26 வலைகளை அறுத்தெறிந்த இந்திய இழுவைப் படகுகள்; யாழ். சுழிபுரம் மீனவர் பெரும் சோகத்தில் 

இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டமையால் யாழ்ப்பாணம் – சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி மீனவர் ஒருவரின் 7 இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் இரவு இந்த மீனவர் திருவடி நிலை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகுகள் அவரது வலைகளை அறுத்துள்ளன.

இதனால் அவரிடமிருந்த 32 வலைகளில் 26 வலைகள் அறுக்கப்பட்ட நிலையில் 6 வலைகளே மீதமாகின. எஞ்சிய வலைகளும் சேதமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன.

இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவர் தெரிவிக்கையில்,

நேற்றிரவு(புதன்) 10 மணியளவில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய ரோலர்கள் எமது வலையை மட்டுமல்லாமல் வேறு சங்கங்களின் வலைகளையும் அறுத்துள்ளன.

தற்போது மீன்பிடி பருவ காலம். இந்திய இழுவைப் படகுகளின் இதுபோன்ற செயற்பாடுகளால் நாங்கள் உழைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஏழு இலட்சம் ரூபா வங்கியில் கடன் பெற்றே இந்த வலை முதல்களை உருவாக்கி கடலில் தொழில் செய்தேன். எனது வலைகளை இந்திய இழுவைப் படகு அறுத்துச் சென்றதால் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வேன்? வங்கிக் கடனை செலுத்த என்ன செய்வேன் என்று தெரியாமல் தவிக்கிறேன்.

புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி பல நல்ல வேலைத் திட்டங்களை செய்கிறார். அதுபோல இந்திய மீனவர்கள் பிரச்சினையையும் தீர்த்து வையுங்கள். புதிதாக வந்த அமைச்சர் இதற்கு ஒரு தீர்க்கமான முடிவெடுத்து இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

அரசாங்கம் எனக்கு இழப்பீட்டை வழங்கி, நான் மீண்டும் தொழில் செய்ய வழிவகுக்க வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *