பெண்மை…. கவிதை…. முத்தழகு கவியரசன், திருநெல்வேலி

ஐந்து மாதங்களாக
நான் மட்டும் இல்லை.
எனக்குள் இன்னொரு உயிர்.
என் விலா எலும்புகளுக்குள்
ஒரு சின்னஞ்சிறு பிரபஞ்சம்
உருவாகிக் கொண்டிருக்கிறது.
இரவு படுக்கும்போது,
அவர் – என் கணவர் –
மெல்ல என் வயிற்றில் காது வைக்கிறார்.
“என்ன கேட்குது?” என்று கேட்கிறேன்.
“நம்ம வீடு கட்டுற சத்தம்” என்கிறார்.
சிரித்துவிடுகிறேன்.
ஆனால் அது உண்மை தான் இல்லையா?
ஒரு உடலுக்குள் இன்னொரு உடல்
வீடு கட்டிக்கொள்கிறது.
சுவர் இல்லை, கூரை இல்லை,
என் ரத்தமும் சதையும் தான்
அதன் செங்கல்.
கல்யாணமான புதிதில்,
‘நீ என் உலகம்’ என்றார்.
இன்று அவர் நெற்றியில்
முத்தமிட்டு சொல்கிறேன்,
‘இனி நாம் இருவரும்
ஓர் உலகத்தின் உலகம்’.
தகப்பன் என்பது வெறும் உறவு இல்லை.
அது ஒரு மறுபிறப்பு.
என் வயிற்றில் குழந்தை அசையும்போது,
அவர் கண்களில் ஒரு பயம் தெரிகிறது.
பொறுப்பின் பயம்.
அன்பின் பயம்.
‘நான் நல்ல அப்பாவா இருப்பேனா ஜெயந்தி?’
என்று நேற்று கேட்டார்.
அவர் தோளைப் பிடித்துச் சொன்னேன்,
‘நீங்க இப்போதே அப்பா தான்.
குழந்தை பிறந்து தான்
தாயும் தந்தையும் உருவாகுவதில்லை.
கரு உருவான கணத்திலேயே
நாம் மறுபிறவி எடுத்துவிட்டோம்’.
சில நேரம் யோசிப்பேன்.
கடவுள் ஏன் பெண்ணுக்கு மட்டும்
இந்த வரத்தைக் கொடுத்தான்?
ஒருவேளை ஆணுக்கு
இந்த வலியைத் தாங்கும் சக்தி இல்லையோ?
இல்லை.
அவருக்கு வேறு வலி கொடுத்திருக்கிறான்.
காத்திருக்கும் வலி.
தொட்டுத் தழுவ முடியாமல்,
வெளியே இருந்து அன்பு செய்யும் வலி.
நான் வாந்தி எடுக்கும்போது
தண்ணீர் பிடித்துக் கொடுக்கிறார்.
நான் அழும்போது
காரணம் கேட்காமல் மடி கொடுக்கிறார்.
கை கால்களை
இதமாக பிடித்து விடுகிறார்.
நான் சுமக்கிறேன்.
அவர் என்னை சுமக்கிறார்.
இது தான் குடும்பம் என்பதோ?
ஐந்து மாதம்.
இன்னும் நான்கு மாதம் இருக்கிறது.
அதற்குள் நாங்கள் மூன்று பேர்.
இல்லை, நாங்கள் ஒருவர்.
அவரின் கண்,
என் சிரிப்பு,
இருவரின் கனவு எல்லாம் சேர்ந்து
ஒரு புது மலர்.
வெளியே வந்ததும்
அம்மலர் முதலில் பார்க்கப்போவது
என் முகத்தை அல்ல.
அவரின் முகத்தை.
ஒரு தகப்பன் தன் நகலை
முதன்முதலாக பார்க்கும் அந்த கணம்…
அந்த கணத்திற்காகத்தான்
இந்தப் பிரபஞ்சம் சுழல்கிறது போலும்.
என் வயிற்றில் வளர்வது
வெறும் குழந்தை இல்லை.
அது நானும் அவரும்
சேர்ந்து எழுதிய காவியம்.
ஒவ்வொரு உதையும் ஒரு வரி.
ஒவ்வொரு அசைவும்
ஒரு அத்தியாயம்.
பிரசவம் என்பது
முற்றுப்புள்ளி அல்ல.
அது தான்
எங்களின் வாழ்வில்
முதல் பக்கம்.

![]()