உள்ளூராட்சித் தேர்தலில் பொதுச் சின்னத்தில் ரணில்-சஜித் அணி இணைந்து போட்டி?

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயக்கம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தை விட்டும் ஐக்கிய மக்கள் சக்தி தொலைபேசி சின்னத்தை விட்டும் பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு கட்சிகளிடையே இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹர்சன ராஜகருண, மரிக்கார் மற்றும் சுஜீவ சேனசிங்க போன்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான உறுப்பினர்கள் பொதுத் தேர்தலில் இருகட்சிகளும் பொதுச் சின்னத்தில் போட்டியிடுவது சாத்தியமானலும் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களில் பொதுச் சின்னத்தில் போட்டியிடுவது ஐக்கிய மக்கள் சக்திக்கு பாதிப்பை ஏற்படுத்துமெனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை கட்சியாக முன்னேற வேண்டுமானால் ஏனைய கட்சிகளையும் குழுக்களையும் இணைத்துக்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லையென்றாலும் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் எந்த சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லையென ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களால் கடுமையான ஆலோசனை கட்சித் தலைமைக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வங்கிக் கொள்ளையர்கள், கார் திருடர்கள் மற்றும் கோடிக்கணக்கில் வரி செலுத்தாத திருடர்கள் மீண்டும் இந்தக் கட்சிக்குள் கொண்டுவரப்பட்டால், அது கட்சிக்கு பெரும் பேரழிவாக இருக்குமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், ஹரின், மனுச அல்லது ராஜித போன்றவர்களை இணைத்துக் கொள்வதற்கு எவ்வித எதிர்ப்பும் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *