முச்சந்தி
ரஷ்ய அமெரிக்க உறவும் உலக ஒழுங்கு மாற்றமும்… ஐங்கரன் விக்கினேஸ்வரா

உலகின் மிக பெரிய வல்லரசு பகிரங்கமாக உதவியளிக்கும் உக்ரைன் நாட்டுடன் ரஷ்யா மோது வந்து, தற்போது எதிரியுடன் எதிரி கைகுலுக்கும் நிலமை ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா ஒற்றை வல்லரசல்ல என்பதை ரஷ்யா உக்ரைன் போர் நிரூபித்திருக்கின்றது.
உலக வல்லரசாக இனி அமையப்போவது ஒருங்கிணைந்த நாடுகளின் கூட்டாக இருக்கலாம், இவை ஐரோப்பாவை மையப்படுத்தியதாக இருக்கலாம் எனும் எதிர்பார்ப்பும் உள்ளது.
ரஷ்ய அமெரிக்க உறவில் மாற்றம் :
உக்ரேன் மீது முழு அளவில் ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய மூன்றாம் ஆண்டு நிறைவு நாளான கடந்த பிப்ரவரி 24 அன்று, ரஷ்யாவின் தாக்குதலையும், உக்ரேனிய பிரதேசத்தை ஆக்கிரமித்ததையும் கண்டிக்கும் ஐ.நா பொது சபை தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா வாக்களித்தது.
இந்த வாக்களிப்பு மட்டுமன்றி, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையின் பல மாற்றங்கள் உலக ஒழுங்கு முறையில் பாரிய மாற்றத்துக்கான அறிகுறியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
மாறி வரும் உலக அரசியல் ஒழுங்கு (New World Order) உண்மையில் புட்டினுடன் அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய நட்புறவால் ஏற்பட்டதா அல்லது அமெரிக்கா தனது பொருளாதார நலன்களுக்காக இந்த மாற்றத்தை உருவாக்கியதா என்பதை இனிவரும் காலங்களில் அறிந்து கொள்ளலாம்.2022 பெப்ரவரியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உக்ரேன் மீது ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சர்வதேச சட்டங்களை மீறிய குற்றத்திற்காக ரஷ்யாவை உலக அளவில் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக நடத்தி வந்தன.
ஆனால் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது அந்நிலைமையை வேறுவிதமாக கையாண்டு இந்நிலையை மாற்றியுள்ளார். கடந்த வாரம் டிரம்ப் மற்றும் உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி இடையே நடந்த காரசாரமான சந்திப்பின் போது இது மிகவும் பகிரங்கமாக தெரியவந்தது.
பத்திரிகையாளர்கள் முன்பாகவும், உலகின் கண்களுக்கு முன்பாகவும் உக்ரேன் போரைப் பற்றியும் அதை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது என்பது பற்றியும் இரு தலைமைகளும் காரசாரமாக வெளிப்படையாக வாதிட்டனர்.
ஐரோப்பாவின் உதவி உக்ரைனுக்கு:
அமெரிக்காவின் முந்தைய நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை தோல்விகளிலிருந்து, டிரம்ப் அரச நிர்வாகம் தீர்மானமாக விலகுவது போல தெரிகிறது. டிரம்ப் தலைமையிலான அரசால்
அறிமுகப்படுத்தப்பட்ட தீவிர மாற்றங்களை கொண்ட வெளியுறவுக் கொள்கையானது உக்ரைனிப் போரிலும் பிரதிபலித்துள்ளது.
அமெரிக்க நாட்டின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு, ரஷ்யாவுடன் நல்லுறவை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் நியாயப்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியான மோதல்கள் ரஷ்யாவிற்கும், உக்ரேனுக்கும், ஐரோப்பாவிற்கும் மோசமானது என்று அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக உக்ரைனுக்கான உதவிகள் நிறுத்தப்படுகின்றன. ஆனாலும் உக்ரேனுக்கு
ஆதரவாக திரளும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் அண்மையில் சந்தித்து உள்ளனர். தொடர்ந்து போரை நடாத்த ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளன என்பது அமெரிக்க அரசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆதரவாக திரளும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் அண்மையில் சந்தித்து உள்ளனர். தொடர்ந்து போரை நடாத்த ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளன என்பது அமெரிக்க அரசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.தாராளவாத மேலாதிக்கம்:
சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் பின்னர் 1990களில் தொடங்கிய ” தாராளவாத உலக ஒழுங்கு” (Liberal world order) தற்போது சீர்குலைந்து கொண்டிருக்கிறது என ஐரோப்பிய அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
தாராளவாத உலக ஒழுங்கு என்பது உடன்படிக்கைகள், கொள்கைகள் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச உறவுகளின் அமைப்பை உள்ளடக்கியது. இதன் மையத்தில் சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை (UN), அதன் பொது சபை மற்றும் பாதுகாப்பு கவுன்சில் போன்ற அமைப்புகள் உள்ளன.
அத்துடன் தாராளவாத உலக ஒழுங்கு என்பது, உலக வர்த்தக அமைப்பு (WTO), சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற நிறுவனங்களால் ஆதரிக்கப்படும் தடையற்ற வர்த்தகம் போன்ற குறிப்பிட்ட மதிப்பீடுகளையும் குறிக்கிறது.
ஆனாலும் மேற்கத்திய தாராளவாத ஜனநாயக அமைப்பு, அரசாங்கத்தின் சிறந்த மாதிரியை பிரதிநிதித்துவப் படுத்துகிறது என்ற கருத்தியல் அடிப்படையே பொதுவான கருத்தாகும்.
சர்வதேச சட்ட மீறல்களை ஐக்கிய நாடுகள் பொது சபையின் தீர்மானங்கள் அல்லது சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம்.
பின்னர், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் பொருளாதார தடைகளை விதிக்கலாம் அல்லது தீவிர சூழ்நிலைகளில் ராணுவ நடவடிக்கைக்கு அங்கீகாரம் அளிக்கலாம்.
சர்வதேச சட்ட மீறல்கள்:
ஆனாலும் நடைமுறையில், பொருளாதாரத் தடைகள் மற்றும் ராணுவத் தலையீடுகள் பெரும்பாலும் ஐ.நாவின் அனுமதியின்றி மேற்கொள்ளப்படுகின்றன. இதையே ரஷ்யா நீண்ட காலமாக விமர்சித்து வருகிறது.
2007 மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில், ஐ.நா. அனுமதித்தால் மட்டுமே ராணுவத்தைப் பயன்படுத்துவது சட்டபூர்வமானதாகக் கருதப்படும், நேட்டோ அல்லது ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றின் துணை அமைப்பாக ஐ.நாவை நாம் மாற்றிவிடக் கூடாது என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புட்டின் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்கத்திய நாடுகளின் அரசியல் அணுகுமுறை சர்வதேச சட்டங்களையும் ஐ.நா சபையின் விதிமுறைகளையும் பின்பற்றவில்லை என்று ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் மேலும்
தெரிவித்துள்ளார்.
முன்னாள் யுகோஸ்லாவியா நாடான சேர்பியா மீதான நேட்டோவின் 1999ஆம் ஆண்டு குண்டுவீச்சு, 2003ல் ஈராக் மீதான அமெரிக்கத் தலைமையிலான படையெடுப்பு மற்றும் 2008ல் கொசோவோ சுதந்திரத்தை அங்கீகரித்தது ஆகியவற்றை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அனுமதியின்றி மேற்கத்திய நாடுகளால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரஷ்யா அடிக்கடி சுட்டிக்காட்டுகிறது.
குறிப்பாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஐநா சாசனத்தில் உள்ள அடிப்படைக் கோட்பாடுகளை கடுமையாக மீறுவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் மீறல்கள் :
நிகழ்காலத்தில் இடம்பெற்ற மிக முக்கியமான மனித உரிமை மீறல்களில் ஒன்றான, இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் அமெரிக்காவின் நிலைப்பாடு தாராளவாத உலக ஒழுங்கு மீறப்பட்டதற்கு சான்றாக உள்ளது.
அத்துடன் பைடன் நிர்வாகம் இஸ்ரேலுக்கு ராணுவ ஆதரவை வழங்கியதற்காக பல நாடுகள் கடுமையாக விமர்சித்துள்ளன. மேலும் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லபட்டது குறித்து அமெரிக்கா அலட்சியமாக இருந்தது என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.
நீண்டகாலமாக உலக அரங்கில் அமெரிக்கவின் இரட்டை நிலைப்பாடுகள் (Double Standards) பாரிய கண்டனத்துக்கு உள்ளாகியது. குறிப்பாக பாலஸ்தீன மக்களின் உரிமைகளை பாதுகாக்க அமெரிக்க தவறியதுடன் உக்ரேனிய மக்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்தது என்று அரபு நாடுகளால் குற்றஞ்சாட்டப்பட்டது.
தற்போது டிரம்ப் அரசு ரஷ்யாவுடனான உறவுகளை வெளிப்படையாக இயல்பாக்கி வருகிறது. மேலும் அதிபர் ஜெலென்ஸ்கி மீது பொதுவெளியில் வாக்குவாதம் செய்ததுடன், ஐரோப்பாவில் தீவிர வலதுசாரி கட்சிகளை டிரம்பின் கூட்டாளிகள் ஆதரிப்பது ஐரோப்பிய நாடுகளை கடுமையாக பாதித்துள்ளது.
![]()