பலதும் பத்தும்

வாழ்க காதலர்கள்….

அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துகள். காதலர் தினம் என்றவுடன் இப்பொழுது திருமணத்தை நோக்கி காதலித்துக் கொண்டிருப்பவர்களை மட்டும் கருத்தில் கொண்டதல்ல காதலர் தினம்.

இன்று தம்பதிகளாக பிள்ளை குட்டிகளுடன் பேரன் பேத்திகளுடன் வாழும் அனைவருமே காதலர்கள்தான்.இன்றைய சமகாலத்தில் காதலர்களுக்கு காதலிக்க கிடைத்த அனுமதி போல அன்றைய காதலர்களுக்குக் கிடைக்கவில்லை.

வேலியால் எட்டிப் பார்த்தும் சைக்கிள் மணிச் சிக்னல் கொடுத்து காதலியைப் பார்க்க வைத்தும்,,கோவில் வீதிகளில் இருட்டான இடத்தில் சந்தித்தும் முத்தங்கள் பரிமாறியும்,கோவில் காப்புக் கடையில் வாங்கிய காப்பை அவசரம் அவசரமாக போட்டுவிட்டும்,தனியத்தான் படத்துக்குப் போறன் அம்மா என்று தாய்க்குப் பொய் சொல்லிவிட்டுக் காதலன் ஒரு பஸ்ஸ்ராண்டில் ஏற, காதலி அம்மா நான் அவளோடை படத்துக்குப் போறன் என்று ஒருத்தியின் பெயரைச் சொல்லி இன்னொரு பஸ்ஸ்ராண்டில் ஏறிப் போய் தோழியின் ஆசீர்வாதத்துடன் அருகருகாக இருந்து படம் பார்த்ததையும்,காதலியின் அனுமதியுடனும் அனுமதிக்காத அனுமதியுடனும் தியேட்டரின் இருட்டுச் சூழலில் காதலியின் இடுப்பைக் கைகளால் சுற்றி வளைத்ததையும், தோழி அதைக் கண்டும் காணாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு எழுந்து அடுத்த கதிரையில் இருந்ததையும்.யாழ் ஐஸ்கிறீம் கடையில் தான் குடித்த ஐஸ் கிறீம் கப்பை காதலனிடம் குடிக்க கொடுக்க,நீங்கள் குடித்த ஐஸ் கிறீம் ருசியாக இருக்குது என்று சொல்லி ஐஸ்கிறீம் கடைக்காரனிட்டை அண்ணை இது வித்தியாசமான ருசியாக இருக்குதே என்று சொல்ல இப்ப அப்படித்தானிருக்கும் தம்பி என்று அவர் வெடிச் சிரிப்புச் சிரிக்க அதைக்கேட்டு இளம் ஜோடிகள் சிரிக்க ஆகா ஆகா அன்று எல்லா நாட்களும் காதலர் தினங்களே.

இப்படி இதையெல்லாம் காதலியாகி மனைவியானவளுக்கு சொல்லிச் சொல்லி மகிழுங்கள்,உங்களுக்கு வேறை வேலையே இல்லையா என மனைவி பொய்க் கோபத்துடன் பேசுவதையம் கேட்டு மகிழுங்கள்.

வாழ்க காதலர்கள் அனைவரும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button