இந்தியா

2026 தேர்தலுக்கு எஸ்.வி.சேகரை பயன்படுத்தினாலே போதும்

சென்னையில் நடிகர் எஸ்.வி சேகரின் நாடகப்பிரியா குழுவின் 50-ம் ஆண்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நாடகப்பிரியா அமைப்பின் நிறுவனத் தலைவர் எஸ்.வி.வெங்கட்ராமனின் நூற்றாண்டு விழா – நடிகர் எஸ்.வி.சேகரின் ஏழாயிரமாவது நாடக விழாவில் பங்கெடுத்து வாழ்த்துச் சொல்லக்கூடிய அல்லது சில நிமிடங்கள் உரையாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்திருக்கக்கூடிய நம்முடைய சேகர் அவர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரும் பேசும்போது நம்முடைய முதல்-அமைச்சர், நம்முடைய முதல்-அமைச்சர் என்று சொன்னார். அதனால், நம்முடைய சேகர், நம்முடைய சேகர் என்று நானும் சொல்கிறேன்.நூற்றாண்டு விழா காணக்கூடிய எஸ்.வி.வெங்கட்ராமனை பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கே வந்திருக்கக்கூடியவர்கள் பலர் அவரைப் பற்றி முழுமையாக அறிந்திருக்கக்கூடியவர்கள். நாடக உலகில் கொடி கட்டிப் பறந்தவராக விளங்கியவர்.

புகழ்மாலைகள் சூடக்கூடிய அளவிற்கு சாதனைகளை செய்திருக்கக்கூடிய காரணத்தால்தான், இன்றைக்கு நூற்றாண்டு விழாவை இவ்வளவு சிறப்போடு, எழுச்சியோடு நாம் இங்கே கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.நம்முடைய எஸ்.வி.சேகர் ஓரிரு மாதங்களுக்கு முன்பு, என்னைப் பார்க்கவேண்டும் என்று என்னிடத்தில் தேதி கேட்டு, அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார்கள். அங்கே என்னிடத்தில் ஒரு கோரிக்கையை வைத்தார். கோரிக்கை என்று சொல்லமாட்டேன், ஒரு உத்தரவை என்னிடத்தில் வைத்தார்.

அவர் உத்தரவை என்னால் மீறமுடியவில்லை. அதனால்தான் இன்றைக்கு இந்த நிகழ்ச்சிக்கு நான் மகிழ்ச்சியுடன் வந்திருக்கிறேன்; நன்றியோடு வந்திருக்கிறேன். ஏனென்றால், நம்முடைய எஸ்.வி.சேகர் அவர்கள் எங்கிருந்தாலும், எந்தக் கட்சியில் இருந்தாலும், இப்போது எந்தக் கட்சி என்று தெரியாது; நம்ம கட்சி; ஏனென்றால், தலைவர் சொல்வார், நான் என்றால் உதடு ஒட்டாது. நாம் என்றால் தான் உதடுகள் ஒட்டும். அதனால்தான் இன்றைக்கு நானும் இங்கு மகிழ்ச்சியோடு வந்திருக்கிறேன்.

எஸ்.வி.சேகர் தன்னுடைய தந்தையாரைப் போலவே, கலையுலகச் சேவை ஆற்றியவர், ஆற்றிக் கொண்டிருக்கக்கூடியவர். தொடர்ந்து ஆற்றப்போகிறவர். அதனால்தான், இன்றைக்கு அவரை வாழ்த்த நாமெல்லாம் இங்கே கூடியிருக்கிறோம்! எஸ்.வி.சேகர் விழாவில் இந்த மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதில் யாரும் ஆச்சரியப்பட வேண்டிய அவசியமில்லை. யாரும் வியப்படையவும் தேவையில்லை. நம்முடைய எஸ்.வி.சேகர் அவர்களை பொறுத்தவரைக்கும், இதுவரை 25 நாடகங்கள் எழுதி, அவற்றை ஏழாயிரம் முறை அரங்கேற்றி இருக்கிறார். இன்றைக்கு ஏழாயிரமாவது நாடக விழாவை நடத்திக் கொண்டிருக்கிறார்.இதற்கு முன்னால், 3,500-வது நாடக விழாவையும், அதற்குப் பிறகு 5 ஆயிரத்தி 600-வது நாடக விழாவையும் முத்தமிழறிஞர் கலைஞரை அழைத்துத்தான் அவர் நடத்தியிருக்கிறார்.

இன்றைக்கு ஏழாயிரமாவது நாடகத்தை அவருடைய மகன் ஸ்டாலினை அழைத்து நடத்திக் கொண்டிருக்கிறார். கலைஞர் மேலேயும், என் மேலேயும் அளவு கடந்த பாசமுடையவர் நம்முடைய எஸ்.வி.சேகர் அவர்கள். பாசம் என்றால், அது அரசியல் பாசம் அல்ல; கலைப் பாசம் அதுதான் முக்கியம். இந்தக் கலைப் பாசம் காலத்தால் அழியாதது. அழிக்க முடியவே முடியாது. இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், எஸ்.வி.சேகர் அவர்களும் எங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர் தான். எங்கள் குடும்பம் என்றால் கலைக் குடும்பம். அவர் நடத்திய நாடகத்தின் தலைப்பு அதிர்ஷ்டக்காரன். இப்போது மூன்றாவது முறையாக விழா நடத்தி ஹாட்ரிக் அடித்த அதிர்ஷ்ட்க்காரன் அவர்.

அவருக்கு அதிர்ஷ்டத்தின் மேல் எவ்வளவு நம்பிக்கை இருக்கிறதோ, அதைபோல என்னைப் பொறுத்தவரைக்கும் உழைப்பின் மீது எனக்கு நம்பிக்கை அதிகம் உண்டு; இங்கு பேசும்போது அவரே சொன்னார்.கலைஞர் மேல் எஸ்.வி.சேகர் அவர்களுக்கு மதிப்புண்டு; பாசமுண்டு. பற்றுண்டு. அதேபோல, எஸ்.வி.சேகர் மீது கலைஞருக்கும் பற்றுண்டு, பாசமுண்டு, மதிப்புண்டு. ஏனென்றால், பல நேரங்களில் பார்த்திருக்கிறேன். அவர் வீட்டிற்கு வரும்போதெல்லாம் அப்பாயிண்ட்மென்ட் ஏற்கனவே கொடுத்து காத்திருக்கவர்களை எல்லாம் உட்கார வைத்துவிட்டு, எஸ்.வி.சேகர் வந்துவிட்டார் என்றால் அவரை தான் அழைத்துப் பேசுவார்.

அதேபோல, சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கும் போது கூட, அவர் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், அவர் பெட்டிஷனையோ, மனுவையோ கொண்டு வந்து தலைவரிடத்தில் வழங்கும்போது, அதை புன்சிரிப்போடு வாங்கிக்கொண்டு உடனே தன்னுடைய உதவியாளரை அழைத்து, அதை உடனே செய்து கொடுங்கள்; அதை என்னவென்று பாருங்கள் என்று உத்தரவிடுவார். அந்த நேரத்தில் எங்களுக்கெல்லாம் கோபம் வரும். காரணம், அந்த அளவிற்கு பற்றும், பாசமும் அவர்மேல் உண்டு.இன்றைக்கு தலைவர் கலைஞர் அவர்கள் நம்மோடு இல்லை என்று சொன்னாலும், அவர் மீதான பாசவுணர்வோடு தான் இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன்; கருதுகிறேன்.

அதுதான் உறுதி. கட்சிகள் மாறும்போது, கொடிகளின் நிறம் மாறலாம்; ஆனால் மனிதருடைய நிறங்கள் மாறக்கூடாது, அதற்கு உதாரணமாக நம்முடைய எஸ்.வி.சேகரை தைரியமாக நாம் சொல்லமுடியும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், எந்தக் கட்சியில் அவர் இருந்தாலும், துணிச்சலாக எதையும் எடுத்துச் சொல்லக்கூடிய, விமர்சனம் செய்யக்கூடிய ஆற்றல் அவருக்கு உண்டு.இப்போது கூட யாரை பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.

இந்த நாடகத்தில் சில காட்சிகளை பார்த்தோம். இதையெல்லாம் பார்க்கின்றபோது, 2026 தேர்தலுக்கு இவரை பயன்படுத்திக் கொண்டால் போதும். வேறும் ஒன்றும் தேவையில்லை. எஸ்.வி.சேகர் நாடகத்தில் மட்டும் அல்ல, நேரிலும் எல்லோரையும் சிரிக்க வைக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றவர். எம்.எல்.ஏ-வாக இருக்கும் போது அங்கிருக்கும் சட்டமன்ற உறுப்பினர் எல்லோரையும் சிரிக்க வைப்பார். அவர் உள்ளத்தில் கலைஞர் இருப்பது என்னை பெரிதும் கவர்ந்த ஒன்றாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button