50 இலட்சம் ரூபா கப்பம் கோரி மாணவி கடத்தல்
கண்டி,தவுலகல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் 19 வயது மகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தவுலகல மற்றும் கம்பளை பொலிஸ் நிலையங்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
உயர்தரப் வகுப்பிற்கான தனியார் பாடசாலை வகுப்பிற்காக தனது நண்பி ஒருவருடன் தவுலகல நகருக்கு சென்று கொண்டிருந்த போது, நேற்று முன்தினம் சனிக்கிழமை (11) காலை 7.15 மணியளவில் கறுப்பு நிற வேனில் வந்த சிலர் இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளனர்.
மாணவியை கடத்திச் சென்று மறைத்து வைத்த இளைஞன் முதலில் 50 இலட்சம் ரூபாவை கப்பம் கோரிய பின்னர் அதனை பின்னர் 30 இலட்சமாக குறைத்துள்ளார்.
அதன் பின்னர் மாணவியின் தந்தைக்கு சொந்தமான வேனைக் கேட்டு, 2 இலட்சம் ரூபா வங்கியில் வரவு வைக்குமாறு கூறியுள்ள நிலையில் அதற்கு பதிலளித்த மாணவியின் தந்தை 50,000 ரூபாவை உரிய கணக்கில் வரவு வைத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இந்தக் கடத்தலை நடத்தியவர் மாணவியின் மைத்துனர் என தகவல் வெளியாகியுள்ளது.
முஸ்லிம் மாணவியான இவர் பாடசாலை சீருடை அணிந்து தனது தோழியுடன் வகுப்புக்கு சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த வேனில் இருந்து கீழே இறங்கிய உறவினர் அந்த மாணவியை வலுக் கட்டாயமாக இழுத்து வேனில் ஏற்றியமை .சி.சி. ரீ. வி கமராக்களில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
பயந்துபோன மற்ற மாணவி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
அப்போது, மாணவியை காப்பாற்றுவதற்காக வந்த வாலிபர் ஒருவர் வேனில் தொங்கிக் கொண்டு சுமார் 500 மீற்றர் தூரம் சென்று அவரைக் காப்பாற்ற,முயற்சித்த போதிலும் கடத்தல்காரர் அவரை அடித்து கீழே வீழ்த்தியுள்ளார்.
பாட்சாலை ஆசிரியர் ஒருவர் அருகில் இருந்த மோட்டார் சைக்கிளில் வேனை சுமார் 20 கிலோ மீற்றர் தூரம் துரத்திச் சென்றுள்ளார் எனவும் கட்டுகஸ்தோட்டை நகரில் வைத்து அவர் வேனை தவறவிட்டதாகவும், பின்னர் பொலனறுவை நகருக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த வேனை பொலிஸார் நேற்று முன்தினம் (11) பிற்பகல் கைப்பற்றியுள்ளனர்.
கார் வாடகைக்கு விடப்பட்ட இடத்தில் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருந்ததால் அதன் மூலம் வேனைக் கண்டுபிடிப்பது எளிதாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மாணவி கடத்தப்பட்ட போது வேனை ஓட்டிச் சென்றவர் பொலனறுவையில் வேனை கைவிட்டு வீடு திரும்பும் போது தவுலாகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்தொன்பது வயதுடைய மாணவி, சந்தேக நபரின் தாயின் சகோதரரின் மகள் எனவும், அவருக்கு மகளை திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர், ஜப்பானில் சில காலமாக தொழில் செய்து வருவதாகவும் சந்தேக நபர் மீது மாணவி தரப்பில் விருப்பமில்லாத நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியை கண்டுபிடித்த பின்னரே அவர் மூலம் பெறும் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த அனைத்து விவகாரங்கள் குறித்தும் தெளிவான தகவல்களை வெளியிட முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலனறுவை பிரதேசத்தில் இந்த மாணவியை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் கையடக்கத் தொலைபேசியில் செய்த அழைப்புகள் தொடர்பிலான தொலைபேசி டவர் ஊடாக சந்தேகநபர் இருக்கும் பகுதியை கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் கண்டி பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் பணிப்புரையின் பேரில் தவுலாகல மற்றும் கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
![]()