முச்சந்தி
சூடானில் ரஷ்ய கடற்படை தளம்: செங்கடல் கடல்வழி மூலோபாய முக்கியத்துவம்… ஐங்கரன் விக்கினேஸ்வரா

தற்போது சூடானில் ரஷ்ய கடற்படை தளம் அமைக்கும் திட்டம் தொடரும் என்று சூடான் அரசு கூறுகிறது. இரண்டு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாஸ்கோவில் சந்தித்து, நீண்ட காலமாக தாமதமாகி வரும் திட்டத்திற்கு எந்த தடையும் இல்லை என்று கூறியுள்ளார்கள்.
சிரியாவின் பின்னர் சூடானில்:
மத்திய கிழக்கில் மாஸ்கோவின் கூட்டாளியான பஷார் அல்-அசாத், சிரிய ஆட்சி கடந்த ஆண்டு இறுதியில் கிளர்ச்சியில் தூக்கியெறியப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இது கிழக்கு மத்தியதரைக் கடலில் இருந்த ரஷ்யாவின் டார்டஸ் கடற்படைத் தளத்தின் எதிர்காலத்தை மீள் அமைக்க முயல்வதாக அமெரிக்க உளவு அமைப்புகள் சந்தேகிக்கின்றன.
ஆபிரிக்காவில் ரஷ்யா தனது கடற்படை தளத்தை நிறுவும் திட்டம் தொடரும் என்று சூடானின் வெளியுறவு அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். செங்கடல் இராணுவ துறைமுகம் தொடர்பாக பல வருட தாமதங்களுக்குப் பிறகு எந்த தடையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டால், ரஷ்யாவின் கடற்படையும் அமெரிக்கா மற்றும் சீனாவுடன் இந்த பிராந்திய ஆதிக்க போட்டியில் இணையும். அமெரிக்க கடற்படைக்கு தெற்கே ஜிபூட்டியில் தளங்கள் உள்ளன.அண்மையில் சூடான் வெளியுறவு அமைச்சர் அலி யூசுப் அகமது அல்-ஷெரிப் மாஸ்கோவிற்கு விஜயம் செய்தபோது இந்த அறிவிப்பு வந்தது. அங்கு அவர் தனது ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்தார். அவர்களின் சந்திப்பிற்குப் பிறகு, ரஷ்யாவின் கடற்படை தளத்தை நிறுவுவது குறித்து இரு நாடுகளும் “முழுமையான உடன்பாட்டில்” இருப்பதாகவும் எந்த தடைகளும் இல்லை என்றும் ஷெரீப் கூறினார்.
செங்கடல் முக்கியத்துவம்:
சூடானில் 2019 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அப்போதைய ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர், 2017 ஆம் ஆண்டு சோச்சிக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, ரஷ்யா தனது கடற்கரையில் ஒரு கடற்படை தளத்தை அமைக்க அனுமதிக்கும் யோசனையை சூடான் முதன்முதலில் முன்வைத்தது.
இதற்கு அமைவாக 2020 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி அணுசக்தியால் இயங்கும் கப்பல்கள் உட்பட நான்கு கடற்படைக் கப்பல்களை சூடானில் 25 ஆண்டுகளுக்கு ரஷ்யா வைத்திருக்க அனுமதித்ததாகக் கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் ஒரு வரைவு ஒப்பந்தம், தளங்கள் தளவாட நோக்கங்களுக்காகவும், தற்காப்பு நோக்கங்களுக்காகவும், மற்ற நாடுகளுக்கு எதிராக இலக்காகக் கொண்டவை அல்ல என்றும் கூறியது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடனான சந்திப்புக்குப் பிறகு, ஷெரீப் ஒரு புதிய ஒப்பந்தம் தேவையில்லை என்று கூறினார். ஏனெனில் ஒரு ஒப்பந்தம் 2020 இல் கையெழுத்தானது. இதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை, மேலும் இரு தரப்பினரும் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளதால் அது நிறைவேற வேண்டும் என்றும் கூறினார்.
வாக்னர் குழு RSF க்கு பின்னால்:
சூடானில் ஏப்ரல் 2023 இல் இராணுவத்திற்கும் துணை இராணுவ விரைவு ஆதரவுப்
படைகளுக்கும் இடையே தொடங்கிய உள்நாட்டுப் போர், ரஷ்யாவிற்கும் சூடானுக்கும் இடையிலான உறவுகளை சில காலம் சிக்கலாக்கியது.
படைகளுக்கும் இடையே தொடங்கிய உள்நாட்டுப் போர், ரஷ்யாவிற்கும் சூடானுக்கும் இடையிலான உறவுகளை சில காலம் சிக்கலாக்கியது.ஏனெனில் ரஷ்ய ஆதரவு பெற்ற வாக்னர் குழு RSF க்கு பின்னால் அதன் செயல்பாடுகளை செலுத்தி வந்தது. அதே நேரத்தில் கிரெம்ளின் சூடான் இராணுவத்தை ஆதரிப்பது போல் தோன்றியது.
இதனால் ரஷ்யா இரு தரப்பிலும் விளையாடியது என்று ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் சிந்தனைக் குழுவின் இணை உறுப்பினரும் ஆப்பிரிக்காவுடனான மாஸ்கோவின் ஈடுபாடுகள் குறித்த புத்தகத்தின் ஆசிரியருமான சாமுவேல் ரமணி கூறினார்.
வாக்னர் கூலிப்படை குழுவின் தலைவரான யெவ்ஜெனி பிரிகோஜின் இறந்ததிலிருந்து, கிரெம்ளின் சூடான் இராணுவத்துடன் அதிகமாக உறவுகளை ஆழப்படுத்தியுள்ளது என்று மேலும் கூறினார்.
கடந்த 2024 ஏப்ரல் மாதம், ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் மிகைல் போக்டனோவ், சூடானுக்கு விஜயம் செய்து, அதன் இராணுவத்திற்கு வரம்பு இல்லாத ஆதரவை உறுதியளித்தார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சூடானை ரஷ்யா ஆதரித்துள்ளது. அங்கு போர்நிறுத்தம் செய்யக் கோரும் தீர்மானத்தை அது நிராகரித்தது. இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாம்மி இந்த நடவடிக்கையை ஒரு அவமானம் என்று அழைத்தார்.
சூடான் இராணுவம் – RSF க்கு எதிரான போர்:
சமீபத்திய மாதங்களில் சூடானின் இராணுவம் RSF க்கு எதிரான தொடர்ச்சியான போர்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் அமெரிக்கா இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டிய துணை இராணுவக் குழுவின் மீது ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெறும் நம்பிக்கை அதிகரித்து வருகிறது.இவ்வருட ஜனவரி மாதம், சூடானின் இராணுவத் தலைவர் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் மீது நல்ல நம்பிக்கை பேச்சுவார்த்தைக்கு பதிலாக போரைத் தேர்ந்தெடுத்ததற்காக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது.
உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியின் நிலமாக சூடான் என்றும், உள்நாட்டில் இடம்பெயர்ந்த மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு என்றும், நாட்டின் சில பகுதிகளில் பஞ்சம் வெடித்திருக்கலாம் என்ற அச்சம் இருப்பதாகவும் உதவி அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஆனாலும் தற்போது சூடானில் ரஷ்ய கடற்படை தளம் அமைக்கும் திட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூடானில் ரஷ்ய கடற்படை தளம் அமைக்க அனுமதியின் முக்கிய காரணம், செங்கடல் கடல்வழி மூலோபாய முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.
உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 12% இதன் வழியாகவே செல்வதால், சூயஸ் கால்வாயை இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கும் இப்பிராந்தியத்தில் ரஷ்யா தனது ஆதிக்கத்தை செலுத்த விரும்புகிறது.

![]()