அலங்காரங்களுடன் சேவையிலீடுபடும் 50,000 ஆட்டோக்களை ‘கிளீன் ஸ்ரீலங்கா’பாதிக்குமா?
நாடு முழுவதும் சுமார் 40,000 – 50,000 வரையான முச்சக்கர வண்டிகள் துணைக் கருவிகளுடன் அலங்காரப்படுத்தப்பட்டு இயங்கி வருவதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முச்சக்கர வண்டிகளில் துணைக்கருவிகள் பொருத்துவதற்கு மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவித்த அதன் தலைவர் சுதில் ஜெய்ருக், எவ்வாறாயினும் முச்சக்கர வண்டிகளில் இருந்து சில பாகங்களை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உபகரணங்களால் விபத்துக்கள் ஏற்பட்டமைக்கான தகவல்கள் எதுவும் இல்லை. அதிக வேகம் மற்றும் வேறு வாகனங்களுடன் மோதுதல் என்பவற்றால் அதிக விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன என சுதில் ஜெய்ருக் தெரிவித்தார்.
முச்சக்கர வண்டிகளில் அலங்காரத்துக்காக பொருத்தப்பட்டுள்ள கருவிகளால் விபத்துக்கள் ஏற்பட்டதாக பொலிஸ் தரவுகளும் இல்லை என்றாலும் சில வாகனங்கள் தேவையில்லாத அதிக சத்தங்களுடன் இயங்குவதையும் அவதானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் மூலம் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பாகங்கள் குறித்து நாட்டில் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதன்போது பஸ்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் அலங்காரத்துக்காக மேலதிகமாக பொருத்தப்பட்டுள்ள கருவிகளை அகற்றும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.
ஆனால், தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தமையால், பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள துணைக்கருவிகளை அகற்ற நேற்று முன்தினம் புதன்கிழமை முதல் மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தனது துறையின் முறையான அனுமதியின்றி எந்தவொரு வாகனத்தின் அலங்காரத்திலும் மாற்றம் செய்ய சட்டப்பூர்வ அனுமதி இல்லை என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
வீதியில் பயணிக்கும் மக்களுக்கும், அந்தந்த வாகனத்தில் பயணிக்கும் பயணிகளுக்கும் அசௌகரியமோ, ஆபத்தோ ஏற்படாத வகையில், இவ்வாறான அலங்காரங்களைச் செய்வதற்கு தற்போது தொடர் ஒழுங்குமுறைகள் தயாரிக்கப்பட்டு வருவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பஸ்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மாத்திரமே இவ்வாறான விதிமுறைகள் தொடராக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய வாகனங்களுக்கு அவ்வாறான விதிமுறைகள் எதுவும் தயாரிக்கப்படவில்லை எனவும் எதிர்காலத்தில் அந்த வாகனங்களுக்கு அலங்காரம் தொடர்பான தொடர் விதிமுறைகள் தயாரிக்கப்படும் எனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
![]()