும் அதுவே என்ற ரகசியத்தை இன்று வெளியிட்டால் இதை வாசிப்பவர்களுக்குப் பெரும் அதிசயமாகவேயிருக்கும்.
தினகரன் ஞாயிறு இதழில் நான் எழுதிய நாலோ ஐந்தோ சிறுகதைகளில் ஒன்றில் மட்டுமே ஒரு சிறு திருத்தத்தைச் செய்திருந்தார் சிவகுருநாதன்.
அக்கதையில் எங்களூரின் ஒரு பலசரக்குக் கடைக்காரரின் பெயரை அவரின் வாடிக்கையாளர்கள் அழைத்தவாறே எழுதியிருந்தேன். அக்கதை தினகரன் ஞாயிறு இதழில் வெளிவந்தபோது அத்திருத்தம் அவரளவிலும் என்னளவிலும் எத்துணை மகத்தானது என்பதை அறிந்து மனம் நிறைந்தேன்.
முத்தையா செட்டியாரையும் அவருடைய பலசரக்குக் கடையையும் பருத்தித்துறையில் தெரியாதவர்களே இருக்கமுடியாது. என்ற கதையின் ஆரம்ப வரியில் “செட்டியார்” என்ற சொல்லை மட்டுமே எடுத்திருந்தார்.
திரு சிவகுருநாதன் அவர்களின் “போடுவம், போடுவம்” என்ற எளிமையான இரண்டு சொற்கள் மட்டுமே என்போன்ற பலர் அக்காலத்தில் கேட்க விரும்பிய மிகப் பொருள் நிறைந்த சொற்களாக இருந்திருக்கும் என்பதை இப்போதும் நினைத்துப் பார்த்துப் பெருமைகொள்கிறேன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *