பல நாடுகளிலுள்ள மிக உன்னதமான அரசியல் தீர்வான சமஷ்டிக்கு அமெரிக்கா எமக்கு உதவ வேண்டும்

உலகின் பல நாடுகளில் இருக்கின்ற மிக உன்னதமான அரசியல் தீர்வாக பார்க்கப்படும் சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வுக்காகவே தமிழ் மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் கோரி நிற்கும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு என்பது நாட்டை பிரிக்கும் நோக்கம் கொண்டதல்ல. எனவே புதிய ஆட்சியாளர்கள் ஒரு அரசியல் சாசனத்தை கொண்டுவரும்பொழுது அதில் இணைந்த வடக்கு – கிழக்கில் அர்த்தபுஷ்டியான -கௌரவமான -நீடித்து நிலைத்துநிற்கக்கூடிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டுமென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் மற்றும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தலைமையில் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

மேற்படி சந்திப்பில் பேசும்போதே தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்படி விடயத்தை ஒரே குரலில் எடுத்துக் கூறியுள்ளனர்.

இந்த சந்திப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவிக்கையில்;

புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்கப் போவதாக ஆட்சியாளர்கள் கூறி வருகிறார்கள். அவ்வாறு ஒரு அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டால் அதில் இணைந்த வடக்கு – கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்பதே எங்களுடைய எதிர்பார்ப்பும் கோரிக்கையும் ஆகும். நாங்கள் கோரி நிற்கும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு என்பது நாட்டை பிரிக்கும் நோக்கம் கொண்டதல்ல. உலகின் பல நாடுகளில் இருக்கின்ற மிக உன்னதமான அதிகாரப் பகிர்வு இந்த சமஷ்டி முறைமையாகும். ஆகவே,ஒரே நாட்டுக்குள் ஒற்றுமையாக, இனங்களுக்கிடையில் ஒற்றுமை பலப்பட்டு சுதந்திரமாக அனைத்து இன மக்களும் வாழ வேண்டுமாகவிருந்தால் சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று அவசியமாகும். அந்த அடிப்படையில் புதிய அரசியல் சாசனம் ஒன்று நாட்டில் உருவாகும்பொழுது மேற்படி தீர்வொன்றுக்கு அரசாங்கம் நகர்வதற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கவேண்டுமென எடுத்துக் கூறினோம்.

அதேபோல்,பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அமெரிக்காதான் ஜெனீவாவில் ஒரு தீர்மானத்தை கொண்டுவந்திருந்தது. ஆனால்,அத்தீர்மானம் அடுத்த கட்டத்துக்கு நகராமல் இருப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் பின்னடைவாக.எனவே ஜெனீவா தீர்மானத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கு அமெரிக்கா கூடியளவில் கரிசனை கொள்ளவேண்டும் என்றும் தூதுவரிடம் எடுத்துக்கூறினோம்.

70 வருடங்களாக மாறி மாறி வந்த அரசுகளினால் துன்பங்களை அனுபவித்த இனமாக தமிழர்கள் இருக்கிறார்கள். நாங்கள் (தமிழர்கள்) தான் பசியோடு இருக்கின்றோம்.ஏற்கனவே ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களுடன் பேசி – பேசி தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வந்துள்ளோம். ஆகவே தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்பது சமஷ்டி அடிப்படையிலான தீர்வாக இருக்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அதேபோல் வழங்கப்படும் அதிகாரங்கள் மீளப்பறிக்கப்பட கூடாததாக இருக்கவேண்டும். அவ்வாறானதொரு தீர்வு ஏற்படும்பொழுதுதான் இந்த நாட்டில் அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக-சுதந்திரமாக வாழும் சூழல் ஏற்படும்.இதற்கு பல நாடுகள் உதாரணங்களாக இருக்கின்றன என்பதனையும் தூதுவரிடத்தில் சுட்டிக்காட்டினோம்.

அர்த்தபுஷ்டியான -கௌரவமான -நீடித்து நிலைத்துநிற்கக்கூடிய அரசியல் தீர்வு என்பது உலகத்தில் சமஷ்டி அடிப்படையில்தான் பகிரப்பட்டிருக்கிறது. ஆகவே தமிழர்களுக்கும் அந்த அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டுமென்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.அதற்கு அமெரிக்காவும் இயன்ற ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டோம் என சிறீதரன் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *