குட்டிப்பெண்… கவிதை… முல்லைஅமுதன்

புவனாவை எனக்குப் பிடித்துப்போயிற்று.
வீதி துடைத்துப் போகிற குட்டிப்பெண் அவள்..
சமயங்களில்
வானத்து நிலவைக் குடையாக்கித் தருவாள்.
கைக்குள் பிடித்து மகிழ்வேன்…
மழை வரும்..
மனதுள் அவள் குடையாகிக்கொள்வாள்.
நிறைய அவள் பற்றிப்பேசலாம்.
ஆனாலும்
பேசுவதற்கு என் மொழி போதவில்லை என்பதே உண்மை.
என் வீட்டுவாசலின் குப்பையைக் கூட
அவள்தான் தான் எடுத்துச் செல்கிறாள்.
சலிப்படைய மாட்டாளோ?
அவளின் பெயர் அறிய அதிக நாட்களாயிற்று.
அவளின் மேற்பார்வையாளர் பெயர் சொல்லி
கெட்ட வார்த்தைகளில்
பேசியபோதுதான் அவளின் பெயர் தெரிந்திருந்தது.
நாளை
அவள் வர வாய்ப்பில்லாமல் போகலாம்.
ஒன்றில் நான் இருக்கமாட்டேன்
அல்லது
அவளின் வரவு இல்லாதிருக்கலாம்.
அதற்குள்
வானத்து நட்சத்திரங்களையெல்லாம்
அகற்றிவிட்டு
நிலவை முழுமையாக்கியே செல்வாள்
என்பது அவளின் கண்களின் உத்தரவாதம்..
அனால்,
இன்றிரவு மகள் என்னை அவசர மருத்துவ
வண்டியில் ஏற்றிச் செல்வாள் என்பதோ/..
தெரு நுனையில் பெருவண்டியொன்று மோதிய அவலமோ
தெரிந்திருக்க நிலவுக்கு வாய்ப்பில்லை
முல்லைஅமுதன்
22.02/2025
![]()