நிறுத்தப்பட்டுள்ள யாழ்.- கொழும்பு ரயில் சேவைகளை மீள ஆரம்பிக்கவும்
கொழும்பு – யாழ்ப்பாணம் இடையே நிறுத்தப்பட்டுள்ள ரயில் சேவைகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என்பதுடன், அந்த சேவைககளை கல்கிசை முதல் ஆரம்பிக்கக் கூடியவாறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவிக்கையில்,
மருந்து விநியோக சேவைகளுக்கான நேர்முகத் தேர்வுக்கு பலரும் அழைக்கப்பட்டுள்ளனர். அதில் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியல் இருக்கின்ற போதும் இதுவரையில் நியமனங்கள் நடக்கவில்லை. வடக்கு மாகாணத்தில் 40 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. ஆனால் வெளியிடங்களை சேர்ந்தோர் அழைக்கப்படுகின்றனர். எனினும் நேர் முகத் தேர்வில் தோற்றியவர்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். இதனால் மருத்துவ சேவைகளிலும் குறைபாடுகள் ஏற்படுகின்றன.
அடுத்ததாக கொழும்பு – யாழ். ரயில் சேவை விடயம் தொடர்பிலும் சுட்டிக்காட்ட எதிர்பார்க்கின்றேன். இந்திய நிதி உதவியில் தண்டவாள புணரமைப்பு நடக்கின்றன. தினசரி கொழும்பு – யாழ். இடையே நான்கு ரயில் சேவைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் அநுராதபுரம் முதல் வவுனியா வரையில் தண்டவாள புணரமைப்பு பணி காரணமாக அந்த ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. அந்த நான்கு சேவைகளில் இரண்டு சேவைகள் கிழக்கு மாகாணத்திற்கென பயன்படுத்தப்பட்ட போதும் யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் கொண்டுவரப்படவில்லை. தற்போது யாழ்ப்பாணத்திற்கு ஒரு ரயில் சேவையே உள்ளது. அத்துடன் அதிவேக ரயில் சேவை சனி மற்றும் ஞாயிறு தினங்களிலேயே நடக்கின்றன. இது எமக்கு போதுமானது அல்ல. நான்கு சேவைகள் நடக்க வேண்டிய இடத்தில் இரண்டு சேவைகளே நடக்கின்றன. இந்த விடயம் தொடர்பில் ரயில்வே திணைக்களமும் பொறுப்புள்ள அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேவேளை யாழ்ப்பாண ரயில் சேவை கொழும்பு வரையிலேயே நடக்கின்றன. கல்கிசை வரையில் நடத்தப்பட வேண்டும் என்பதுடன் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி ரயில் நிலையங்களில் நிறுத்தக் கூடியவாறும் சேவைகள் நடத்தப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்கின்றேன் என்றார்.
![]()