முறையான பாதுகாப்பு மீளாய்வு இல்லை; தனது பாதுகாப்புக்காக நீதிமன்றை நாடிய மகிந்த
முறையான பாதுகாப்பு மீளாய்வு மேற்கொள்ளாமல் பாதுகாப்பு பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் வாபஸ் பெறப்பட்ட பாதுகாப்பு படையினரை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிடுமாறு கோரியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
முறையான பாதுகாப்பு மதிப்பீடு இன்றி தனது பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளை நீக்கிவிட்டு 60 உத்தியோகத்தர்களை மாத்திரம் பாதுகாப்பு குழுவில் இணைத்துள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச தனது சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தனது பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு உத்தியோகத்தர் எவரும் ஈடுபடுத்தப்படவில்லை எனவும் பொலிஸ் உத்தியோகத்தர்களே பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ச தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று தசாப்தங்களாக நீடித்த மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்து வந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தாம் வழிவகுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தனது மனுவில் கோரியுள்ளார்.
தமது பாதுகாப்பை தன்னிச்சையாக நீக்கியதன் மூலம் மனுதாரரின் அடிப்படை மனித உரிமைகளை பிரதிவாதிகள் மீறியுள்ளனர் என்ற தீர்ப்பை வழங்குமாறும் தமக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து மதிப்பாய்வு செய்ய, பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பாதுகாப்பு வழங்கியதாகவும் அதற்காக இராணுவம் மற்றும் கடற்படை வீரர்களுக்கு மேலதிகமாக 29 பொலிஸ் சாரதிகள் உள்ளிட்ட 180 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலும் பாதுகாப்பு மீளாய்வு நடவடிக்கையின் அடிப்படையிலும் அவரின் பாதுகாப்பு குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனடிப்படையில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டதுடன், மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குழுவிலிருந்து 116 பேர் நீக்கப்பட்டனர். தற்போது முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்காக மொத்தமாக 60 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, அதிகபட்சமாக நாளொன்றுக்கு 20 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
![]()