முச்சந்தி

டிரம்பின் இரட்டை முகம்: காசாவில் மீண்டும் யுத்தம்!.. உக்ரைனில் உடனடி அமைதி !!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(பாலஸ்தீனத்தில் கொடூர போருக்கு அமெரிக்க டிரம்ப் நிர்வாகம் இஸ்ரேலை ஊக்குவிக்கிறது. ஆனால் உக்ரைனில் உடனடி போர் நிறுத்தத்தை டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். இரு போர்க்களத்திலும் அமெரிக்காவும், டிரம்ப் அரசும் போலியான இரட்டை முகத்தினை வெளிப்படுத்தி வருகின்றன)

போர் நிறுத்தம் மேலும் நீடிப்பதற்கு முன்னராகவே , காசாவில் ஓர் தாக்குதலில் 413 பாலஸ்தீனர் கொன்று குவிக்கப்பட்டனர். இது வெறும் ஆரம்பம் தான் என இஸ்ரேல் பிரதமர் எக்காளமிட்டு எச்சரித்துள்ளார். இந்த கொடூர தாக்குதலுக்கு அமெரிக்காவும் ஒத்திசைத்து ஆமோதித்தது என்றும் கூறப்படுகிறது.

பாலஸ்தீனர்களுடன் இனிமேல், பேச்சுவார்த்தைகள் துப்பாக்கிச் சூட்டின் கீழ் மட்டுமே நடைபெறும் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

பாலஸ்தீனத்தில் கொடூர போருக்கு ஆதரவாக இஸ்ரேலை ஊக்குவிக்கும் விதமாக அமெரிக்க அரசும், டிரம்ப் தலைமையிலான நிர்வாகமும் செயல்பட்டு வருகின்றன.

ஆனால் உக்ரைனில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். போர் நிறுத்த கோரிக்கை இரு தரப்பாலும் நிபந்தனைகளுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் இதுவரை முழுமையான யுத்த நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை.

இரு போர்க்களத்திலும் அமெரிக்காவும், டிரம்ப் அரசும் இரட்டை முகத்தினை வெளிப்படுத்தி வருகின்றன.

காசாவில் தொடரும் கொடூரம்:

இஸ்ரேலிய வான் படையின் தாக்குதலில் 413 பாலஸ்தீன மக்களின் உடல்கள் கிடைத்துள்ளதாகவும் பல உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட கொடூரமான தாக்குதலில் இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஆயினும் காசா சுகாதார அமைச்சக அதிகாரிகள் அறிவிப்பின்படி, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 413 பேரின் உடல்கள் கிடைத்துள்ளதாகவும் பல உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளது என தெரிவித்துள்ளது.

நேதன்யாகு புதிய எச்சரிக்கை :

கோரமான இந்த தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் ஹமாஸ் எங்கள் கையின் வலிமையை ஏற்கனவே உணர்ந்துள்ளது.

இது வெறும் ஆரம்பம் மட்டுமே என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிராக அதிக பலத்துடன் செயல்படும். இனிமேல், பேச்சுவார்த்தைகள் துப்பாக்கிச் சூட்டின் கீழ் மட்டுமே நடைபெறும் என்று நேதன்யாகு மிகக் கடுமையாக தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்த முறிவு :

கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட அமைதி உடன்படிக்கையின்படி இஸ்ரேலிய பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வந்தனர். ஆனால் போர் நிறுத்தம் முடிந்ததும் மேற்கொண்டு தொடர்ந்த அமைதி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.

ஹமாஸ் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க பலமுறை மறுத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டதாக இஸ்ரேல் கூறியிருந்தது. இந்த நிலையில்தான் இஸ்ரேலின் இந்த படுகொலை தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

ஹமாஸ் தன்வசம் இன்னும் 59 இஸ்ரேலிய பணய கைதிகளை
பிடித்து வைத்துள்ளது. இந்நிலையில் தற்போதைய காசா தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஹமாஸ், சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிரந்தர தீர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளை இஸ்ரேல் தடுக்கிறது.

இஸ்ரேலின் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவை அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தி உள்ளது.

இஸ்ரேலே போர் நிறுத்தத்தை முறித்தது:

அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்திய முயற்சியில் உருவான போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறியடிக்க தற்போது இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. ஆனால் இஸ்ரேல் வன்முறையை மீண்டும் தொடங்கினால் மீதமுள்ள உயிருள்ள பணயக்கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்க நேரிடும் என ஹமாஸ் எச்சரித்துள்ளது.

இதற்கிடையே 400 பேரை கொன்ற இந்த தாக்குதல்களைத் தொடங்குவதற்கு முன்பு இஸ்ரேல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்திடம் ஆலோசித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், மீண்டும் போர் தொடங்குவதற்கு ஹமாஸ் முழுப் பொறுப்பையும் ஏற்கிறது என்று அமெரிக்க செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

உக்ரைன் போர் நிறுத்தம்:

காசாவில் போர் தொடர்கையில், உக்ரைனில் யுத்த நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா தீவிரமாம முயல்கிறது. அமெரிக்க முன்வைத்த போர் நிறுத்த திட்டத்தை ரஷ்யா – உக்ரேன் நிபந்தனைகளுடன் ஏற்றுக் கொள்வதாக முன்னர் அறிவித்து இருந்தன. ஆனாலும் இதுவரை இப்போர் முடிவுக்கு வர ரஷ்யாவோ அல்லது உக்ரைனோ தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளவில்லை என்பது தெட்டத் தெளிவாக தெரிகிறது.

ஏனெனில் இருதரப்பும் முன்னைய போர் நிறுத்த காலத்தில் தம்மை பலப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இது இம்முறையும் வெளிப்படையாகவே தெரிகிறது.

ஆனாலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விவரங்கள் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் எந்தவொரு போர் நிறுத்தமும் நீண்டகால அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என்றும் புட்டின் கோரியுள்ளார். அத்துடன் போரின் நெருக்கடியின் காரணங்களை நீக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ரஷ்ய அதிபர் புடடினுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியைள்ளார். புட்டினின் சாதகமான பதில் மிகவும் நம்பிக்கைக்குரியதாக உள்ளது என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

ஏற்கனவே ரஷ்யாவுடனான போரில் உடனடி முப்பது நாள் போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க முன்மொழிவை ஏற்கத் தயாராக இருப்பதாக உக்ரைனும் கூறியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button