முச்சந்தி

சீனாவின் சட்டவிரோத நில அபகரிப்பு: இந்திய லடாக் பகுதிகள் ஆக்கிரமிப்பு!…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(சீனா சட்டவிரோதமாக லடாக் பகுதிகளை அபகரித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என இந்தியா தெரிவித்துள்ளது. லடாக்கில் ஆக்கிரமித்த பகுதிகளில் புதிதாக இரு மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பான அறிவிப்பை சீனா வெளியிட்டுள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது)
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நெடுங்காலமாக எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் மீது சீனா தொடர்ந்து உரிமை கோரி வருகிறது.
சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு :
இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்தின் வடமேற்கில் அக்சாய் சின் (Aksai Chin) என்ற நிலப்பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதி யாருக்கு சொந்தம் என்பதில் நீண்ட காலமாக சர்ச்சை நீடித்து வருகிறது. இந்திய அரசால் உரிமை கோரப்படும் இந்தப் பகுதி, தற்போது சீனா ஆக்கிரமித்துள்ளது. மேலும் இதன் வழியாக சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தையும், திபெத்தையும் இணைக்கும் சாலையை சீன அரசு அமைத்துள்ளது.
இந்த நிலையில் இப்பகுதியை He’an County மற்றும் Hekang County என சீன அரசு குறிப்பிட்டு, இரண்டு புதிய மாவட்டங்களாக அறிவித்துள்ளது. இந்த இரண்டு மாவட்டங்களும் சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் இந்த அறிவிப்புக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2021இல் அருணாச்சல பிரதேசத்தில் சுமார் 101 வீடுகளைக் கொண்ட ஒரு புதிய கிராமத்தை சீனா உருவாக்கியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அடுத்து 2023ஆம் ஆண்டு, சீனா புதிய வரைபடம் ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அந்த வரைபடத்தில், ஆக்கிரமிப்பில் வைத்திருக்கும் இந்தியப் பகுதிகளை ’அக்‌ஷயா சின்’ எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்திய இறையாண்மை மீறல்:
இந்தியப் பிரதேசத்தில் சீனா சட்ட விரோதமாக ஆக்கிரமித்ததை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. சீனாவின் ஹோடன் மாகாணத்தில் இரண்டு புதிய மாவட்டங்களை நிறுவுவது தொடர்பான அறிவிப்பை இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த மாவட்டங்கள் என்று அழைக்கப்படும் பகுதிகளின் அதிகார வரம்பு இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்தில் வருகிறது என வெளியுறவுத்துறை தொர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பிரம்மபுத்திரா ஆற்றில் உலகப் பெரிய அணை கட்ட இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. இது தொடர்பான இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறத. இந்நிய நலனை காக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தெற்கு திபெத்:
அத்துடன் அருணாச்சல பிரதேச மாநிலத்தை, ‘தெற்கு திபெத்’ எனவும் சீனா குறிப்பிட்டிருந்தது. மேலும் கடந்த ஆண்டில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள முப்பது இடங்களுக்கு சீன மொழிப்பெயர்களை சீன அரசு சூட்டியிருந்தது.
இது தவிர இந்திய எல்லைப் பகுதிகளில் சுரங்கங்கள், பாலங்கள் மற்றும் பதுங்கு குழிகளை அதிகளவில் சீனா உருவாக்கி வருகிறது. மேலும், இந்திய எல்லையையொட்டி தனது ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே பல கோடி ரூபாய் செலவில் உலகின் மிகப்பெரிய அணையை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், லடாக்கில் ஆக்கிரமித்த பகுதிகளில் எல்லையில் ஹெலிகாப்டர் தளம் அமைப்பதை படம்பிடித்த செயற்கைக்கோள் புகைப்படங்களை இந்திய ராணுவம் உற்றுநோக்கி வருகிறது.
இந்திய பகுதியை சட்டவிரோதமாக சீனா ஆக்கிரமித்ததை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. சீனா அறிவித்துள்ள இரு புதிய மாவட்டங்கள் இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில் வருகின்றன என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
புதிய மாவட்டங்களை உருவாக்குவதன் மூலம் குறிப்பிட்ட பகுதியின் மீதான இந்தியாவின் இறையாண்மை தொடர்பான நீண்டகால நிலைப்பாட்டை மாற்ற முடியாது. இந்தச் செயல் சீனாவின் சட்டவிரோத மற்றும் வலுக்கட்டாய ஆக்கிரமிப்புக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்காது. நாங்கள் தூதரக வழிகள் மூலம் சீன தரப்பிற்கு கண்டனத்தை தெரிவித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரம்மபுத்திரா நதியில் சீன அணை:
பிரம்மபுத்திரா நதியில் பாரிய அணை கட்டும் சீனாவின் திட்டம் வட கிழக்கு பிராந்தியத்தில் இந்திய நலன்களை சீர்குலைத்து அழிவை ஏற்படுத்தும். இது மிக மோசமான எதிர்வினையை வெளியுறவுக் கொள்கையில் ஏற்படுத்தும் என்று இந்திய அரசு எச்சரித்துள்ளது. சீனாவின் இத்தகைய சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்றும் தெரிவித்துள்ளது.
உலகின் மிக நீளமான நதிகளில் பிரம்மபுத்திரா 15வது இடத்திலும் அதிக தண்ணீர் பாயும் நதிகளின் பட்டியலில் 9வது இடத்திலும் இருக்கிறது. இந்த நதியின் மொத்த நீளம் 2,880 கி.மீ. ஆகும். சீனாவின் திபெத் பகுதியில் 1,625 கி.மீ., இந்தியாவில் 918, வங்கதேசத்தில் 337 கி.மீ. தொலைவு பிரம்மபுத்திரா பாய்கிறது. சீனாவின் திபெத் பகுதியில் பிரம்மபுத்திரா நதியின் பெயர் யார்லங் சாங்போ என்று அழைக்கப்படுகிறது.
இந்த நதியில் புதிய அணையை கட்ட சீன அரசு மிக நீண்ட காலமாக திட்டமிட்டு இருந்தது. தற்போது யார்லங் சாங்போ நதியில் ரூ.12 லட்சம் கோடி செலவில் உலகின் மிகப் பெரிய அணையை கட்ட சீன அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த அணையில் 60,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
பிரம்மபுத்திரா நதியில் சீன அரசு மிகப் பெரிய அணையை கட்டுவது இந்தியாவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. திபெத்தில் உற்பத்தியாகும் மேக்கொங் ஆற்றில் சீன அரசு ஏற்கெனவே பல அணைகளை கட்டி வைத்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டில் இந்த அணைகளில் சீன அரசு அளவுக்கு அதிகமாக தண்ணீரை தேக்கியது. இதனால் மேக்கொங் ஆறு பாயும் தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் பகுதிகளில் ஆறு வறண்டது. கடந்த 2019-ம் ஆண்டில் அந்த நாடுகளில் மிகப் பெரிய வறட்சி ஏற்பட்டது.
பிரம்மபுத்திரா நதியின் மூலம் இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மேற்குவங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் வளம் அடைந்து வருகின்றன. சீனா கட்டும் புதிய அணையால் இந்திய மாநிலங்களில் வறட்சி பாதிப்பு ஏற்படக்கூடும். இமயமலை பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. சீனா அணை கட்டும் இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு அணையில் உடைப்பு ஏற்பட்டால் மிகப் பெரிய பேரழிவு ஏற்படும்.
இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே பதற்றம் ஏற்படும்போது அணையில் இருந்து அதிக தண்ணீரை திறந்துவிட்டு இந்திய பகுதிகளில் வெள்ள பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் இருக்கிறது.
ஏற்கெனவே கங்கை நதியின் நீர்வரத்தை கட்டுப்படுத்தும் வகையில் திபெத்தின் மப்ஜா சாங்போ நதியில் புதிய அணையை சீன அரசு கட்டி வருகிறது. இந்த அணை உத்தராகண்ட் மாநில எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்தியாவின் இரு பிரதான அணைகளின் நீர்வரத்தை கட்டுப்படுத்தும் வகையில் சீனா செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று சர்வதேச நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button