முச்சந்தி

ஏமாற்றத்தில் அனுரவின் ஏக்கிய இராச்சிய கனவு: மாற்றமின்றிய இனவாத ஆட்சியின் இன்னொர் முகம்!…  நவீனன்

(ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பு என்பவற்றினால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சிகளை சிங்கள அரசியற் கட்சிகள் தொடர்ந்து காலங்காலமாக முன்னெடுத்து வருகின்றன)
கடந்த 2024 ஆண்டு பொது தேர்தல் பரப்புரையின் போது நீதி, சமத்துவம், இனவாதம், மதவாதம், பொருளாதார முன்னேற்றம், வடகிழக்கு அபிவிருத்தி தொடர்பிலான வார்த்தைகள் பரவலாக பேசப்பட்டன.
தேர்தலுக்கு முன்பும் – பின்புமாக 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம், ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பு என்பவற்றினால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சிகளை சிங்கள அரசியற் கட்சிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.
ஏக்கிய இராச்சிய கனா :
ஆனாலும் ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி தொடர்பில் தமிழ் மக்களிடம் நிறையவே கேள்விகள் உண்டு. எனெனில் அவர்களின் கடந்த கால அணுகுமுறையே அதற்கு சான்றாகும்.
2002 போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜே.வி.பி சமாதான முன்னெடுப்புகளுக்கு எதிரான சக்தி வாய்ந்த கருத்தியல் -அரசியல் வேலைத் திட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தது.
அத்துடன் 2003 இல் கொழும்பில் மாதத்திற்கு ஒரு முறை என்ற அளவில் ஈழப் போராட்டத்திற்கு எதிராக பாரிய வீதி ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தது. இது கொழும்பு தலைநகரை பல சந்தர்ப்பங்களில் முற்றிலுமாக ஸ்தம்பிக்க வைத்தது.
2009 வரை தமிழ் மக்களின் அத்தனை அவலங்களுக்கும் ஆட்சிப் பீடத்தில் இருந்த சிங்கள தலைவர்களுக்கு ஜே.வி.பி பிரதான அனுசரணையாளர்களாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இனவாதம், மதவாதம் இல்லாதவர்களாக புதிய அரசு தன்னை காட்டிக் கொள்கிறது. ஆனால் எப்போதுமே மகாவம்ச புனைகதையையே நம்பி சிங்கள பேரினவாத அரசுகள் பின்பற்றுகின்றன.
பேரினவாத அடக்குமுறைகளில் இருந்து தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இறுதித் தீர்வு ஏக்கிய இராச்சிய ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் கீழ் என்றுமே இருக்க முடியாது என்பது தெளிவாகிறது.
குறைந்தபட்ச தீர்வாக வலுவான சமஷ்டி அடிப்படையிலேயே அமைய வேண்டும். அத்துடன் 13 ஆவது திருத்தத்தில் குறைந்த பட்ச காணி பொலிஸ் அதிகாரங்களையே தராத சிங்கள இனவாத அரசுகள் தான் காலா காலமாக ஆட்சியில் இருந்து வந்திருக்கின்றன.
நூறாண்டுகளாக இலங்கைத் தீவில் தமிழ்மக்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டு அடக்கப்பட்டார்கள். வன்முறைகளால் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டதே சிறிலங்காவின் வரலாறாகும்.
சிங்கள் பௌத்த பேரினவாத அதிகாரக் கட்டமைப்புக்குள் தமிழ் மக்கள் சுயகௌரவமுள்ள இனமாக வாழ முடியாது என்பதே கடந்த நூறாண்டுகளாக வரலாறு கற்றுத் தந்த பாடமாகும்.
அனுர ஆட்சியின் போலிமுகம்:
தற்போது அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று ஆறு மாதங்கள் பூர்த்தியாகின்றது.  முன்னைய ஆட்சியில் நடந்த சீனி இறக்குமதியில் மோசடி , தேங்காய் எண்ணெய் இறக்குமதி மோசடி, வெள்ளைப் பூண்டு இறக்குமதி மோசடி, விவசாய உர இறக்குமதியில் மோசடி விசாரணை செய்யப்படும் என்றார்கள்.
அனுர ஆட்சிக்கு வந்து 72 மணித்தியாலங்களுக்குள் பிணைமுறி மோசடி தொடர்பில் நடவடிக்கை மற்றும் முன்னாள் மத்திய வங்கிய ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வருவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்கள்.
உக்ரேனிய அரசுடனான மிக் விமான கொடுக்கல் வாங்கலில் இடம் பெற்ற மோசடி விசாரணை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்கள். மேலும் இலங்கையில் திருடப்பட்டு வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணங்களை நாட்டுக்கு கொண்டு வருவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் கூறியபடி எதுவமே நடக்கவில்லை. நடவடிக்கைகள் எடுக்கப்படப் போவதும் இல்லை.
சிங்கள நாட்டை திருடியவர்களை சிறையில் அடைப்போம் என்று கூறி ஆறு மாதங்கள் கடந்து விட்டன. மின்சாரக் கட்டணத்தில் மூன்றில் ஒரு பங்கு குறைப்பதாக வாக்குறுதி வழங்கப்பட்டிருந்த நிலையில் 40% மின்சார கட்டண உயர்வு தவிர்க்க முடியாது என்கின்ற நிலை தற்போது உருவாகியிருக்கின்றது.
உணவு, சுகாதாரம் மற்றும் பாடசாலை பொருட்கள் மீதான VAT வரி நீக்கப்படும் என்கின்ற வாக்குறுதி காற்றில் கைவிடப்பட்டுள்ளது. எரிபொருள் சூத்திரத்தை மதிப்பாய்வு செய்து அரசியல்வாதிகளுக்கான லஞ்சத்தை நீக்கி எரிபொருள் விலைகளை குறைப்பதாக வழங்கிய வாக்குறுதி மறக்கப்பட்டு விட்டது.
மாற்றமின்றிய ஆட்சி:
அரிசி ஊழலை ஒழித்து கட்டுவதாக வழங்கிய வாக்குறுதி பொய்த்து போய் அரிசி தட்டுப்பாட்டை தவறாக நிர்வகித்ததால் ரூபா 16 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் மன்னார் காற்றாலை திட்டத்தில் அதானி முதலீடு தொடர்பாக வழங்கிய வாக்குறுதி மீறப்பட்டு இவ் விவகாரம் இழுபறியாக நீடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
சீனாவிடம் பெறப்பட்ட 3.7 பில்லியன் அமெரிக்கா டொலர் தவிர்ந்த வெளிநாட்டு முதலீட்டை தவிர எதையும் இந்த அரசு உள்ளீர்க்க முடியவில்லை.
ஏற்றுமதி பொருளாதாரம் என்கின்ற வாக்குறுதிக்குக்கிடையில் அத்தியாவசிய பொருட்களின் உள்ளூர் சந்தை விலைகளை கூட சீராக பேண முடியாத சூழல் உருவாகியிருக்கின்றது.
சர்வதேச நாணய நிதிய வர்த்தக திருத்தம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு நன்மைகள் பெற்று கொடுக்கப்படும் என்கின்ற வாக்குறுதி கைவிடப்பட்டுள்ளது.
உத்தரவாதங்களை மீறி, வருமான பற்றாக்குறையை மேற்கோள் காட்டி, ரூபா 700 பில்லியன் மாதம் தோறும் உள்நாட்டுச் சந்தையிலிருந்து கடன் பெறப்படுகின்றது. வரி கட்டமைப்பு மாற்றங்கள் காரணமாக திறைசேரிக்கு குறைந்தது ரூபா 60 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.
2025 மார்ச் 14 வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு 1.0 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஊழலை ஒழிக்கின்றோம் என்கின்ற வாக்குறுதிக்கு மத்தியில் சதொச நிறுவனத்தின் ஆளுமை நிர்வாக அனுசரணைக்கு அனுரகுமார திசாநாயக்கவின் ஆலோசாகர் துமிந்த கலுங்கவமுமவின் Ernst & Young நிறுவனம் தெரிவு செய்யப்பட்டமை அம்பலமாகியிருக்கின்றது.
ஏமாற்ற ஊழலே மிச்சம் :
மேல் மாகாண ஆளுநர் திரு ஹனிவ் யூசவ்வுடன் தொடர்புடையதாக அடையாளப்படுத்தப்பட்ட 323 கொள்கலன்கள் இலங்கை சுங்க சங்கத்தில் பரிசோதனைகளுமின்றி விடுக்கப்பட்டுள்ளது.
VFS Visa மோசடியுடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் திரு டிரான் அலஸ் தொடர்ந்தும் பாதுகாக்கப்படுகின்றார். விசேடமாக அவருக்கு அமைச்சரவை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
60-70 திருடர்களை சிறையில் அடைப்போம் முதல் உகாண்டாவிலிருந்து ராஜபக்சே குடும்பம் திருடிய பணத்தை மீட்போம் வரையான வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இது போதாதென்று அரச நிறுவனங்களின் நியமனங்களில் அரசியல் தலையீடுகள் ஒழிக்கப்படும் என்கின்ற வாக்குறுதி கைவிடப்பட்டு பெரும்பாலான தலைமை பதவிகளுக்கு முறை தவறி நியமனங்கள் செய்யபட்டுள்ளது.
நீதி அமைச்சின் செயலாளராக ஆயிஷா ஜினசேனா நியமிக்கப்பட்டதிலிருந்து இலங்கை கனிம வள நிறுவன தலைவர் பதவிக்கு 80 வயதான அசோகா பீரிஸ் நியமிக்கப்பட்டது வரை எந்த மாற்றமுமில்லை.
விசேடமாக பயங்கரவாத சட்டத்தை நீக்குவோம், இணைய பாதுகாப்பை சட்டத்தை மறுசீரமைப்போம் என முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையாக கானல் நீராகி விட்டன.
அத்துடன் மத்திய கடுகதி பாதை 1 இன் கட்டுமானத்தை நிறுத்தியதற்காக, சீன நிறுவனம் (MCC) க்கு மட்டும் ரூபா 46 பில்லியன் இழப்பீடு செலுத்த வேண்டியுள்ளது. அனுரா குமார திஸநாயக்கா அரசும் முன்னைய ஆட்சியாளர்கள் போல பொறுப்பு கூறாமல் கடந்து போகிறாரா என கேள்வி எழுந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button