வடக்கு மீனவர்கள் பிரச்சினை தமிழ்க் கட்சிகளை உள்ளடக்கிய குழு

வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தமிழ்க் கட்சிகளை உள்ளடக்கிய குழுவொன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் வடக்கு மாகாண மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த குழுவை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சீறிதரன், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் , தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோகணேசன் ஆகியோரும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் கட்சிகளின் இன்னும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது இந்திய மீனவர்களின் வருகையால் வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் இருதரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.

இவ்வேளையில் இந்தப் பிரச்சினை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்புடன் கலந்துரையாடுவதற்கும் மீனவர் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காகவும் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய 12 பேர் கொண்ட குழுவொன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *