22 ஆவது திருத்தமானது சட்டத்தின் ஆட்சி மீது பெரும் மரண அடி

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தமானது அரசியல் மரணதண்டனையை நிறைவேற்றுபவரின் அரசியலமைப்புத் திருத்தமாகவேயுள்ளது . இத்திருத்தம் நீதிமன்ற சுயாதீனத்தின் மீதும், நீதியைப் பெற்றுக் கொடுக்கும் செயன்முறை மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதும் பெரும் மரண அடியைக் கொடுத்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமைஇடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தமானது ஒரு அரசியல் அலுக்கோசு திருத்தம். ஜனநாயகத்தை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம். இதனை ஒரு அரசியல் சூழ்ச்சி என்றும், அரசியலமைப்பு ரீதியான சூழ்ச்சி என்றும் அழைக்கலாம். 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தமானது அரசியல் மரணதண்டனையை நிறைவேற்றுபவரின் அரசியலமைப்புத் திருத்தமாகவேயுள்ளது எனவே, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நான் நிராகரிக்கின்றேன்.
“வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற கொள்கைப் பிரகடனத்தில் ஜனாதிபதி பதவியை ஒழிப்பதாக பிரஸ்தாபிக்கப்பட்ட போதிலும், தற்போதைய அரசாங்கம் நீதிமன்றத்திற்கு பெரும் மரண அடியை ஏற்படுத்தும் வேலைகளையே செய்து வருகின்றது.
இன்று உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்தும் பேசப்படுகின்றன.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எப்போதுமே சரியான மற்றும் வெளிப்படையான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. எதிர்காலத்திலும் அது மாறாது. இந்த கொடூரமான தாக்குதலின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரிகள் யார் என்பதை வெளிக்கொணர வேண்டும்.
உண்மையை வெளிக்கொணர்வதற்காக பக்கச்சார்பற்ற, வெளிப்படையான மற்றும் சர்வதேச நிபுணர்களை உள்ளடக்கிய விசாரணை நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும்
பாராளுமன்றத்திலும், வெளியேயும் கீழ்த்தரமான இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்தும், பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நான் ஏற்கனவே கருத்துக்களை தெரிவித்துள்ளேன். அவற்றை தான் ஒருபோதும் மறுக்கப்போவதில்லை. இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் மற்றும் அதன் பின்னணியில் திட்டங்களை வகுத்தவர்கள் குறித்த உண்மைகளை நாட்டுக்கு வெளிக்கொணர வேண்டும். இவர்களுக்கு பெற்றுக் கொடுக்கக் கூடிய அதிகபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.
![]()